அய்யூர் வனம்

Spread the love

அய்யூர் வனம்…!
******************
இந்த வனப்பகுதியை குறித்து எனக்கு அறிமுகபடுத்தி வழிகாட்டியவர் முகநூல் நண்பர் அருண்.

தேன்கனிகோட்டை வனச்சரகத்தில் இருக்கும் அய்யூர் காவேரி வனவிலங்கு சரணாலயத்தின் உள்ளே அமைந்திருக்கிறது.

நாங்கள் கன்யாகுமரியில் இருந்து கரூர்,சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக தேன்கனிகோட்டை வந்து அய்யூர் வனத்தை அடைந்தோம்.

மிக அமைதியான சூழல். தங்குவதற்கு 300 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரையிலான அறைகள் இருக்கிறது. விருப்பப்படும் உணவை சமைத்து தர சமையல் கூடமும், ஆட்களும் இருக்கிறார்கள்.

எங்கள் பக்கத்து காட்டேஜில் ஒரு வாரமாக ஒரு குடும்பம் தங்கி இருக்கிறார்கள். உடல் நலம் குன்றிய தனது அம்மாவின் மன அமைதிக்காக இங்கே அவரை அழைத்து வந்து குடும்பத்தோடு தங்கி இருக்கிறார் வெளிநாட்டில் பணிபுரியும் அவர் மகன்.

ஆம்….உண்மைதான் இந்த அழகிய, அமைதியான சூழலில் தங்கி இருந்தாலே எப்பேர்பட்ட நோயும் காணாமல் போய்விடும் போலும்.

பறவைகளின் சத்தமும், மிதமான குளிரும், சோலை வனங்களும் மனதை கொள்ளை கொள்கிறது.

இங்கு வனத்தினுள்ளே சில வன கிராமங்கள் இருக்கிறது. அதில் கடைசி கிராமம் பெட்ட முகிலாலம். இங்கு செல்லும் வழியெங்கும் அடர்ந்த காடுகள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் யானைகள் இடம்பெயரும் பகுதி இது. கர்னாடகத்தின் பண்ணார்கட்டா காட்டிலிருந்து யானைகள் கூட்டம்,கூட்டமாக இடம்பெயர்ந்து இந்த வழியாகத்தான் சாணமாவு காப்புகாட்டிற்கு செல்கிறது.

தங்கும் விடுதியை சுற்றிலும் பாதுகாப்பிற்காக அகழியும், சுற்றிலும் சூரிய மின்வேலியும் அமைத்திருக்கிறார்கள். சிலநேரம் மின்வேலியின் வெளியே யானைகள் வலம் வருவதை காணலாம்.

அய்யூரில் இருந்து பெட்டமுகிலாலம் செல்லும் வழியில் இருக்கும் மூங்கில் ஏரியில் தினமும் மாலையில் யானை கூட்டங்கள் தண்ணீரில் ஆட்டம் போடும். அதை பாதுகாப்பாக நின்று ரசிப்பதற்கு ஏர்மாடம்(Watch tower) கட்டியிருக்கிறார்கள்.

அய்யூரை சுற்றி ஒகேனக்கல், தளி, உரிகம் போன்ற சுற்றுலா தளங்கள் இருக்கிறது. இங்கு தங்கியபடியே அங்கெல்லாம் சென்று வரலாம்.

தளியை தென்னிந்தியாவின் இங்கிலாந்து என்கிறார்கள். மலைமேல் அமைந்திருக்கும் இந்த ஊர் அழகான மலைவாழ்ஸ்தலம்.

உரிகம் நீரோட்டம் காண கொள்ளை அழகு. இயற்கையின் அழகை ஆசைதீர ரசிக்கலாம்.

ஒகேனக்கல் குறித்துதான் உங்களுக்கு தெரியுமே… அருவிகுளியல், பரிசல் பயணம், மீன் உணவு என்று அனுபவித்து வரலாம்.

வாய்ப்பு கிடைக்கும்போது அய்யூர் வனத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள். இயற்கையை உணருங்கள். அதை நம் அடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பேன் என்று சபதமெடுத்து கொள்ளுங்கள். நன்றி…!