இந்தியாவில் 44% பேருக்கு தாய்மொழி ஹிந்தியா

Spread the love

Vijaya Sarathy Rao

***இந்தியாவில் 44% பேருக்கு தாய்மொழி ஹிந்தியா?***

“ஹிந்தியில் இருப்பது இரண்டே இலக்கியங்கள்தான் – ஒன்று, துளசி ராமாயணம். இன்னொன்று ரயில்வே கைடு” என்று அண்ணா கூறியதாக ஒரு ஜோக்கைப் படித்தேன். ஜோக்கிற்கு சிரிக்கும்போதே சந்தேகம் வந்து கொஞ்சம் ஆராய ஆரம்பித்தேன்.

துளசியின் ராமாயணமான ராம்சரிதமானஸ் ‘அவதி’ என்னும் மொழியில் எழுதப்பட்டது. அவதி என்பது தெற்கு நேபாளம், அதற்கு கீழே இருக்கும் உ.பி பகுதிகளில் பேசப்படும் மொழி. அது ஒரு தனிமொழி என்று வாதிடுவோரும் உண்டு… ஹிந்தியின் ஒரு வட்டார வழக்குதான் என்று கூறுபவர்களும் உண்டு.

இந்திய சென்சஸ் படி அவதியைத் தாய்மொழியாகக் கொண்ட 38 லட்சம் பேரும் இந்தி பேசுபவர்கள்தான். இப்படி எத்தனை மொழிகள் ஹிந்தியின் வட்டார வழக்காகக் கணக்கிடப்படுகிறது என்று பார்த்தால், எண்ணிக்கை மலைக்க வைக்கிறது.

ஹிந்திக்கு கீழே 55 வட்டாரவழக்குகள் இருக்கின்றன. 56வது Others என்று துக்கடா கேட்டகரி மொழிகளை மட்டுமே 1.67 கோடி பேர் பேசுகிறார்கள்.

சரி எந்த வட்டார வழக்குகள்/ மொழிகள் நிறைய பேசப்படுகின்றன? போஜ்பூரி 5.05 கோடி, ராஜஸ்தானி 2.58 கோடி, சத்தீஸ்கர்ஹி 1.62 கோடி, மகதி 1.27 கோடி, ஹர்யான்வி 1 கோடி மக்களுக்குத் தாய்மொழி. இதில் எது வட்டார வழக்கு, எது தனி மொழி? தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்டாலே அது ஹிந்திதான் என்று எடுத்துக் கொள்கிறார்கள் போல.

ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று சென்சஸ் சொல்லும் 52.83 கோடியில் வட்டார வழக்குகள் பேசுபவர்கள் 20.61 கோடி(39%). இப்போது மற்ற முக்கிய மொழிகளைப் பார்ப்போம். (அதாவது, 5 கோடி பேருக்கு மேல் பேசும் மொழிகள்)

பெங்காலி 9.72 கோடி (வட்டார மொழி பேசுவோர் 1.03%), மராத்தி 8.30 கோடி (0.24%), தெலுங்கு 8.11 கோடி (0.25%), தமிழ் 6.90 கோடி (0.14%), குஜராத்தி 5.55 கோடி (0.72%), உருது 5.07 கோடி(0.11%).ஆக,
முக்கிய மொழிகளில் வட்டார மொழியினர் வெறும் கால் சதவிகிதம்தான். குஜராத்தியில் முக்கால் சதவிகிதம், அதிகபட்சம் பெங்காலியில் கூட ஒரு சதவிகிதம்தான். ஆனால், ஹிந்தியில் மட்டும் வட்டார மொழியினர் 39%. வாவ்..! (போஜ்பூரி பேசுபவர்கள் மட்டுமே 5.05 கோடி)

உண்மையிலேயே அவை தனி மொழிகளா, வட்டார மொழிகளா என்னும் விவாதத்தில் இறங்க எனக்குத் தகுதி கிடையாது. ஆனால், 39% என்பது பெரிய நம்பர்… சந்தேகத்தைத் தருகிறது.

ஹிந்தியின் ஆதிக்கத்தால் அவதி, போஜ்பூரி போன்ற மொழிகள் சொல்வளத்தை இழந்துவருகின்றன. வெளியிடங்களில் வேற்றுமொழி ஆதிக்கம் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளிலும் நுழைந்து தாய்மொழியை அழித்துவிடுகிறது.

நேற்று ஒரு பதிவைப் பார்த்தேன். உ.பி மாநிலத்தில் ஹிந்தி பாடத்தில் 10 லட்சம் பேர் தேர்வில் தோல்வியடைந்தனர் என்றால் நாம் சிரிக்கிறோம். ஆனால், இதில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர்களுக்கு ஹிந்தி தாய்மொழி இல்லை. அதனால்தான் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்று பதிவர் கருத்துக் கூறியிருந்தார். சிந்திக்கவேண்டிய விஷயம்தான்.

இப்படி வட்டாரமொழிகளை ஏன் ஹிந்தியாக எடுத்துக்கொள்ளவேண்டும்? இந்தியாவில் 44% பேர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று சொல்வதற்கும், இந்தியாவில் 26% பேர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதற்கும், தாக்கத்தில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பாருங்கள்…!

ஆதாரம் – 2011 சென்சஸ் அறிக்கை (http://www.censusindia.gov.in/2011Cen…/C-16_25062018_NEW.pdf)

Leave a Reply