HealthLatestSocialmediaஇயற்கை மருத்துவம்

ஆதண்டை மூலிகை

Spread the love

ஆதண்டை மூலிகை

முட்களுடன் கூடிய சிறிய இலைகளைக் கொண்ட, புதர்போல வளரும் தன்மையுடையது ஆதண்டைச் செடி

முட்கள் நிரம்பிய புதர்ச் செடியாக இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக, தமிழரின் வாழ்விலும், உணவிலும் ஒன்றெனக் கலந்ததுதான், ஆதண்டை எனும் மூலிகைச்செடி.

ஊறுகாய்
வறண்ட நிலங்களிலும் உயரமான மலைப்பகுதிகளிலும் செழித்து வளரும் பல இயற்கை மூலிகைச்செடிகளில், ஆதண்டையும் ஒன்று. செடி போலவும், கொடி போலவும் படர்ந்து வளரும் ஆதண்டை, ஆலிலை போன்ற இலைகளையும், உருளை வடிவ பழங்களையும் கொண்டது. கோடைக்காலத்தில் பூக்கள் பூத்து, மழைக்காலத்தில் காய்க்கும் கால்சியம் சத்துமிக்க ஆதண்டை பழங்கள், சிறந்த மருத்துவ பலன்கள் நிரம்பியவை. காய்களை வற்றலாக, ஊறுகாயாக பயன்படுத்துகிறார்கள்.

குளிர்காலம்
கருஞ்சுரை, காத்தோடி கொடி, காட்டுக்கத்திரி எனும் பெயர்களிலும் அழைக்கப்படும் ஆதண்டைச்செடியின் இலைகள், பூக்கள் மற்றும் வேர்கள் மருத்துவ குணமிக்கவை. சுவாச கோளாறுகள், இரத்த சர்க்கரை பாதிப்பு, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்தும் வல்லமை பெற்றது

குளிர்கால மூலிகை ஆதண்டை.

குளிர்காலத்தில் மழை மற்றும் ஈரத்தன்மை நிறைந்த காற்றின் காரணமாக, ஏற்படும் கிருமித்தொற்றால், சுவாசம் தொடர்பான பாதிப்புகளும், பல்வேறு வியாதிகளும் ஏற்படுகின்றன.

நோயெதிர்ப்பு சக்தி
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குச் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள், குளிர் காலத்தில் அதிகம் பரவுவதற்கு, காற்றின் ஈரமும், மழையுமே காரணம் என்றாலும், அடிப்படை காரணம், குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியின் குறைபாடே

எனவேதான், மழைக்காலங்களில் வீடுகளில். நோயெதிர்ப்பு சக்திமிக்க ஆதண்டைக் கீரையை சமைத்து உண்டு வந்தார்கள். மேலும், சில சமூகங்களில் மூதாதையர் வழிபாடு நாளான அமாவாசை நாளிலும், ஆதண்டைக் கீரையை உணவில் சேர்க்கும் வழக்கமும் ஏற்பட்டது.

மழைக்காலம்
குளிர் காலத்தின் ஆரம்ப மாதமான ஆடி மாதத்தில் உணவில் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பல்வேறு ஊட்டச் சத்துக்களை வழங்கும் ஆதண்டையை உணவில் சேர்த்தார்கள். இதன் மூலம், பசியைத் தூண்டி, உடலில் செரிமான ஆற்றலை அதிகரிக்கிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, குளிர்கால தொற்று வியாதிகளான சளி, இருமல் மற்றும் ஜூரத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இதனால் தான், இன்றும் கிராமங்களில் சிலவீடுகளில் ஆதண்டையை விடாமல், மழைக்காலத்தில் தொடர்ந்து சமைத்து, உடல் நலத்தைக் காத்து வருகிறார்கள்.

ஆதண்டையின் பயன்கள் மழைக் காலத்தில் மட்டும்தானா? மற்ற காலங்களில் இல்லையா? என்று யோசிக்க வேண்டாம். வருடம் முழுவதும், மனிதர்களின் உடல்நலம் காக்கும் தன்மைகளில், முன்னிலைபெற்ற மூலிகைகளில் ஒன்றாக இருப்பது, ஆதண்டையும் தான். இதன் மற்ற பலன்களையும், அறிந்து கொள்வோம்.

இரத்த சர்க்கரை
சித்த மருத்துவத்தில், ஆதண்டை இலைகள் மற்றும் பழங்கள், இரத்த சர்க்கரை பாதிப்புகளை குணமாக்குவதில் மருந்தாகின்றன. தினமும் இரண்டு ஆதண்டை இலைகளை மென்று வந்தாலே ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.

எலும்புகளை வலுவாக்க
இயல்பிலேயே கால்சியம்சத்து நிரம்பிய ஆதண்டை இலைகளை, உணவில் கீரை போல கடைந்தோ, கீரைக்கூட்டு போல சமைத்தோ, இரசம் போன்று செய்தோ அல்லது துவையல் போல அரைத்தோ சாப்பிட்டு வர, உடலில் எலும்பு தொடர்பான பாதிப்புகள் நீங்கி, எலும்புகள் வலுவாகும். ஆதண்டைக் காய்களை காயவைத்து, உப்பிட்டு வற்றல்போல வறுத்தோ அல்லது ஊறுகாய்போல செய்தோ வைத்துக்கொண்டு, சாப்பிட்டுவரலாம்.

தலைவலி
கடுமையான தலைவலி தோன்றும் சமயங்களில், ஆதண்டை இலைகளை நன்கு அலசி சாறெடுத்து, அந்தச்சாற்றை நெற்றிப்பொட்டில் இதமாகத் தடவி வர, தலைவலி விரைவில் குணமாகி விடும்.

சிறுநீர் அடைப்பு
வயது முதிர்ந்த சிலருக்கு, உடல்நல பாதிப்பாலோ அல்லது சிறுநீரக பாதிப்பாலோ சிறுநீர் வெளியேறாமல், சிரமப்படுவார்கள். இதைப்போக்க, மோரில் ஆதண்டை இலைகளை அரைத்து, அந்த விழுதை நீரில் கலக்கி பருகி வர, சிறுநீரக அடைப்பு நீங்கி, சிறுநீர், சீராக வெளியேறி, உடல் பாரமும், மன பாரமும் குறைந்து, நலம் பெறுவார்கள்.

சுவாசக் கோளாறுகள்
ஆதண்டை வேர்கள், சளி இருமல் போன்ற சுவாச பாதிப்புகளை சரியாக்கும் மருந்துகளில் பயன்படுகின்றன. மேலும், ஆதண்டை வேர்கள், விஷக்கடிகளுக்கும் மருந்தாகின்றன.

கண்பார்வைக் குறைபாட்டுக்கு
நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பொதுவான கண்பார்வைக் கோளாறுகள் எல்லாம், 24X7 மொபைல் பயன்பாட்டால், தற்காலத்தில் இளையோர் பலருக்கும் ஏற்பட்டு, கண்ணாடி அணிந்தும் தீராத கண் பார்வை பாதிப்புகளால், சிரமப்படுகின்றனர். இதற்கு, ஆதண்டை இலை நல்ல தீர்வைத் தரும்.

ஆதண்டை இலைகளை நன்கு அலசி உலர்த்தி, நல்லெண்ணையில் இட்டு சூடாக்கி, இளஞ்சூட்டில் சற்று நேரம் ஆற வைத்து, பின்னர் அந்த எண்ணையை வடிகட்டி, தலையில் நன்றாக மயிர்க்கால்கள் வரை இந்த ஆதண்டை எண்ணையை அழுத்தித் தேய்த்து, சற்று நேரம் ஊற வைத்து, அதன்பின் குளிர்நீரில் குளித்து வர, கண் பார்வை மங்குவது, கண் பார்வை மறைப்பது போன்ற கண் பாதிப்புகள் குணமாகி, கண்கள் பொலிவாக விளங்கும்.

மூட்டுவலிக்கு ஆதண்டை வேர் தைலம்.
மூட்டு வலி இல்லாதவர்களைப் பார்ப்பதே அரிதான இன்றைய காலத்தில், மூட்டுவலிகளுக்கு சிறந்த தீர்வை, ஆதண்டைச் செடியின் வேர் மூலம் தயாரிக்கப்படும் தைலம் அளிக்கிறது.

ஆதண்டை வேர், சங்கம் செடி வேர், புங்க வேர் இவற்றை இடித்து சலித்து தூளாக்கி வைத்துக்கொண்டு, அதில் முடக்கற்றான் இலைகளின் சாறு, சிறிய வெங்காயச்சாறு இவற்றைச்சேர்த்து ஒரு மண் சட்டியில் வைத்து, ஆமணக்கெண்ணை என்னும் விளக்கெண்ணையை அதில் கலக்கவேண்டும்.

எப்படி பயன்படுத்தலாம்?
சூரியப்புடம் எனும் முறையில் வெயிலில் சில நாட்கள் இந்த ஆதண்டை வேர்த்தூள் எண்ணையை வைத்து வர, எண்ணை வேர்த்தூளில் கலந்து தைலப்பதத்தில் மாறும். இந்தத் தைலத்தை, வலியுள்ள மூட்டுக்களில், நன்கு தடவி வர வேண்டும்.

இதன்மூலம் சில நாட்களில், மூட்டுக்களின் வீக்கம் போன்ற பாதிப்புகள் குறைந்து, மூட்டுக்கள் வலுவாகி, மூட்டு வலிகள் குணமாகிவிடும்.

Summary
ஆதண்டை மூலிகை
Article Name
ஆதண்டை மூலிகை