இப்படி ஒரு வாழ்க்கை வாழ நீங்கள் தயாரா

Spread the love

இப்படி ஒரு வாழ்க்கை வாழ நீங்கள் தயாரா….?

சசாகி ஒரு ஜப்பானிய பெண். 21 வயதாகும் சசாகிக்கு டிவிடி, புத்தகங்கள் சேகரிப்பது பொழுதுபோக்கு. இரண்டு வருடங்களில் பல ஆயிரக்கணக்கான டிவிடிக்களும், புத்தகங்களும் சசாகி வசம் சேர்ந்தன. எல்லாவற்றையும் பார்ப்பதும், படிப்பதும் அவளது பழக்கமல்ல. அவற்றை சேகரிக்க வேண்டும்.அவ்வளவுதான். வீடு முழுவதும் புத்தகங்களும், டிவிடிக்களும் தான். இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள் தனது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்த சசாகி யோசித்துக் கொண்டிருந்தாள். அவளது யோசனை முழுவதுமே அவளிடம் இன்னும் சேர்ந்திடாத புத்தகங்கள் பற்றியும், டிவிடிக்கள் பற்றியுமே இருந்தது. அவள் வசம் இருந்தவை எவையுமே அவளுக்கு எந்த திருப்தியும் தரவில்லை. அடுத்த சில நாட்கள் அவளிடம் இருந்த புத்தகங்கள், டிவிடிக்களை நண்பர்களுக்கு கொடுக்கத் தொடங்கினாள். அப்போது, அவள் வீட்டில் நிறைய இடம் இருந்தது. ஒரு நாளில் அவளுக்கு கூடுதல் நேரம் இருந்தது. அதை நண்பர்களோடு செலவழிக்கத் தொடங்கினாள். அதிக பயணங்கள் சாத்தியமானது. சசாகி மினிமலிஸ்ட் லைஃபை சந்தோஷமாக வாழத் தொடங்கினாள்.

மினிமலிஸ்ட் லைஃப். தமிழில் ‘சிறுநுகர் வாழ்வு’ என சொல்லலாம். உங்களைச் சுற்றி எத்தனை பொருட்கள் இருக்கின்றன? அல்லது உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு எத்தனை பொருட்கள் தேவைப்படுகின்றன? பல் தேய்க்கும் பிரஷில் ஆரம்பித்து இரவு கொசு விரட்டும் மிஷின் வரை எல்லாவற்றையும் பட்டியல் இடுங்கள். அதன் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருந்தால் நீங்கள் வாழ்வது சிறுநுகர் வாழ்வு. ஆனால், சராசரியாக 100 பொருட்களாவது நாம் பயன்படுத்துகிறோம் என்பதுதான் உண்மை. தேவையில்லாத ஒன்றை நாம் ஏன் வாங்கப் போகிறோம்? எல்லாமே தேவைதானே என்ற கேள்வி எழுகிறதா?
நீங்கள் இசையை கேட்க என்ன என்ன சாதனங்களை பயன்படுத்துகிறீர்கள்? மொபைலில் கேட்பீர்கள். 5.1 ஸ்பீக்கர் இருக்கலாம். சின்னதாக ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர். டிவிடி ப்ளேயர் தனியாக இருக்கக்கூடும். தொலைக்காட்சியில் ரசிக்கலாம். இன்னமும் வாக்மேன் வைத்திருப்பவர்கள் உண்டு. உங்கள் வசம் இருக்கும் விஷயங்களை மட்டும் கணக்கிலிடுங்கள். இதில் எத்தனை பொருட்களை நீங்கள் வாங்கமால் தவிர்த்திருக்கலாம்?

பணக்காரராக இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, நிறைய சம்பாதிப்பது. இன்னொன்று விருப்பங்களை குறைத்துக் கொள்வது என்கிறது ஜென்.

பிறந்தது முதலே நாம் அடுத்தக்கட்டத்துக்கு நகர்வது குறித்தே போதிக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு நிறையத் தேவை. அப்படித்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். அப்பா முதல் ஆசிரியர் வரை, தொலைக்காட்சி முதல் சினிமா வரை எல்லாமே நமக்கு சொல்வது ஒன்றுதான். “அதிகம் இருந்தால் நல்லது”. அதனால்தான் நிறைய சம்பாதிக்க ஓய்வின்றி உழைக்கிறோம். ஆனால், நம் எல்லோருக்குமே ஒரு உண்மை தெரியும். அது, ’நம் சந்தோஷத்தை நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது’. அண்ணாச்சி கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளம் வரை எங்கேயும் அது விற்பதில்லை. ”அதிகம்” என்பது எப்போதும் சிறந்ததல்ல என்பது நமக்கு நன்றாக தெரியும்.

ஜப்பான் இளைஞர்கள் மத்தியில் இப்போது வேகமாக வளர்ந்து வரும் பேசுபொருள் இந்த மினிமலிஸ்ட் வாழ்வுதான். ஃபேஸ்புக் முதல் சுமோ பயிற்சி மையங்கள் வரை இதுப் பற்றிதான் அவர்கள் நிறைய பேசுகிறார்கள். பலர், சிறுநுகர் வாழ்க்கைக்கு மாறியும் இருக்கிறார்கள். நாம் நினைக்கும் அளவுக்கு இது சிரமம் அல்ல என்பது அவர்களது அனுபவ அறிவுரை. ஏனெனில், நம் எல்லோருக்குமே மகிழ்ச்சியாக வாழ தான் ஆசை. அது எப்படி என்பது தெரியாமல் தான் இருக்கிறோம். அதற்கு தொடக்கமாக ஐந்து விஷயங்களை சொல்கிறார்கள் மினிமலிச மனிதர்கள்

1) எழுதுங்கள்:

எளிமையாக, மகிழ்ச்சியாக வாழ நினைக்கறீர்களா? அது ஏன் என்பதை முதலில் எழுதுங்கள். தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? அதை ஒரு பேப்பரில் எழுதுங்கள். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறீர்களா? அதையும் எழுதுங்கள். உங்கள் மேனேஜரை நீங்கள் வேண்டாம் என விலக்க நினைக்கறீர்களா? எழுதுங்கள். உங்கள் மனதில் இருக்கும் தேடலை எழுதுங்கள். ”ஏன்” என்ற கேள்விதான் உங்களுக்கு தேவையானதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்

2) டூப்ளிகேட்களை துரத்துங்கள்:

ஒரு பெரிய பெட்டியை தயார் செய்துக் கொள்ளவும். உங்கள் வீட்டை ஒரு ரவுண்ட் அடிக்கவும். ஒரே படத்தின் இரண்டு சிடி இருக்கிறதா? ஒன்றை பெட்டியில் வைத்து மூடவும். வெள்ளைச்சட்டை மூன்று இருக்கிறதா? இரண்டை பெட்டிக்குத் தள்ளவும். பெல்ட் எத்தனை இருக்கின்றன? அதுவும் பெட்டிக்கே. எல்லாம் முடிந்ததும், அந்தப் பெட்டியை மூடி அதன் மேல் “டூப்ளிகேட்” என எழுதி கண்ணில் படாத இடத்தில் வைத்துவிடுங்கள். 30 நாட்களுக்கு அந்தப் பெட்டியில் இருந்து எதுவுமே உங்களுக்கு தேவையில்லை என்றால், அந்தப் பொருட்களை யாருக்காவது கொடுத்து விடுங்கள்.

3) “லைட்” பயணங்கள்:

ஒரு நாள் பயணத்துக் சூட்கேஸை எடுக்கும் ஆளா நீங்கள்? ரிலாக்ஸ் பாஸ். வழக்கமாக எடுத்து வைக்கும் பொருட்களில் பாதியை எடுக்கவும். நான்கு நாட்களுக்கு இரண்டு சட்டைகள் போதும். துவைத்து பயன்படுத்தலாம். இரண்டு ஷூக்கள் தேவையில்லை. ஒன்று மட்டும் எடுத்து வையுங்கள். மொபைல், டேப்லட், லேப்டாப் எல்லாம் இருக்கிறதா? எது வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். குறைந்த லக்கேஜுடன் பயணிப்பதன் சுகத்தை அனுபவித்து பாருங்கள்.

4) ரிப்பீட் உணவு:

மதிய உணவு சாப்பிடும்போதே டின்னர் பற்றி யோசிப்பவர்கள் அதிகம். ஒரு வாரம் முழுக்க தினமும் காலையில் இட்லி. மதியம் எதாவது ஒரே ஒரு வகை சாப்பாடு. இரவில் சப்பாத்தியோ, தயிர் சாதமோ. ஆனால், அந்த வாரம் முழுவதும் அதுதான். ஒரு வாரம் கழித்து யோசித்துப் பாருங்கள். என்ன என்ன பலன்கள், என்ன என்ன குறைகள் என்பதை பட்டியிலிட்டு கவனியுங்கள்:

5) ”கம்மி” உடைகள்:

ப்ராஜெக்ட் 333 என்பார்கள். மூன்று மாதங்களுக்கு 33 உடைகள் மட்டுமே. அதாவது சட்டை, பேண்ட் ,ஷூ தொடங்கி உள்ளாடை வரை உங்களுக்கு தேவையான காஸ்ட்யூம் வகைகளில் 33 மட்டும் எடுத்து வைக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு அதையேதான் மாற்றி மாற்றி அணிய வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்.

”சிறுநுகர் வாழ்வு நாம் விடுதலை அடைய உதவும் ஒரு கருவி. கவலைகளில் இருந்து, பயத்தில் இருந்து, மன அழுத்தத்தில் இருந்து, குற்ற உணர்வில் இருந்து நமக்கு விடுதலை கொடுக்கும் ஒரு கருவி” என்கிறார் ட்வைலைட் படப்புகழ் ராபர்ட் பேட்டின்சன். பிரபல ஹாலிவுட் நடிகர் ஆக இருந்தபோதும் இவர் சிறுநுகர் வாழ்க்கையையே விரும்பு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

ஆடம்பரத்துக்கு அடையாளமான ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாபஸை அவரது வீட்டில் சந்தித்தவர்களுக்கு ஆச்சர்யமாய் இருந்திருக்கும். அவர் அறையில் ஐன்ஸ்டீன் படம் ஒன்று, ஒரே ஒரு சேர், ஒரு டிஃபானி விளக்கும் மட்டுமே இருக்கும்.

பொருளாதார மந்தநிலை, எதிர்பாராத இயற்கை பேரிடர் என எந்த அசாதாரணமான சூழலையும் சிறுநுகர் வாழ்வால் தைரியமாக சந்திக்க முடியும். ஒரு சுவாரஸ்யமாய, சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும். மற்றவர்களுக்கு பயனுள்ள, நமக்கு திருப்தியான ஒரு மனிதராக நம்மால் இருக்க முடியும். மினிமலிஸத்தில் தான் வாழ்க்கை ”மேக்ஸிமமாக” இருக்கிறது என்றே சொல்லலாம்.
மினிமலிஸ்ட் லைஃப், சிறுநுகர் வாழ்வு – இந்த சொற்களை இதுவரை நாம் கேட்காமல் இருந்திருக்கலாம். ஆனால், நமக்கு தெரிந்த பலரும் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
Fumio Sasaki

நன்றி Sundara Pandian