Nature

பேருதான் மீன்கொத்தி

Spread the love

பேருதான் மீன்கொத்தி…

white-throated kingfisher
(Halcyon smyrnensis)
மீன்கொத்தி…
வெண்மார்பு மீன்கொத்தி…
பெருமீன் கொத்தி…
கலக்க குருவி…
விச்சுளி…
விச்சிலி…
சிச்சிலி…
என இந்தப் பறவைக்கு தமிழில் இப்படி பல பெயர்கள் இருக்கிறது…

இருந்தாலும், இப்போதைக்கு பலரிடம் புழக்கத்தில் உள்ள பெயர், “வெண்தொண்டை மீன்கொத்தி” என்பது, இது ஆங்கிலப் பெயரான white-throated kingfisher என்பதிலிருந்து அப்படியே மொழிப் பெயர்த்து, அப்பட்டமாக அடிச்சுவிட்ட பெயர். ஆனால் இந்தப் பெயர்தான் இப்போதைக்கு தமிழில் எழுதுபவர்களில் கூட பலரிடம் புழக்கத்தில் உள்ளது…

மீன்கொத்திகளில் ஆற்று மீன்கொத்தி, நீர் மீன்கொத்தி, மர மீன்கொத்தி என உபகுடும்ப வகைகள் உண்டு. இவற்றில் இது மரமீன்கொத்தி வகையினில் வருகிறது…

இதற்கு பெயர் என்னவோ மீன்கொத்திதான். நீர்வளம் உள்ள பல இடங்களில் இதன் முக்கிய உணவான மீன்களைப் பிடித்துக்கொண்டு, இது மீன் கொத்தியாகவேதான் இருக்கிறது. ஆனால் எமது வறட்சியான நீர்நிலைகளற்ற குறிப்பாக மீன்களே இல்லாத, ஏன் கருவாடுகளைக்கூட காணாத காய்ந்த பகுதிகளில்கூட சாதாரணமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது….

அதற்கேற்றால் போல இது மீனை வாயில் வைத்திருக்கும் படத்தை நான் அதிகம் பார்த்ததில்லை. இதன் உணவுப் பட்டியலில் எலி, பல்லி, ஓணான், தவளை, நண்டு, பாம்பு என அனைத்துமே உண்டு சில அசந்தர்ப்பமான நேரங்களில் இதன் உருவத்தைவிட குறைந்த உருவத்திலுள்ள சிறு சிறு பறவைகளை கூட இது விட்டுவைப்பதில்லை…

இந்த மீன் கொத்திகளின் உருவம் என்பது,
பெரியதலையோடு… மிநீண்டகூரிய பெரிதானஅலகோடு, குட்டைக்கால்கள், குட்டையான வால்பகுதி, அடர்ந்த எடுப்பான நிறம் அமையப்பெற்று, மீன்கொத்திகள் நம்மை எப்போதுமே கவர்ந்திழுக்கக்கூடியவை…

எல்லாச் சூழ்நிலைகளையும் அனுசரித்து வாழும்படி தம்மை மாற்றிக் கொண்ட பறவை இது. சாதாரணமாக மின்கம்பிகளில் “பனங்காடை” களைப் போலவே அமர்ந்திருப்பதைக் காணலாம். பனங்காடைகளை மீன்கொத்தி என பிழையாக நினைத்துக் கொள்வோரும் உண்டு. திறந்தவெளிகளில் உள்ள மரங்களிலோ மின் கம்பிகளிலோ தமது உணவிற்காக காத்திருக்கும்…

பொதுவாக பெரும்பாலான பறவைகள் தமது இனப்பெருக்கத்திற்கா கூடமைக்க மரங்களையே சார்ந்திருக்கும். இது மரமீன்கொத்தி பெயர் கொண்ட வகையில் வந்தாலும், மற்ற மீன்கொத்தி வகைகளைப் போலவே இதுவும், மரப்பொந்துகள் போன்ற அமைப்பில் செங்குத்தான மண்சரிவில், கிடைமட்டமான வளைகளை உண்டாக்கி அல்ல ஏற்கனவே உள்ள பொந்துகளில் கூடமைத்துத்தான் முட்டைகளையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது…

இவை எழுப்புகிற ஒலி கிகிகிகிகி…. என நீண்டு வித்தியாசமாக குரல் எழுப்பும். மீன் கொத்தி என்றாலே நமக்கு சட்டனெ நினைவிற்கு முதலில் வருவது இதுதான். எல்லா இடங்களிலும் பரவி எளிதாக நமது கண்களில் பட்டு வாழ்வது கூட அதற்கு காரணம்….

பதினேழாம் நூற்றாண்டுகளில் இதை ஏராளமாக வேட்டையாடியிருக்கிறார்கள். இதன் இறகுகளை தொப்பிகளில் அழகாக செருகி வைத்து, அழகூட்டவேண்டும் என்கிற மொக்கை காரணத்திற்காகத்தான் வேட்டையாடியிருக்கிறார்கள்…

இந்தவகை மீன்கொத்திகள் பொதுவாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு வலசை போவதில்லை….

இவ்வளவு சிறப்பான அழகான பறவை பல்லுயிர்ச் சூழலை சமன்படுத்துகிற செயலை மிக நேர்த்தியாக செய்து கொண்டிருக்கிறது. இது மேற்கு வங்கத்தின் மாநிலப் பறவை என்பது கூடுதல் சிறப்பாகும்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு பறவையைப் பற்றி எழுதியது குறித்து மிக மகிழ்கிறேன். என்றென்றும் பேரன்போடு,
Ramamurthi Ram