இல்லாத உரிமை

Spread the love

இல்லாத உரிமை

Alwar Narayanan from facebook.

நம்மிடையே சிலர் இருக்கிறார்கள்.

உலகத்தில் உள்ள எல்லா நல்ல விஷயங்களும் இவர்களுக்கு வேண்டும். அட்டகாசமான வாழ்க்கை, சொகுசு கார், சுகமான மெத்தை, அம்சமான பிரியாணி..அழகான மனைவி, பணக்கார கணவன், பொருட்காட்சியில் முதல் வரிசை, மாபெரும் தொலைக்காட்சி, அதிரும் பேரொலிப்பான், திரையரங்கில் மெத்தை இருக்கை, சாமி கும்பிடும்போது முதல் ஆள், திருமண விருந்தில் தனி கவனம். சாமியாரிடம் ஏகாந்த வசனம்…. இப்படி அனைத்திற்கும் ஆசை. அதை எப்படியாவது அடைய, முடிவில்லாமல் போராடுவார்கள்.

எப்போதும் எதையாவது ஏற்றி போற்றிக்கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொரு மட்டை பந்துக்கும் “அடிச்சு தூக்கிட்டாண்டா” என்பார்கள். யானை சாணிபோட்டால்கூட “ஆஹா சூப்பர் அதிசயம் ” என்று வியப்பார்கள். இவர்களை பார்த்தால் எப்போதும் உற்சாகம் கொப்பளிக்கும். நேர்மறையான மனிதர்கள் போல தோன்றும். நம்பிக்கையின் ஊற்றுக்கண்ணாக இருப்பார்கள். அவர்களிடம் பேசினால் நமக்கும் இந்த வாசனை தொற்றிக்கொள்ளும் என்பதை மறுக்க முடியாது.

உலகமே இவர்களுக்காக படைப்பப்பட்டிருக்கிறது. உண்மைதான். நுகர்வோருக்காகத்தான் இந்த உலகமே இரவும் பகலும் உழைக்கிறது.

விமானத்தில் உட்கார்ந்தவுடன் இலவச நீர் அருந்த தாகமெடுக்கும். பொத்தானை அமுக்கி பணிப்பெண்ணை அழைப்பார்கள். வருவாரா மாட்டாரா என்று சோதிக்க !. வீட்டில் வேலைக்காரி பெருக்கும்போது காலை மடக்க மாட்டார்கள். என்ன செய்கிறார் என்று பார்க்க ! ஆஸ்பத்திரியில் நர்ஸை வேண்டுமென்றே கூப்பிட்டு போர்வை போத்த சொல்லுவார்கள். சிறப்பு உபசாரம் எதிர்பார்த்து. ஹோட்டல் சென்றால் கூட சமையல் அறையில் தோசை மாஸ்டரிடம் எதொயோ சொல்லி வருவார்கள். கோயிலில் அய்யரிடம் கைக்கொள்ளாமல் பிரசாதம் கேட்டுப்பெறுவார்கள். சாலையில் நெரிசலில் கால் டாக்ஸி டிரைவரை காக்க வைப்பார்கள். வணிக வளாகங்களில் இலவசங்களை மன்றாடி பெறுவார்கள். கழிப்பறையில் ஆரவாரத்துடன் கைதுடைத்து தாள்களால் கூடையை நிரப்புவார்கள். முடிந்தவரை கிடைத்த வாய்ப்பையெல்லாம் உபயோகிப்பார்கள். “They are supposed to” என்று அடிக்கடி சொல்வார்கள்.

எப்போதும் தன்னைவிட அதிகாரம் படைத்தவர்களை முகஸ்துதி செய்தே காரியத்தை சாதிப்பார்கள். வெளியில் பார்ப்பவர்களுக்கு இவர் பெரிய ஆட்களுடன் இருக்கிறார் என்று தோன்றும். மேலே உள்ளவரிடம் கூழை கும்பிடு போட்டுக்கொண்டே கீழே இருப்பவனை எட்டி மிதிப்பார்கள். ஒவ்வொரு இடத்திலும் தன் அதிகாரம் எந்தளவு பாய்கிறதென்று உரசி பார்ப்பார்கள். டாக்டரை தெரியும், வக்கீலை தெரியும், அரசியல் வாதியை தெரியும், போலீசை தெரியும், தெரியும், தெரியும்……..

உண்மையை சொல்லவேண்டுமென்றால் பேசினாலே இவர்கள் அட்டையை போல ஒட்டிக்கொள்பவர்கள். உறிஞ்சி விடுவார்கள். “பேச்சுதான் பெத்த” என்பதுபோல வாய்ச்சவடால் மட்டுமே நிலைக்கும். நாலுபேர் பேசிக்கொண்டிருந்தால் அழையாமல் நுழைவார்கள். வாழ்வில் நிறைய பணத்தை காலி செய்திருப்பார்கள். தீர்ந்துபோனால் மாமனாரிடம் டௌரி வாங்குவது, பெற்றோரை மிரட்டுவது, நண்பனிடம் கை நீட்டுவது எல்லாமே நடக்கும்.

வரிசையில் நின்று வாங்கும் சரித்திரமே அவர்களிடம் கிடையாது. எப்போதுமே பின்வாசல், தனி வழிதான். எல்லா இடத்திலும் எல்லாவற்றுக்கும் “ஆள்” வைத்திருப்பார்கள். வங்கியில் பணத்தை மாற்ற, திருப்பதி லட்டுவாங்க, வனவிலங்கு சரணாலயத்தில் தங்கி கூத்தாட, கோயில் கருவறைக்குள் நுழைய, சுதந்திர தினத்தில் முன் வரிசையில் உட்கார, ஏன் வெறும் கொத்தமல்லி கட்டுவாங்கவேண்டுமென்றாலும் கூட ஒரு விசுவாசியான வியாபாரியை கைக்குள் வைத்திருப்பார்கள்.

சாலை விதி மீறுவார்கள், வரிசையில் நடுவில் புகுவார்கள், சத்தமாக சிரிப்பார்கள், பேசுவார்கள், சாப்பிடுவார்கள், ஹாரன் அடிப்பார்கள். அருவியில் குளித்து ஈர ஆடையுடன் உலா வருவார்கள். எல்லாமே சுற்றியுள்ளவர் கவனத்தை ஈர்ப்பதற்காக. முடிந்தவரை ஐந்து நட்சத்திர ஓட்டலில், பொதுவெளியில், சந்தையில், இரயிலில், கடற்கரையில் அரை நிர்வாணமாக அலைவார்கள். சிகரெட் குடித்தால் வானத்தை பார்த்து ஊதுவார்கள். மேசை நடுங்குமளவு காலை ஆட்டுவார்கள்.

இவர்கள் யார் ? ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் ?

இந்த நபர் எப்போதும் “உரிமை உணர்தல்” என்ற மிதப்பில் மூழ்கி இருப்பார் . ஆங்கிலத்தில் “Feeling Entitled”

உரிமை கோருவது என்றாலே அதற்காக உழைக்காமல் தன் தகுதியை வைத்து சம்பாதிப்பதுதான். இல்லாத தகுதியை இதற்காக உருவாக்கி கொள்வது. பட்டை போட்டு பக்திமானாவது, சீருடை அணிந்து தேச பக்தனாவது, தலைப்பாகை கட்டிக்கொண்டு சமூக நீதி பேசுவது, கொடி பிடிப்பது, அடிக்கடி தர்ணா, போராட்டம் எல்லாமே இதில் அடங்கும், உழைப்பை தவிர. ஒருவனை திட்டுவதாலோ, பழிப்பதாலோ, அடிமைகளை ஏய்ப்பதாலோ , பெண்களை இழிவதாலோ கூட இந்த உயர்தன்மை உணர்வு ஒருவனுக்கு வரக்கூடும். காவல்காரனை ஒருமையில் அழைத்து பெட்டிக்கடைக்கு அனுப்புவார்கள். சாலையில் குறுக்கில் போகும் ஏழையை கண்டபடி திட்டுவார்கள்.

இவர்களுக்கு அமைதி பிடிக்காது. ஆழ்ந்த தியானத்தில் இருந்து கொலைவெறியுடன் எழுந்துவருவார்கள். மணியாட்டிக்கொண்டே தகாத வார்த்தைகளால் திட்டுவார்கள். வெள்ளையுடை அணிந்து பொய் சொல்வார்கள். பிச்சையும் வாங்கிக்கொண்டு சாபமும் கொடுப்பார்கள். ஏனென்றால் உரிமை உணர்வுடன் இருக்கும் இவர்கள் ஏனையோரை விட ஒரு படி எப்போதும் மேல்தானே.

கம்பெனியில் வேலைசெய்தால் முதலில் உரிமைகளை படித்து தெரிந்துகொள்வார்கள். “சம்சா, தேநீர்” கூட கம்பெனி செலவில்தான். இஷ்டத்துக்கு வருவது, போவது, அடிக்கடி சிகரெட் பிடிப்பது…மேசை முழுவதும் மெடிக்கல் பில் நிரம்பி வழியும். அதேபோல பிரயாண செலவு விவரங்கள். அதிகம் விடுப்பு எடுப்பார்கள். பிரசவத்துக்கு 6 மாதம் அனுமதி என்றால் 6 மாதமும் விடுப்பு. அதற்குமேலும். படிப்பதற்கு 2 ஆண்டுகள் அரசு கொடுத்தால் ராணுவமாவது, வெங்காயமாவது. முழுவதும் அனுபவிப்பார்கள். கம்பெனி கார் கொடுத்தால் அது வீட்டு வேலைக்கு. கணினி கொடுத்தால் அது சொந்த உபயோகத்திற்கு…..

எல்லாவற்றிலும் உரிமை கோரும் இவர்கள் எப்போதும் சுய பரிசோதனை கொள்வதில்லை. இந்த சலுகைக்கு தான் தகுதியானவன்தானா என்று கேட்டுக்கொள்வதில்லை. வாய்ப்பந்தலால் மட்டுமே பிழைப்பார்கள். சம்பளம் அதிகமோ, விலை நியாயமானதா என்றெல்லாம் சிந்திப்பதில்லை.

நான் வெள்ளை. நான் ஏழை. நான் ஊனமுற்றவன். நான் தேசபக்தன். நான் ஒதுக்கப்பட்டவன். நான் உயரமானன். நான் இன்னாரின் சீடன். இன்னாரின் மனைவி. இன்னாரின் பிள்ளை. நான் படித்தவன். நான் உயர்ந்தவன். நான் பணக்காரன். நான் நல்ல ஜாதி. வெளிநாடு போய்வந்திருக்கிறேன். நான் அழகானவள். என்றெல்லாம் தனக்குத்தானே அதை ஒரு தகுதியாக நினைத்துக்கொண்டு எல்லாவற்றின் மீதும் உரிமை செலுத்துவார்கள். தோழனென்றால் தோள்கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. உலகம் முழுவதும் தன் பாட்டன் சொத்து என நினைக்கும் பிறப்புரிமை.

நண்பர்கள், உறவினர்கள், மற்றும் தெரியாதவர்கள்தாம் இவர்களின் குறி. இவர்களை தெரிந்தவர்கள் விலகுவார்கள். புதிதாக சிலர் சிக்குவார்கள். எல்லோரும் இவரை மதிக்கவேண்டும். இதற்காக நிறைய செலவு செய்வார்கள். புத்தாடைகளை வாங்கிக்கொண்டே இருப்பார்கள். எல்லாமே தாராளமாக இருக்கிறது என்ற ஒரு மாயை. இவரை குறை சொல்பவன் வெறுப்பாளன், எதிர்மறையானவன் என்று ஒதுக்கிவிடுவார்கள். அடிக்கடி தலையலங்காரம், கண்ணாடி பார்ப்பது, செல்பி எடுப்பது மட்டுமல்ல, தன்னை பற்றி அடுத்தவர் என்ன நினைக்கிறார் என்று அவ்வப்போது சோதனை செய்துகொள்வார்கள்.

“நான் அதைச்செய்தேன்”, “இதை செய்வேன்” என்று சுயபுராணம்தான் அடிக்கடி வாயில் வரும். எதோ பெரிய செயற்கரிய செயலை சாதிக்கப் இந்த பூமியில் பிறந்தவர்கள் போல பிரசங்கம் கொடுப்பார்கள். பணக்காரர்களை பற்றி மட்டுமே பேசுவார்கள். விலையுயர்ந்த பொருட்களை தெரிந்து வைத்திருப்பார்கள். ஊர் முழுவதும் மேய்ந்திருப்பார்கள். ஒவ்வொருநாளும் நண்பர்களை மாற்றுவார்கள். வாழ்க்கையில் தோல்விகண்டவர்கள், துன்ப படுபவர்களை தீண்டத்தகாதவராக ஒதுக்குவார்கள். ஏனென்றால் தோல்வி, வறுமை என்பது அவரவர்கள் வேண்டுமென்றே சோம்பேறித்தனத்தால் தருவித்து கொள்வது என்பது அவர்கள் நம்பிக்கை.

இவர்களின் பிரச்சனை என்னவென்றால் தன் பொய் உலகையே தானே நம்புவதுதான். தான் கட்டிய கற்பனை கோட்டையை, பத்து பேரிடம் சொன்ன பொய்யை உண்மையென்று தானே நம்பிவிடுவார்கள். தான் உயர்ந்தவன் என்று எண்ணுபவன் உண்மையிலேயே உயர்ந்தவனாகி விடுவான் என்று தவறுதலாக சொல்லப்பட்டுவிட்டதால் உலகமே இவரை பாராட்டும். “நீ கடவுளின் குழந்தை, ஆசீர்வதிக்கப்பட்டவன், புத்திசாலி, வித்தியாசமானவன், நீ அம்பானி ” என்றெல்லாம் உலகம் புகழும்.

தன் சொந்த வாழ்க்கையை நடாத்த தெரியாது. ஒரு பொய்யை மறைக்க பத்து பொய். கனவில் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை தக்கவைத்துக்கொள்ள போராட்டம். கணினியைப் பற்றி ஆனா, ஆவன்னா கற்றுக்கொள்ளும்போதே பில்கேட்ஸ் லெவலுக்கு பீலா விடவேண்டும். படங்கள் பார்த்துவிட்டு எல்லாம் தெரிந்ததுபோல காட்டவேண்டும். குறைகளை பார்க்க தெரியாது. அட அப்படி ஒன்று இருந்தால்தானே !

பேய், பிசாசு, ஆவி, பில்லி சூனியம், சுடுகாடு, பிரசன்னம், கன்னம், செய்வினை, மந்திரம், மாயம், வாஸ்து, நவ ரத்தினம் எல்லாவற்றிலும் நம்பிக்கை உண்டு. ஏனென்றால் பழியை தூக்கி தலையில் போட எதுவாவது ஒன்று வேண்டுமல்லவா. உரிமை உணர்வு உள்ளவர்கள் எப்போதுமே தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அது ஒரு போதை. அதுவே அவர்கள் வாழ்வாதாரம். அதற்கு முடிவே கிடையாது. சுற்றியுள்ளோரின் நேரமும், பொருளும் ஏன் வாழ்க்கையே கூட வீணாகிவிடும். உணர்வுகளால் மிரட்டி காரியத்தை சாதிப்பார்கள். பல பெற்றோரால் செல்லப்பிள்ளைகள் முகம் நோகாமல் இருக்க நொடிக்கொரு பொருளை வாங்கி கொடுப்பார்கள். கண் அசைவில் பணம் செலவழிப்பார்கள். தன் வாழ்க்கையையே அர்ப்பணிப்பார்கள்.

பிரச்சனையே இதுதான். சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும். அம்பானி ஆகவேண்டும். ஆனால் அதற்காக உழைக்கமாட்டேன். எல்லோரும் என்னை புகழவேண்டும். ஆனால் வேதனை அனுபவிக்க மாட்டேன். படிக்க மாட்டேன், தொழில் செய்ய மாட்டேன், நஷ்டப்பட மாட்டேன். அம்பானியை பிடித்தவனுக்கு ஒரு காலத்தில் அரை கிறுக்கனாக அலைந்தார் என்று தெரிந்திருக்கவேண்டும். 16 வயதில் தந்தை இறந்தவுடன் பிழைப்புக்காக ஏதன் நகருக்கு ஓடிச்சென்றார் என்று தெரிந்திருக்கவேண்டும். அதை பிள்ளைகள் படிப்பதில்லை.

பிரச்சனைகள் வரும்போது ஓடி ஒளிய பல்வேறு வழிகள் இருக்கின்றன. சாமியாரிடம் போனால் நறுமணத்தை புகட்டி மந்த நிலைக்கு கொண்டு செல்வார்கள். சினிமா, டிராமா, மது, மாது என்று எல்லா வழிகளும் இருக்கின்றன. இன்றைக்கு பொதுவெளியில் ஒரு மாய பிம்பத்தை உண்டு பண்ணமுடியும். ஆனால் நிரந்தரமாக முன்னேறவேண்டுமானால் ஒரே வழிதான்.

அடியை தாங்கும் சக்தியை வளர்த்துக்கொள்ளவேண்டும். நான் சின்னவன் என்று உணரவேண்டும். நாம் பெரும்பாலும் நாளில் செய்யும் வேலைகள் மிக மிக சாதாரணமானவை என்ற உணர்வையும் அதை செவ்வனே செய்யவேண்டுமென்ற தாகமும் வேண்டும். குறைகளை கண்டறியவேண்டும், அறிவுபூர்வமாக களையவேண்டும், அதை காலத்தே உணரவேண்டும். ஏழையாக இருப்பதில் தவறில்லை. அழுக்காக இருப்பதில் தவறில்லை. தவறு செய்வது தவறில்லை.

உங்களுக்கென்று உரிமையானது எதுவுமில்லை. எல்லாமே சம்பாதித்தால்தான் கிடைக்கும். அதற்கான முதலீடுதான் உழைப்பு.

இன்றைக்கு இந்த உலகத்துக்கு நீங்கள் அளித்த சிறிய பங்களிப்பு என்ன ? நுகர்ந்ததென்ன ?

(The Subtle Art of Not giving a F*ck என்ற நூலில் மார்க் மான்சன் எழுதிய அனுபவ பதிவின் அடியொட்டி எழுதியது)