எங்களை மரத்திலிருந்து இறக்கிவிட்டான் மனிதன் – சிங்கவால் குரங்கு

Spread the love

சோலைமந்தியும் நானும்…

எங்களை,
மரத்திலிருந்து இறக்கிவிட்டான் மனிதன்”…
– சிங்கவால் குரங்கு என்கிற சோலைமந்தி.

ஒருகாலத்தில் மேற்குதொடர்ச்சி மலை முழுவதுமே பரவி வாழ்ந்த ஒரு குரங்கினம் இன்று சில இடங்களில் மட்டுமே தமது வாழிடம் உணவிற்காக தட்டுத்தடுமாறியபடி போராடிக் கொண்டிருக்கிறது…

சங்ககாலத்தில், “நரைமுக ஊகம்” என்றழைக்கப்பட்ட ஒரு விலங்கை, அதன் வாலின் அமைப்பை குறிக்கும் வகையில் “சிங்கவால் குரங்கு” என, அதன் ஆங்கிலபெயரான Lion tailed macaque என்கிற பத்ததிருந்து நேரடியாக மொழிபெயர்த்துத்துத்தான் சொல்லி வருகிறோம். அதன் தமிழ்ப்பெயரை இன்றைக்கு, பெரும்பாலான தமிழ்பேசுகிற நபர்களுக்கு தெரியாது. அதில் ஊடகத்தினரும் அடங்குவர்…

இவை மழைக்காடுகளான அடர்ந்த சோலைக்காடுகளில் வாழ்வதால் தமிழில் இவற்றிற்கு அழகாக “சோலைமந்தி” என்கிற பெயர் உண்டு….

இந்த சோலைமந்திகள் உயர்ந்த மரச்சிவிகைகளில்
(canoby) மட்டுமே வாழும் தன்மையைக் கொண்டவை. அரிதாகவே கீழே இறங்கிவருபவை. ஆனால், இன்று இவற்றின் வாழ்க்கைநிலையானது, குறிப்பாக வால்பாறைபகுதிகளில் மிக மோசமாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்…

இங்கு தவிர, உலகில் வேறெங்கும் காணமுடியாத, அளவற்ற ஓரிடவாழ்விகள் (Endemic Species) நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பல கோடி ஆண்டுகளாக வாழ்கின்றன…

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் எண்ணற்ற ஓரிடவாழ்விகளில் சிங்கவால் குரங்கும் ஒன்று. இதை இங்குதவிர உலகின் வேறு எந்த மூலையிலும் காணவே முடியாது…

பல்லுயிர்வளம் நிறைந்த இந்த மேற்குமலை காடுகளுக்கும், இப்படியான உயிரினங்களுக்குமான உறவு என்பது, நெருக்கமான வலைப்பின்னலைக் கொண்டது. ஒன்றிற்கொன்று ஏதாவது ஒருவகையில் சார்ந்து வாழ்பவை. இவற்றில் ஒன்று அழிந்தால்கூட மற்றொன்று மற்றொன்று என தொடர்ந்து அழிந்துவிடும்…

இப்படிப்பட்ட நெருங்கிய வலைப்பின்னலின் நாம் போட்ட ஓட்டைதான். வால்பாறை போன்ற இடங்களில், மனிதர்களின் சுகத்திற்காகவும், வசதிக்காகவும் மரங்களை வெட்டி, கண்துடைப்பிற்காக, ஆங்காங்கே தொடர்பற்ற சின்னச்சின்ன காடுகளை காப்புக்காடுகள் என்கிற பெயரில் விட்டு வைத்திருக்கிறோம்…

இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவை இதுபோன்ற அரிதான உயிரினங்களே. இவற்றின் மதிப்பினை மனிதர்கள் அறியாமல் இருப்பதன் பேரிழப்பு, இறுதியாக மனிதர்களுக்கே வந்து சேரும்…

ஆங்கிலேயர்கள் வருகைக்குமுன்புவரை, இன்றைய கோவா மகாராஸ்டிரா வரை மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் வாழ்ந்த இவை காபி, தேயிலை, தேக்கு போன்றவை பயிரிட ஆரம்பித்தபின், மழைக்காடுகளான சோலைக்காடுகளை அழித்ததின் விளைவாக, இவை வாழத்தகுந்த இடங்கள் வெகுவாகச் சுருங்கிவிட்டது. பிரச்சனை சோலைமந்திகளுக்கு மட்டுமில்லை சோலைக்காடுகள் அழிக்கப்பட்தால் இன்று பல ஆறுகள் காணமலேயே போய்விட்டதுங்கூட வேதனை…

இன்றைய நிலையில், மிகவும் அழிவு நிலையிலான அரிதான எண்ணிக்கையில், தமிழ் நாடு, கேரளா, கர்நாடகப் பகுகளில் சில இடங்களில் மட்டுமே இந்த சோலைமந்திகள் காணப்படுகிறது…

மரத்திற்குமரம் தாவுவதில் சிறப்பான திறமையுடைய இவை, சாலைகள் விரிவாக்கத்தினால் மரங்கள் அழிக்கப் பட்டதால் சாலையின் மறுபுறம் செல்ல மரத்தைவிட்டு இறங்கி வரவேண்டிய சூழல் உண்டாகிவிட்டது. அதனால், பலவகைகளில் மனிதர்களால் அவற்றின் குண இயல்புகள் மாற்றப்பட்டுவிட்டது…

கடந்த வாரம்(2016) வால்பாறை சென்றபோது, அவைகளின் பரிதாபான மாற்றம் குறித்து மிக வேதனையே உண்டானது. அந்த இடங்களில் வாகனங்கள் மெதுவாகமட்டுமே செல்ல வேண்டும். அப்படி மெதுவாகச் செல்லும் வாகனங்கள்மீது பாய்ந்து ஏறிவிடுகிறது. ஏதாவது கொடுப்பார்களா எனப் பார்க்கிறது. அந்த வழியே செல்லும் பலர் அவற்றிற்கு பிஸ்கட், பஜ்ஜி, வடை போன்ற தின்பண்டங்களை கொடுப்பதை, வழக்கமாகவே வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது….

மிக மிக கூச்ச சுபாவமுடைய இவை, அதுவும் மனிதர்களைக்கண்டால் விலகியே இருக்கும் இவற்றின் குணம், மனிதர்களால் மனிதனிடம் கையேந்தி பிச்சையெடுக்கவும், சில நேரங்களில் மனிதனிடம் வழிப்பறி செய்யுமளவிற்கும் மாற்றப்பட்டுவிட்டது…

நாங்கள் இருந்த கொஞ்ச நேரத்திலும் பலர் வீசியெரிந்ததை அவர்களிடமே எடுத்துக்கொடுத்து மனிதர் கொடுக்கும் உணவுகளால் அவற்றிற்கு உடல்நல பாதிப்பு உண்டாவதுபற்றியும், உணவை எதிர்பார்த்து அவை சாலைகளிலேயே இருப்பதால், சாலை விபத்துகள் ஏற்பட்டு அவற்றிற்கு கைகால்கள் மற்றும் வாலை இழந்துவிடும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் உயிரிழப்புகூட ஏற்பட்டு விடும் என்பது பற்றியும் சொன்னோம். பலர் உணர்ந்துபுரிந்து அவர்கள் செய்த தவறிற்காக வருந்தினர்…

அதேநேரத்தில் வனத்துறையும், தன்னார்வலர்களும் இவ்வாறு நடக்காமலிருக்க இடைவிடாது பணியாற்றுவது மிகுந்த பாராட்டிற்கு உரியது. இருப்பினும், விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் ஓரிருவர்மட்டுமே அனைவரையும் தடுத்து அனுப்புவது மிகச் சிரமம்தான்…

இப்போது பல நேரங்களில், வால்பாறை நகருக்குள்ளும் வீடுகளை நோக்கி உணவிற்காக வருவதை பார்த்ததுதான் மிக வேதனை. அங்குள்ள குப்பைத்தொட்டிகளிலும் உணவைத் தேடுவதைப் பார்க்க முடிந்தது…

குப்பைத்தொட்டியில் கிடந்த “சாம்பார் பொட்டலத்தை” பிரித்துக் கொண்டிருந்த, ஒரு கையில்லாத சோலைமந்தியை கண்டதும் வேதனைதான் மிஞ்சியது…

இவ்வாறெல்லாம் நடக்க அவை விரும்பி உண்ணும் குரங்குபலா போன்ற மரங்கள் வெகுவாக வெட்டியழிக்கப் பட்டதுகூட காரணமாகச் சொல்லப் படுகிறது…

எது எப்படியிருப்பினும் இவற்றின் நிலைகண்டு கொஞ்சம் பயமாக கூட இருக்கிறது…

இதற்குமேல் என்னத்தைச் சொல்வது,
Ramamurthi Ram

படங்கள்:
Divya Barathi Ramamurthi

#மீள்பதிவு

Leave a Reply