FEATUREDLatestNature

இது மரங்கொத்தி இல்லை கொண்டலாத்தி

Spread the love

இது மரங்கொத்தி இல்லை கொண்டலாத்தி
EURASIAN HOOPOE(Upupa epops)

இந்தப் பறவைக்கு, கொண்டலாத்தி என்கிற ஒரேயொரு ஒற்றைப் பெயர் மட்டுமல்லாது, நமது தமிழில் பல பெயர்கள் இருக்கிறது…

ஒவ்வொரு பகுதியிலும், அங்கு வாழ்கிற மக்களால் இந்தப் பறவைக்கு மட்டுமல்லாது, இங்கேயே நிலைத்து வாழ்கிற ஒவ்வொரு பறவைகளின் நிறம், உருவத்தோற்றம் மற்றும் அதன் செயல்படும் விதம் போன்ற பல காரணங்களைக் கொண்டு அதற்கேற்றவாறு பலவித பெயர்களை வைத்து அழைத்திருக்கிறார்கள். ஆகவேதான் ஒரே பறவைக்கு இடத்திற்கு இடம் மாறுபட்ட பெயர்களோடு, பல பெயர்கள் இருப்பதைக் காணலாம்…

அந்த வகையில் இதற்கும்,
கொண்டலாத்தி…
சாவல்குருவி…
புளுக்கொத்தி…
எழுத்தாணிக் குருவி…
கொண்டை வளர்த்தி…
கொண்டை உலர்த்தி…
விசிறிக்கொண்டைக் குருவி…
இதில்லாமல் எங்கள் ஊரில் ஒரு வயதான ஆயா இதை சுடுகாடுதூத்தி(தூற்றி) என்றுதான் சொல்லும் அதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் பலமுறை சுடுகாட்டுச் சாம்பலில் புரண்டு புரண்டு குளியல் நடத்துவதைக் கண்டிருக்கிறேன். உங்கள் பகுதியில் இதற்கு வேறு பெயர்கள் இருக்கிறதா என்பது பற்றியும் இதனோடான உங்களுக்கு எதாவது அனுபவம் இருந்தால்கூட சொல்லுங்கள்…

இன்னொன்றை இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டும், சில பகுதிகளில் மட்டுமல்ல பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் கூட இதை “மரங்கொத்தி”-என குறிப்பிடுகிறார்கள். ஆனால் இது மரங்கொத்தி இல்லை.
அவர்கள் அனைவருமே மரங்கொத்தியை இதுவரை கவனிக்காமல் இருந்தது கூட இதற்கு மரங்கொத்தி எனப்பெயரிட்டு அழைப்பது காரணமாக இருக்கலாம்…

வேண்டுமென்றால் இதை மண்கொத்தி எனலாம் காரணம் இது மரங்கொத்திபோல் டொக் டொக் என மரத்தைக் கொத்தாமல் தரையில் மண்ணைக் கொத்தி, கிளரி புழுபூச்சிகளைப் பிடித்துத் தின்னும். ஒருவேளை இதன் நீண்ட வளைந்த அலகைப்பார்த்து “மரங்கொத்தி” எனக்கூட எண்ணியிருக்கலாம்…

சேவலைப்போன்ற கொண்டயின் காரணமாக இதை “சாவல் குருவி” எனவும், கொண்டையே இதன்முக்கிய அடையாளமானதால் கொண்டலாத்தி எனப் பெயரும்,
நீண்ட எழுத்தாணி (எழுத்தாணி தெரியுமல்லவா-திருவள்ளுவர் படத்தில் அவரது கையில் இருப்பது) போன்ற அலகினால் எழுத்தாணிக்குருவி எனப் பெயரிட்டு அழைப்பது கூட மிகப் பொருத்தமானதுதான்…

இதன் வாழிட எல்லைக்காகவும் இணையை அழைக்கவும் இது, ஹூப்பாப்பாப்…
ஹூப்பாப்பாப்…
எனச் சத்தமிடும். இந்த ஒலியுன் காரணமாக ஆங்கிலத்தில் இதற்கு “ஹூப்போ” எனப் பெயர் வந்திருக்கலாம்…

உணர்ச்சியை வெளிப்படுத்தும்போதும், பறக்கத்துவங்கும்போதும் அதன் தலை உச்சியிலுள்ள கொண்டையை(crown) கருநுனி கொண்ட விசிறிபோல் விரித்து விரித்து சுருக்கும். அதனால் இதை, விசிறிக்கொண்டை குருவி என்கின்றனர்…

நமது முன்னோர்கள், இப்படி பல பெயர்களை அவற்றிற்கு வைத்து அழைக்குமளவு அந்தப் பறவைகளோடு எவ்வளவு தூரம் பரிச்சயமாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் இங்கு உணர வேண்டும். இன்றைக்கு பெரும்பாலானவர்களுக்கு பறப்பதெல்லாம் பறவைகள்தான், காண்பதெல்லாம் குருவிகள்தான் என்கிற நிலையே இருக்கிறது…

எமது சிறிய வயதில் எங்க கிராமத்தில் ஓட்டுவீட்டின் சுவற்றிற்கும் ஓட்டிற்கும் இடையில் வீடுகளில் கூட்டை அமைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். சிறிய துவாரத்தில்கூட நுழைந்துவிடும். இதன் அழகிலும் இதன் சத்தத்திலும் எப்போதும் ஈர்க்கப்பட்டுக் கொண்டே இருப்பேன். குஞ்சுகளை காணவேண்டும் என்கிற ஆவலில் ஓட்டைப்பிரித்து கூட்டைப்பார்க்கப் போன நான் அங்கிருந்த நாற்றத்திற்கிடையே இறகுகளில்லாமல் மொட்டையாக தமது தடித்த பெரிய வயைத்திறந்த குஞ்சுகளை கண்டு ஒருவித அறுவெறுப்புடன், அப்படியே அதேபோல கூட்டை மூடிவிட்டு வந்த அனுபவமும் உண்டு….

இவற்றின் கூடுகள் என்பது பழையதுணி, புல், இறகுகளுடன் விரும்பத்தகாத நாற்றத்துடன் இருக்கும். நாற்றத்துற்கு காரணம் உள்ளே இருக்கும் பொருட்களும் பாதுகாப்பிற்காக பெண்குருவியின் கழுத்துப்பகுதியில் சுரக்கும் ஒருவித சுரப்பிதான் காரணம்…

ஓட்டுவீடுகள் குறைந்த இந்நாளில் வேறுவாழிடங்களைத் தேடிக்கொள்கிறது.
ஆனால் மரங்கொத்திகள் (woodpecker), பொதுவாக மனிதக்குடியிருப்புகளின் அருகில் மனிதர்களை நெருங்கிவாழும் தன்மையுடையதல்ல என்பதையும் இப்போது அறிவோம்…

தமது வாழிட எல்லையை வரையறுத்துக் கொள்ளும் இந்தக் கொண்டலாத்தி, மற்ற எதிரி பறவைகள் கூடு இருக்கும் பகுதிக்கு வந்தால் கூச்சலிட்டு தமதுகூரிய அலகால் கோபமாக கொத்தி கொத்தி விரட்டும்…

சமீபத்தில்ஒருநாள் அழகாக புழுதிமண்ணில் ஒரு இணைக் கொண்டலாத்திகள் குளியல் நடத்திக்கொண்டிருந்தைப் பார்த்தேன். அடிக்கடி புழுதி மண்ணில் மண்குளியல் நடத்தும். தரையில் அது அசைந்து நடப்பது ரசிக்கக் கூடிய அழகு….

பாலைவனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும் இவை, அரபு நாடுகளின் கதைகளில் இவற்றிற்கு நீண்ட நெடிய தொடர்பு உண்டு. இஸ்ரேல் நாட்டின் தேசியப்பறவைகூட இந்தக் கொண்டலாத்திதான். தமிழ் இலக்கியங்களில்கூட இதுபற்றி பதிவு செய்திருக்கிறார்கள்..

அழகான உருவத்தைக்கொண்ட இவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இவையெல்லாம் இல்லாவிட்டால் பூச்சிகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்…

உங்களுடைய கருத்துகளை மறவாமல் சொல்லுங்க,
என்றும் தேடலுடனும், பேரன்புடனும்…
Ramamurthi Ram

#மீள்

படம்: Divya Barathi Ramamurthi

Leave a Reply