FEATUREDLatestNature

உளறுவாய்க்குருவி செஞ்சிலம்பன் Rufous babbler

Spread the love

“உளறுவாய்க்குருவி”
செஞ்சிலம்பன்…
Rufous babbler (Turdoides subrufa)

சிலம்பனைத் தெரியாதவர்கள் மிகமிகச் சிலரே. இதைப் பார்த்திராவிட்டாலும் இதன் குரலைக் கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள். மிகத்தொன்மை காலமாக வாழும் பறவைகளில் ஒன்றான இவை இருக்குமிடத்தில் ஒரே கலகலப்பான சத்தமாகவே இருக்கும்…

Babble என்கிற வார்த்தைக்கு தொணதொணத்துப் பேசுவது-வாயாடி என்கிற பொருள் உண்டு. இதிலிருந்து பிறந்த “Babblers” என்கிற பெயர் இந்தப் பறவையைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்தப்பெயர் எந்தவிதமான ஆச்சரியத்தையும் உருவாக்கிடாது என்பதே உண்மை…

பொதுவாக பழுப்பு நிறத்துடன் காணப்படும் இதற்கு,
தவிட்டுக்குருவி…
பூணியல்…
கூனி…
பன்னிக்குருவி…
கலுகலுப்பான்…
கள்ளிக்குருவி…
சருகுண்ணி…
கரியில்லாக்கிளி…
வேலைக்காரக்குருவி…
கானராஜ்…
காட்டான்…
புலுணி…
புழுதிக்குருவி…
ஸாத்பாயி(இந்தி)…
ஏழுசகோதரிகள்…
கொன்னவாய்க்குருவி…
காட்டுராணி…

இவற்றோடு எங்கள் கோவை-திருப்பூர் பகுதிகளில் “உளறுவாய்க்குருவி”
என்கிற பெயரும் இருக்கிறது. ஓயாமல் ஒழுங்கற்ற சத்தத்தில் கத்திக்கொண்டே இருப்பதால் இதற்கு உளறுவாய்குருவி என்பது பொருத்தமான காரணப்பெயர்தான்…

இப்படி ஒரே மொழியில் ஒன்றிற்கும் மேற்ப்பட்ட பெயர்கள் ஒரு உயிரினத்திற்கு இருக்குமானால் அந்த உயிரினம் மிக மிக நீண்டகாலமாக அம்மொழி பேசும் மக்களோடு தொடர்பிலிருப்பதாக பொருள் கொள்ளலாம்.உதாரணமாக யானைக்கு ஆங்கிலத்தில் இருக்கும் ஒரே பெயர் “Elephant” மட்டுமே ஆனால் அதே யானைக்கு நூற்றிற்கும் மேலான பெயர்கள் தமிழில் உண்டு. அதிலும் ஆணிற்கும், பெண்ணிற்கும், குட்டிகளுக்கும் என வகைக்கும் வயதிற்கும் ஏற்பக்கூட தனித்தனியாக நூற்றிற்கும் மேலான பெயர்கள் இருப்பதே இதற்கு சான்று….

குயிலினப் பறவையான அக்காகுயில்கள் common hawk-cuckoo (Hierococcyx varius) தமது இனப்பெருக்கத்திற்கு பெரும்பாலும் இவற்றின் கூட்டையே பயன்படுத்திக் கொள்கின்றன. அக்காகுயிலின் host bird இந்தச் சிலம்பன்கள்…

சிலம்பனில் இந்தியாவில் மட்டும் ஐம்பத்திற்கும் மேலான வகைகள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் நாம் இன்றைக்கு பார்க்கப் போகிற செஞ்சிலம்பன்.இந்தச் செஞ்சிலம்பன் மலைகளை ஒட்டிய திறந்த வனப்பரப்பில் பெரும்பாலும் காணலாம்…

சமீபத்தில் நான் முதன்முதலில் கவனித்து, இந்த அழகான செஞ்சிலம்பனை கண்டு அறிந்தது கூட, அப்படியான ஒரு அழகான இடத்தில், அதுவும் ஒரு நல்ல மழை பெய்யும் நேரத்தில்தான். நீலகிரிமலையின் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் வருகிற வழியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் பார்த்து மகிழ்ந்தேன். எல்லாப்பறவைகளுமே அழகுதான் இதுவோ சிறப்பான அழகு என்று சொல்லலாம்…

இது நமது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடிய ஓரிடவாழ்வி(Endemic) என்பது இதன் சிறப்பு. கிழக்கு தொடர்மலையில் சேர்வராயன் குன்றுகள் வரை காணப்படுகிறது. இதை உலகில் வேறு எந்தப் பகுதிகளிலும் காணவே முடியாது. எனவே இது நமது மண்ணிற்குரிய தனித்துவமான, பெருமையான பறவைகளில் இதுவும் ஒன்று….

பெரும்பாலான சிலம்பன்களை போல, புதர்பகுதிகளில் மட்டும் அதிகமாக இவற்றைக் காணலாம். கழுத்து முதல் அடிவயிறு வரை செஞ்சிவப்பு நிறமும், கண்களில் மஞ்சள் கலந்த வெள்ளை வலயமும் இவற்றிற்கு காணப்படும்…

பருத்த உடலோடு காணப்படுகிற இவற்றிற்கு “பன்றிக்குருவி” என்பதும் பொருத்தமான காரணப் பெயர்தான். அடர்பழுப்பு நிறத்தோடு நீளமான வாலுடன் காணப்படுகிற இதன் இறகுப்பகுதி சற்றுகாவி நிறத்தில்(Rufous) இருக்கும்…

நான்கு முதல் எட்டுவரை உள்ள சிறு குழுவாக சேர்ந்து வாழும் இவை பெரும்பாலும் ஓயாமல் கத்திக்கொண்டே இருக்கும் இவற்றை பார்த்துக்கொண்டே இருக்கலாம்…

பிடித்தவர்கள் பகிருங்கள். இதனோடு அனுபவமுள்ளவர்கள் உங்கள் அனுபவத்தை இங்கே தெரிவியுங்கள் அனைவருக்கும் பயனாக அமையும். அனைவரும் மறவாமல் கருத்துகளையும் சந்தேகமிருப்பின் கேள்விகளையும் கூட சொல்லுங்க…

நன்றியுடன்,
Ramamurthi Ram

படம்:
Divya Barathi Ramamurthi

 

பசுமை ஹாஜி அட நம்ம தவுட்டு குருவி…..
அருமை…. நல்ல தகவல்.
எங்க வீட்டுல கிணத்தடியில காலைல எங்கம்மா வீட்டு பாத்திரங்களை தவிடு போட்டு தேங்காய் பஞ்சில தேய்த்து கழுவுவார்கள் நான் உம்மி சாம்பலுடன் அங்கே பல்லை தேய்த்துக் கொண்டே கவனிப்பேன் இந்த தவிட்டுக்குருவிகள் கூட்டமாக இரவு சமைத்த பானையை கழுவி கிணற்றடியில் ஊற்றும்போது அதிலிருந்து சிதறும் சோற்று பருக்கைகளை ஆவலாக தத்தி தத்தி வந்து கொத்தி தின்னும்.நான் அவைகளை மிகவும் ரசித்து பார்ப்பேன்.
இவைகள் நடக்காது தத்தி தத்தியே செல்லும்.
தொடர்ந்து கீச் கீச் என கத்திக்கொண்டே இருக்கும்.
எங்க ஊர்ல சாம்பல் நிற தவிட்டு குருவி நிறைய இப்பொழுதும் எங்க வீட்டுப் பக்கம் நிறைய வந்துக்கொண்டிருக்குது.

 

அக்கினிச்சிறகு முடியரசு எங்கள் வீட்டுத் தோட்டப் பகுதிக்கு வரும், அதன் குடும்பத்தோடு கொஞ்சிக் குலாவும். மற்ற இனங்கள் போல எளிதாக பயந்து பறப்பது இல்லை.நாம் நெருங்கினால் சற்று இடம் மாறும்.

Leave a Reply