FEATUREDHealthLatestTOP STORIES

அச்சம் எதற்கும் மருந்தல்ல – தீதும் நன்றும் பிறர் தர வாரா

Spread the love
அச்சம் எதற்கும் மருந்தல்ல – தீதும் நன்றும் பிறர் தர வாரா

—  வானகம் குமரவேல் ஐயா

நோய் கிருமியால் உலகம் அஞ்சி கிடக்கும் வேளையில், அஞ்ச வேண்டாமென்று சொல்கிறேன்.

அச்சம் எதற்கும் மருந்தல்ல!. எண்ணித் துணிக என்பதே நம் மொழியின் சிறப்பு. தீதும் நன்றும் பிறர் தர வாரா! என்ற உயிரோட்டமான வார்த்தைக்கான பொருள் புரியும் காலமிது. அதுவும் அரை நூற்றாண்டு காலமாக வளர்ச்சி என்கிற பெயரிலும் அறிவியல் என்கிற பெயரிலும் நாம் இயற்கைக்கு இழைத்த தீங்கிற்கு அளவு தான் உண்டோ?

இயற்கையில் இருந்து எவனொருவன் மிகக்குறைவாக நுகர்கிறானோ, அவனே இயற்கைக்கு மிக நெருக்கமானவன்!”

ஐயா நம்மாழ்வார் சொல்லுவார் – ” இயற்கையில் இருந்து எவனொருவன் மிகக்குறைவாக நுகர்கிறானோ, அவனே இயற்கைக்கு மிக நெருக்கமானவன்!” அவர் எத்தகைய தீர்க்கதரிசி என்று எண்ணி வியக்கிறேன்.

அக்குபங்சர் தத்துவத்தின்படியும் உலக தத்துவத்தின்படியும் *”நன்மையும் தீமையும் சேர்ந்தே தான் இருக்கும்“*.

ஐயா சொல்லும்போது, நம் மக்கள் கூடுதலாக செலவழிக்கும் இடமென்று பார்த்தோமானால், நம்மிலும் நம் மக்களை மேன் மக்களாக்குவதாக எண்ணி, கல்விக்காக செலவிடுவர். அடுத்ததாக, பெரிய மருத்துவமனைகளில் உயிரையும் பெரும் பணத்தையும் பணயம் வைப்பது. வாழ்நாளின் பெரும் உழைப்பை ஒரு நாளில், திருமணம் மற்றும் விழாக்கள் என்கிற பெயரில் விரயம் ஆக்குவது!
இவற்றிற்கெல்லாமும் இது போதாத காலம் போலிருக்கிறது.

பள்ளிகள் அனைத்தும் மூடப்படுகின்றன. லேசான காய்ச்சலுக்கு மருத்துவமனை வராதீர்கள் என்று கூவுகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதெல்லாம் விட, இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்வுக்கு சென்றிருந்தேன். இருபத்தைந்து நபர்களே வந்திருந்தார்கள். “இரண்டாவது ஈடு இட்லி ஊத்தலாமா?” என்பது நளபாகனின் நல்ல கேள்வி.

எத்தனை இலட்சங்களை சேமித்தது இந்த கொரோனா. கடன் வாங்காத இந்த திருமணங்களை எல்லாம் காலம் தந்ததுக்கு வாழ்த்தி மகிழ்கிறேன்! இதையெல்லாம் முன்பே அறிந்துதான் வள்ளல் பெருமான் – பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்றாரோ?!

நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொந்தரவுகளை தொலைக்காட்சி தோலுரித்துக்கொண்டிருக்கிறது. நாம் அதுவழியாக நடந்த நன்மைகளை சற்று யோசிப்போம்!

நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொந்தரவுகளை தொலைக்காட்சி தோலுரித்துக்கொண்டிருக்கிறது. *நாம் அதுவழியாக நடந்த நன்மைகளை சற்று யோசிப்போம்!*.

இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுத்த உலக படங்களிலும் தற்போது எடுத்த படங்களிலும் தெரிவது, வான்வெளியில் மாசு குறைந்துள்ளது; தூசு குறைந்துள்ளது; வாரிசுக்கு வளம் சேர்ப்பதாய் எண்ணி அவசர அவசரமாக ஓடும் மக்கள் ஓட்டம் குறைந்துள்ளது. இந்த வாரம் நடந்த, ஒருநாள் மக்கள் உள்ளிருப்பில், என் மாநகர நண்பர் ஒருவர் அழைத்து – *”ஐம்பது, அறுபது ஆண்டுக்கு முன் இருந்த சென்னையை நான் உணர்ந்தேன்; மக்கள் நடமாட்டத்திலும், இயற்கை சூழலிலும்”* என்று கூறினார். இந்த ஐம்பது ஆண்டுகாலமாக, அதிக பேரிடர்களை சந்தித்த நபர்களாக நாம் இருக்கிறோம். *பேரிடர்களிலிருந்து நம்மை மீட்டெடுக்கும், மாமனிதர்களை பெற்ற சமூகமும் நாமே!*.

இந்த சமூகத்தின்பால் அக்கறை கொண்ட இளைஞர்கள் கூறுகிறார்கள், ஊர் திரும்புவோம்! என்று. அரசோ, இன்று வீடு திரும்புங்கள்! என்கிறது.

இந்த சமூகத்தின்பால் அக்கறை கொண்ட இளைஞர்கள் கூறுகிறார்கள், *ஊர் திரும்புவோம்!* என்று. அரசோ, இன்று *வீடு திரும்புங்கள்!* என்கிறது.

பிறரைப்பற்றி பேசுவதை விட, என்னைப் பற்றி பேச நினைக்கிறேன். பல ஆண்டு காலமாக, *பயணம் பண்ணுவதே என் வழக்கமாக வைத்துள்ளேன்.* என் குடும்பத்தில் நடந்த துயரத்தின் போதும் ஊரில் நடந்த பேரிடரின்போதும், அடுத்தடுத்த நாட்களில் என் பயணத்தை தொடங்கியிருக்கிறேன்.

இன்று எனக்கும் இயற்கை கட்டாய ஓய்வை தந்துள்ளது. *சட்டை இல்லா வாழ்க்கை என்ற சாட்டையடி என்மேல் விழுந்திருக்கிறது!*. ஆயினும், ஐயா நம்மாழ்வாரின் சுயசார்பு வாழ்வுக்கான அடிநாதம் புரிந்ததால், பரபரப்பு இல்லாத ஒரு நிலையிலும் *வாழும் கிராமத்திலும்* என் இருப்பு உள்ளது.

மாடியிலோ தோட்டத்திலோ இருக்கும் செடிகளோடு உறவாடுங்கள். அவற்றோடு உறவாட நீங்கள் கைகளை கழுவ வேண்டியதில்லை.

*இன்றும் நாம் மாறவேண்டிய இடம் இருக்கிறது!*. உங்களை பயமுறுத்தும் இடத்தில் இருந்து தெளிவை நோக்கி வாருங்கள். தொல்லை காட்சியிலிருந்து வெளியே வாருங்கள். நம் கையிலிருக்கும் வேக வேகமாக தள்ளும் கருவியிலிருந்து தள்ளி இருங்கள். *மாறுத்தலுக்கான வாசல் என்றும் திறந்தேயிருக்கிறது!*. நல்ல புத்தகங்களை கையில் எடுங்கள். மாடியிலோ தோட்டத்திலோ இருக்கும் செடிகளோடு உறவாடுங்கள். அவற்றோடு உறவாட நீங்கள் கைகளை கழுவ வேண்டியதில்லை. முகத்தோடு முகமாய் உறவாடலாம். அவைகளும் உங்களை கைகழுவ போவதில்லை.

என்றோ ஒருநாள் மூட்டைக் கட்டிப்போட்ட பல்லாங்குழி, தாயகட்டை, பரமபதம் முதலியவற்றை கையில் எடுங்கள். அவை உங்களுக்கு வாழ்வளிக்கும். நாளை எதுவும் கிடைக்காது என்று உங்கள் சவப்பெட்டியை நிரப்பாதீர்கள். யாருமில்லாத இடத்தில் நமக்கு மட்டும் என்ன வேலை!. *பகுத்துண்டு வாழ்வதே நம் பண்பு*. நினைத்ததெல்லாம் நடக்கவில்லை என்று எண்ணி கவலைப்படாமல், இருப்பதைக் கொண்டு இன்புறுவோம். *இக்காலமும் கடந்து போகும், கவனமாக இருந்தால்!*.

அரை நூற்றாண்டுக்கு முன் காலரா வந்தபோது, கொத்து கொத்தாக மனிதர்கள் இறந்தார்கள். அவர்களை அடக்கம் செய்வதற்கு ஆளில்லாமல், அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்தும் ,துப்புறவு தொழிலாளர்களை கொண்டும் ,அடக்கம் செய்த வரலாறு உண்டு அதை கடந்துதான் இன்று இத்தனை மக்களும் இருக்கிறோம். இதுபோன்ற பழைய அனுபவங்களை புதுப்பித்துக்கொண்டு, *இயற்கையின் போக்கை எதிர்திசையில் திருப்பாமல், மாறுவோம்!*.

ஒன்றைச் சொல்லி இத்தொடரை தொடரலாம் என்று எண்ணுகிறேன்.

சிக்கன் 65 எல்லோருக்கும் தெரிந்த பெயர். பலருக்கும் பிடித்த உணவு. இது பெயர்காரணம் கொண்டது. 65 நாட்களே ஆன கோழியின் இளம் உடலை கொண்டது. ஆனால் அதற்கு முன்பாக, நாம் உண்ட விடைக்கோழி என்பதோ, நான்கு மாதம் (120 நாட்கள்) ஆனதாக இருக்கும்.

அதன் ஆயுளை பாதியாக்கியது நம் ஆராய்ச்சியின் சிறப்பு. அதோடு விட்டோமா என்பதே கேள்வி. அதையும் பாதியாக்கி, 28ல் இருந்து 30 நாட்களில் கோழிகள் பிடிக்கப்படுகின்றன. அதுவும் நம் பழைய நான்கு மாத கோழியின் எடையை விட கூடுதலாக! *நோய் என்று ஏற்படும்போதெல்லாம் பாவம் பறவைகள் பழியாகிவிடுகிறது.*

வேகமாக வளர்த்த கோழிகளை இயந்திரம்கொண்டு புதைக்கும் மனிதம் உயர்ந்த வர்க்கத்தின் காணொளிகளையும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். உயிர் பயம் அனைத்து உயிரையும், அனைத்து உலகையும் உறைய வைக்கிறது. எதையும் வேகமாக விஞ்ஞானம் கொண்டு வளர்த்திடுவோம் என்று மார்தட்டுகிறோம். *இயற்கையோ, நொடியில் புரட்டிபோடுவேன் என்று புரட்டிப்போட்டுள்ளது!*

“இனியேனும் திரும்புவோம் இயற்கைக்கு! இனிதாகட்டும் வாழ்க்கை!”.

இன்று அவசர தேவையாய், ஐயாவின் மொழி –
*இயற்கை ஒரு போதும் தவறு செய்வதில்லை*🙏

நன்றி
வானகம் குமரவேல் ஐயா அவர்களின் அனுபவப் பதிவு…

Leave a Reply