உலகம் பேரழிவுக்குத் தயாராகிவிட்டது…நீங்கள்

Spread the love

உலகம் பேரழிவுக்குத் தயாராகிவிட்டது.. நீங்கள்?
– நரேஷ் க்ரீன்.

இதுவரை இந்த நவீன உலகம் புகைப்படங்களில்கூடப் பார்த்திராத கொடூர காட்சி அது. பேரழிவின் முதல் எச்சரிக்கை மணி அது.

”விலங்குகளுக்குன்னு என்று ஒரு அதிசய குணம் இருக்குங்க. விலங்குகள் மட்டுமல்லாம, பறவைகளுக்கும் ஆதிகால மனிதர்களுக்கும்கூட அந்த குணம் உண்டு. ’நினைவில் இருக்கும் நீர்நிலைகளை நாடிச் செல்லுதல்’ தான் அந்த குணம்.

அதாவது, காடுகள்ல எங்க நீர் இருக்கும்னு ஒவ்வொரு விலங்கு கூட்டத்துக்கும் தெரியும். விலங்குகளின் ஆதி அறிவில் அந்தப் பாதை புதைந்திருக்கும். பறவைகள் இன்னைக்கு வரைக்கும் சரியான நேரத்தில் சரியான நீர்நிலைகளை நோக்கிப் பயணம் செய்துவது அந்த ஆதி ஆறிவின் மூலம்தான். அவை வந்து சேர்ற இடங்களில் நிச்சயம் நீர் இருக்கும். அந்த விலங்குகலையும் பறவைகளையும் தொடர்ந்து போன எங்களுக்கு நீர் கிடைச்சிரும். “ என்று தாங்கள் நீர் நிலைகளை கண்டடைந்த கதைகளை பழங்குடி மக்கள் பகிர்ந்துகொண்டனர்.

இயற்கை அவ்வளவு கருணை கொண்டது. வற்றாத ஊற்றுகளை மட்டுமே அறிவில் உணர்த்திச் செல்லும் அன்பு கொண்டது. அதையும் மீறி அவை வற்றியிருக்கின்றன என்றால், அவை இன்றைய மனிதர்களின் தவறாக இருக்கும் அல்லது ஊழியின் தொடக்கமாக இருக்கும்.

அலெய்ஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) – ஆஸ்திரேலியாவின் வட மண்டலம் இருக்கும் நீரோடை அது. நீண்டு செழித்து செல்லும் நீரோடை அது.. அந்த நீரோடையில் குளிப்பதை அன்றாட வழக்கமாக வைத்திருந்தார் ரால்ப் டர்னர் என்ற உள்ளூர்வாசி. நீண்ட நாள் கழித்து அந்த இடத்துக்கு வருகை தருகிறார். ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்துக்கு வந்த அவர் ஓடை வறண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். காரணம், அவர் வாழ்நாளில் அந்த ஓடை வறண்டு அவர் பார்த்ததில்லை.

ஓடை வறண்டிருந்தது ஊழி அல்ல. வறண்ட ஓடையை திரும்பிப் பார்த்தபோது அவர் கண்ட காட்சிதான் ஊழி.

கண்களுக்கு எட்டும் தூரம் வரை குதிரைகளின் இறந்த உடல்கள் ஓடையை நிறைத்திருந்தன. ஆதி அறிவின் வழியே வற்றாத அந்நீரோடையைத் தேடி வந்தக் காட்டுக் குதிரைகள், வறண்ட நதியில் அனல் வெயில் தகிக்கும் நிலத்தில் செத்து மிதந்தன. அந்த நீரோடை வற்றியதற்குக் காரணம் நவீன வாழ்வின் இயற்கைச் சுரண்டல் என்ற வாதத்தை இங்கு முன்வைக்கவில்லை. இது பேரழிவின் தொடக்கம் என்பதை மட்டும் இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.

குதிரைகள் இறந்தது சமீபத்திய செய்தி. அவை பேருயிர்கள். இந்த அழிவுக்கு முன்னர் இன்னொரு பேரழிவும் நிகழ்ந்தது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் டார்லிங் நதியில் வெள்ளைப் போர்வை போர்த்திய தோற்றம் இருந்தது. உறைந்த பனியால் அல்ல, செத்து உறைந்து மிதந்த மீன்களின் உடலால்..! ஆயிரக்கணக்கான வெள்ளை மீன்களின் இறந்த உடல்கள் அவை. அதுவும் ஒரே இரவில் நிகழ்ந்த பேரழிவு அது.

இந்த அழிவுக்குக் காரணமாக ஆய்வாளர்கள் முன்வைத்த ஒவ்வொரு அறிவியல் விளக்கங்களும் அச்சமூட்டுப்பவை:

1) வெப்பச் சலன நீரோட்டம்.

2) தண்ணீரில் உயிர்க் காற்றின் அளவு அபாயக் கட்டத்தைத் தாண்டிக் குறைந்தது.

3) வறட்சியின் காரணமாகத் தண்ணீரின் அளவு மாறுபாடு.

இவை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அறிவியல் விளக்கங்கள். வெப்பச் சலன நீரோட்டமும் குறைந்த உயிர்க் காற்று அளவுள்ள நீரும் நிச்சயம் மனித உடல்களையும் சீர்குலைக்கும் காரணிகள்தான்.

அரசாங்கத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட மற்றொரு செய்தி, இதே போல், மேலும் பல ஆயிரம் மீன்கள் வரும் நாட்களில் இறந்து மிதக்கும் என்பதுதான். கூடவே, இது பேரழிவின் தொடக்கம் என்பதையும் ஒப்புக்கொண்டது அறிவியல் உலகம்.

விவசாயத் தொழில்நுட்பத்தில் உலகமே உற்று நோக்கி வியக்கும் அளவுக்கு விளைச்சல் தந்த நாடு ஆஸ்திரேலியா. அப்பேர்ப்பட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட நாட்டில்கூட இயற்கையின் நுட்பமான செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், அந்தத் தொழில் ‘நுட்பத்தின்’ பயன்தான் என்ன?

இந்நிகழ்வுகள் அந்த நிலத்தின் மனிதர்களிடம் எந்தளவு தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன தெரியுமா?

“ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரத்தில் கடந்த 2 நாள்களாக 49.5 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. இது அந்நாட்டின் வரலாற்றிலேயே அதிக அளவு. அடிலெய்டு போலவே மேலும் 13 நகரங்கள் அதிக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன” என்பது பத்திரிக்கைச் செய்தி.

இதற்கு ஆஸ்திரேலிய அரசின் ஆகச்சிறந்த தொழில்நுட்ப தீர்வு என்ன தெரியுமா?
’வெப்பச் சலன காற்றில் வெளியே வராதீர்கள்’ என்று நவீன தொழில்நுட்ப மின்பலகையில் எச்சரிக்கை வாசகங்கள் வைத்திருக்கிறது அரசு.

தொழில்நுட்பத்தில் நாம் பார்த்து வியக்கும் மற்றொரு நாடு அமெரிக்கா. இந்த வருடப் பனிக்காலத்தில் அண்டார்டிக்காவுக்கு நிகரான பனிப்பொழிவைச் சந்தித்திருக்கிறது அமெரிக்கா. அந்தக் குளிரில் அந்த மனிதர்கள் சந்தித்துவரும் உடல் தொல்லைகளின் அளவு மிகவும் அதிகம். வரலாற்றில் பதிவுசெய்யப்படாத அளவுக்கான அமெரிக்க மருத்துவப் பதிவேடுகளின் எண்ணிக்கையே இந்த உபாதைகளின் பரிதாபக் கதைகளைப் பேசும்.

இந்த இரு நிகழ்விலும் நாம் கவனிக்கத் தவறும் முக்கிய செய்தி ஒன்று உண்டு. தொழில்நுட்பத்தின் தலைவர்களான இரு தேச அறிவியலாளர்களும் வானவியலாளர்களும், இப்படியொரு அழிவு நிகழும் என்று குறைந்தபட்சக் கணிப்புகள்கூட வெளியிட முடியாவில்லை. ஏனென்றால், அவர்களால் கணிக்கமுடியவில்லை. கணிக்கவும் முடியாது. இயற்கையின் நுட்பம் எந்த தொழில்நுட்பத்தையும் தாண்டிய ஆதி அறிவு உடையது. அதன் கோட்பாடுகள் எளிமையானவை.

அழித்தால் அழிப்பதும், சுரண்டினால் இல்லாமல் செய்வதும்தான் இயற்கையின் அடிப்படை இயற்பியல் விதி. அதை மதித்துச் செயல்படுவதுதான் நாம் இப்போது செய்யக்கூடிய ஒரே காரியம். இயற்கையின் இந்த எதிர்வினைகளை நிச்சயம் கருவிகளால் கணிக்கமுடியாது. மனிதர்களால் உணரத்தான் முடியும்.

பெரிதும் கவனிக்கப்படுகிற ஊடக வெளிச்சத்தில் இருக்கும் நாடுகளில் நடந்த சூழல் மாற்றங்கள்தான் மேற்குறிப்பிட்டவை. முதல் தொழிற்புரட்சியிலேயே சீரழிந்து மீண்டுகொண்டிருக்கும் நாடுகளில் நடக்கும் சூழல் சீரழிவுகள் நம் கவனத்திற்கு வருவதில்லை. அவை அழிவுகளைக் கண்டுகொண்டு தற்போது மீட்சிக்கான வழிகளில் இறங்கியுள்ளன.

உதாரணமாக, ஜெர்மனி தனது நாட்டில் நிலக்கரியைப் பயன்படுத்தும் 84 அனல்மின் நிலையங்களையும் மூடுவதாக முடிவெடுத்துள்ளது. மின்சார உற்பத்திக்கு இயற்கையைச் சுரண்டாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களையே பயன்படுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.

உலகிலேயே நிலக்கரியை அதிகம் பயன்படுத்தும் நாடான ஜெர்மனி, தன் மின்சாரத் தேவைக்குச் சூழலைச் சுரண்டாத பாதைக்கு அதிரடியாகத் திரும்புகிறதென்றால், சூழல் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

இவை இயற்கையின் கடைசி அழைப்புகள். அவற்றை கவனித்து, இயற்கைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

காதுள்ளவர் கேட்கக் கடவது..! மனிதர்களை விட்டுத்தள்ளுங்கள்., சுற்றியிருக்கும் உயிர்களை பாதுகாக்க மனதளவில் விரும்புங்கள். விருப்பம் செயலாக மாறும்..!

Naresh green