Health

புகை தூற்றுதும்

Spread the love

புகை தூற்றுதும் !! (சமூக/வேதியியல் பதிவு)

குளிர்நாட்டில் இருந்துகொண்டு புகையின் வன்மைபற்றி எழுதவேண்டுமென்று தோன்றுகிறது. குளிர்காலம் வந்துவிட்டாலே இங்கிலாந்து நகர்களின் வீதிகளெங்கும் புகை மயமாகத் தெரியும். தெருவோரங்களில் புகைத்த சிகரெட் மிச்சங்களுக்கென்றே குப்பைத்தொட்டிகள் வைத்திருந்தாலும், அவை நிரம்பி வழிந்து வீதியோரத்தில், நடைபாதையில் என்று யாங்கும் கால்களுக்குத் தட்டுப்பட்டுத் தொலைக்கும். அவற்றைப் புறக்கணித்து நடையைத் தொடர்தல் என்பது மலப்பிசுக்கு படிந்த காலணியுடன் நடப்பதற்கு ஒப்பான அருவருப்பானது.

இங்கிலாந்துப் பேருந்து/தொடரூர்தி நிறுத்தங்களில், பயணங்களின்போது வியந்து பார்த்திருக்கிறேன். புகையிலையைப் பயன்படுத்தினால் வாய்ப்புற்றுநோய் வருமென்ற எச்சரிக்கைப் படம் போட்டிருக்கும் பையொன்றிலிருந்து, புகையிலைத் துணுக்குகளை எடுத்து மெல்லிய காகிதத்தில் போட்டு அதைச் சுருட்டி சிகரெட்டாக மாற்றி, வண்டியிலிருந்து இறங்கியவுடன் பற்றவைத்துக்கொள்ள ஏதுவாக காதோரத்தில் செருகிக் கொள்ளுகிறார்கள். எனக்கு, சிகரெட் செருகப்பட்ட அந்தக் காது அப்படியே அறுபட்டுப் போய்விட வேண்டுமென்று தோன்றும்.

என் சிறுவத்தில் இருந்து புகையை, புகை பிடிப்பவர்களைப் பிடிக்காமற்போனதற்கு முதற்காரணம் என் தந்தைதான். அவர் ஆழ்ந்து புகை பிடித்ததனாலும், அந்த ஒற்றைக் குடிசைக்குள் குழந்தைகள் இருக்கிறோம் என்றும் பாராமல் புகையை ஊதித்தள்ளி, போதை சேர்த்துக் கொண்டது மட்டுமல்ல, என்னைக் கடைக்குச்சென்று சிகரெட் வாங்கிவர வற்புறுத்துவார். இதனாலேயே, அவரை, அவர் விரும்பும் புகையை எனக்குப் பிடிக்காமல் போனது. அன்றிலிருந்தே புகைபிடிக்கும் யாருடனும் நான் அருகிப் பழகுவதில்லை. புகைபிடிக்கும் பெருமனிதர்களிடம் பேசவே கூசுவேன். இது சரியல்ல என்று தெரியும்…. ஆனால், இன்றுவரை மாற்றிக்கொள்ள ஏலவில்லை.

சினம் வந்தால், கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசி அடிக்கும் அப்பாவுக்கு, அவரின் இழிகொடுஞ்சொல்லுக்கு அஞ்சிக்கொண்டு, மளிகைப்பொருள்கள் வாங்கும்போது, சிகரெட்டுகளையும் வாங்கிவந்துத் தொலைப்பேன். அவ்வமயங்களில், கடைக்காரரிடம் சிகரெட் கேட்கக்கூசி வெட்கும்போது, அதைக் கடைக்காரர் புரிந்துகொண்டு, நான் வாங்கும் ஓரிரண்டு சிகரெட்டுகளை, ஒரு சிகரெட்பெட்டிக்குள் வைத்து, அவர் கையாலேயே, என் கால்ச்சல்லடத்தின் பையொன்றில் (Trouser pocket), திணித்து அனுப்புவார். சிகரெட்டுகளை வாங்கி, வீடு சேர்க்கும் வரையிலும் சிகரெட்டைத் தொடாமல் கொண்டுவருவதென்பது அவ்வளவு எளிதல்ல. கால்ச்சட்டைப் பையிலிருந்தபடி, என் தொடையை உறுத்தும் சிகரெட்பெட்டியை மலத்தைக் கைகளில் அள்ளியதைப் போன்றதொரு அருவருப்பின் உச்சத்தில், என் தொடையைத் தொட்டுவிடாதவாறு பூசையைப்போல நடந்து வீடுசேர்வேன்.

வீடு வந்தவுடன், தந்தையை எதிர்கொள்ளத் துணிவின்றி, பட்டும்படாமல் இடக்கையில் எடுத்துக் கொடுத்துவிட்டு ஓடிச்சென்றுக் கைகழுவிக்கொள்வேன். இதை உணரும் தந்தை, தான் அவமானப்பட்டு விட்டதாக நினைத்துக்கொண்டு, வசைமாரி பொழிவார். கோவை புனித மைக்கேல் பள்ளியில் படித்தவர், அறிஞர் அண்ணா உள்ளிட்ட சில தலைவர்களுடனிருந்து அரசியல் கற்றவர், தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்வன்மை மிக்கவர், பேச்சாளராக அரசியல் மேடைகளில் வலம் வந்தவர். ஆயினும், என்ன பயன்?? போதைக்கு அடிமையானால் இப்படித்தான்… பெற்ற மக்களென்ன? மனைவியென்ன? யாவும் புகை கொடுக்கும் சுகத்துக்குப் பிறகே… ஆறு மணிக்கு மேலானால் “அது வேற வாய்” ஆகிவிடும் நகைச்சுவையில், வடிவேலு தன்னை தன் சிறுவத்தில் இழிவு செய்த தந்தையை நோக்கிச் சொல்வாரே!! ஏறக்குறைய அதேதான் சிறுவத்தில் என்னுடைய நிலையும்!! ஆனால், அவரைப்போல நாற வாயாக (கதையில்) மாறிவிடவில்லை.

புகை என்னும் வன்மையால் மாண்ட பல்லுயிர்கள் பலகோடி என்பதால் அகிற்புகை, சந்தனப்புகை அல்லது சாம்பிராணிப் புகை என்று இந்தப்பதிவை மங்கலமாய் ஆரம்பிக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. புகை என்பதன் பொருள் யாது? புகையில் இருப்பதென்ன? புகையில் “நற்புகையும்” “நாசமாய்ப்போன” புகையும் உண்டா? யாதொரு கரிமப்பொருளும், “காற்றின்றி அல்லது பற்றி எரியாமல் கனன்று வேகும்போது” வெளியாவதுதான் புகை என்று சொல்லலாம். என் வேதியியல் அறிவுக்கு எட்டியவரை புகைக்கும், ஆவிக்கும் ஒரே வேறுபாடு இருப்பதாகத் தோன்றுகிறது. அது, “புகை உள்ளேபோக ஆவி வெளியே போகும்” என்பதுதான்.

ஒரு பொருள் எரியும்போது, அதில் தண்ணீரும், கரியமில (கரி+அமில) CO2 வளியும், வெளியேறுமானால், வேதியியல் அதைப் ‘புகை’ என்று சொல்வதில்லை. மாறாக, அதை உயிர்ச்சுழற்சிக்குத் தேவையான ஒரு வகைக் காற்று என்கிறது. உதாரணமாக நாம் உண்ணும் மாவுப்பொருள் (லட்டு, ஜிலேபி மட்டுமல்ல…நாம் உண்ணும் அரிசி முதலான தானிய உணவுகள் யாவற்றிலும் முதன்மையானது “கார்போஹைட்ரேட் = தண்ணீரும், கரியும் கலந்த கரிமப்பொருள்”) நாம் சுவாசிக்கும் உயிர்வளியை எடுத்துக்கொண்டு நம் வயிற்றுக்குள் வேகிறது. ஆம் புகையில்லாமல் எரிகிறது. விறகு எரியும்போது தீ வடிவத்தில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவது போலவே வயிற்றுக்குள்ளும் வெப்ப ஆற்றல் வெளிப்படுகிறது. அதுதான் நம் உடலியக்கத்துக்கான ஆதார ஆற்றலாக நம்மை உயிருடன் வைத்திருக்கிறது.

நாட்டுமருந்துக் கடைகளில் “சித்தரத்தி” என்றவொரு மூலிகை கிடைக்கும். அதை நெய்விளக்கில் கருக்கி வெளிவரும் புகையை முகர நிற்காத கபமும், சளியும் ஒரிருநாட்களுக்குள் ஓடிப்போகுமென்று உணர்ந்திருக்கிறேன். ஐந்து மிளகாய்களும், அஞ்சாறு உப்பும், ஒரு தீக்கங்கும் அரிசியளக்கும் படியில் போட்டுக் “கண்ணேறு கழிக்கும்” போது வெளிவரும் காரப்புகையை இலேசாக முகரத் தீராத அயற்சியும் தீருமென்பதையும் கண்டதுண்டு. வேப்பந்தழையும், நொச்சியும் போட்டுப் பிடித்த புகையால் வீடே மணக்கும், தூசிலும் தூய்மை துலங்கும். இப்படி எத்தனையோ மென்புகைகள் நம்மண்ணிலே உண்டு.

ஆங்கிலத்தில் மலரின் நறுமணத்துக்குக் காரணமான கரிமப்பொருட்களை “Flavinoids” என்கிறார்கள். பூவுக்கு ‘Flower’ என்று வழங்குவதற்குக் காரணம் “Flavinoids” இருப்பதால்தாம். இந்த Flavinoids என்ற கரிமப்பொருட்களின் புகை (அ) காற்று வடிவம் மலரின் மகரந்தத்தில் இருந்து வளிமண்டலத்தில் கலந்து நம் மூக்குக்கு உருமாறாமல் வந்தடைவதால் தான் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தையும், பூமார்க்கெட்டையும் கண்திறந்து பார்க்காமலேயே பேருந்து நிற்குமிடத்தை நம்மால் சொல்லிவிட இயலுகிறது. அதேபோல ஒவ்வொரு Flavinoid ம் நிறமியாகச் செயல்படுவதால்தான் மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தினவாகக் கண்களைக் கவர்கின்றன.

சரி சிகரெட் கதைக்கு வருவோம்… சிகரெட் எரியும்போது மேற்சொன்ன கரியமிலவாயுவும், தண்ணீரும், புகையிலையின் மூலப்பொருளான நிக்கோட்டின் மட்டுமே உடன் வெளியாகிறது என்பதால், ஒப்பீட்டளவில் தீங்கு குறைவு என்கிறது அறிவியல். நிக்கோட்டினால் தீங்கு குறைவு என்பது வியப்பாக இருக்கிறதா? நம் உடலுக்குத் தேவையான விட்டமின்களில் B-வகை மிக முக்கியமானது. அதில் B3- விட்டமின்தான் “நிக்கோட்டினமைடு” (நிக்கோட்டின் அல்ல) என்னும் மூலக்கூறு. நிக்கோட்டினுக்கும், நிக்கோட்டினமைடுக்கும் வேதி வடிவம் ஏறக்குறைய ஒன்று மற்றொன்றைப் போலவே இருக்கும். ஆனால் பண்புகள் மட்டும் மாறுபட்டிருக்கின்றன.

மேலே ஒப்பீட்டளவில் நிக்கோட்டினால் தீங்கு குறைவு என்றேனல்லவா? எதனுடன் ஒப்பிடும்போது?? புற்றுநோயைத் தூண்டவல்ல கரிம வளையச் சேர்மங்களுடன் (Aromatic Hydrocarbons) ஒப்பிடும்போது நிக்கோட்டின் தீங்கானதல்ல என்கிறது வேதியியல். புகையிலையில் நிக்கோட்டின் மட்டுமல்ல, புற்றுநோயைத் தூண்டவல்ல கரிமவளையச் சேர்மங்களான பென்சீன், நாப்தலீன், ஆந்திரசீன், தொலுவீன் போன்றவை மிக அதிகமான விகிதத்தில் கலந்திருக்கின்றன. ஆகவே, புகைக்கும்போது இவை நேரடியாக நுரையீரலுக்குச் சென்று வெகு எளிதாக குருதியில் இருக்கும் புரதங்களுடன் பிணைந்து பிற உறுப்புகளுக்குச் செல்கின்றன. உள்ளிழுக்கும் புகையில் வெறும் நிக்கோட்டின் மட்டுமிருந்தால் அது மூளை நரம்புகளை அடைந்து அதன் செயல்பாடுகளை மட்டும் தூண்டிவிட வாய்ப்பிருக்கிறது. இதனால், புகைப்பிடிப்போர் தாம் சுறுசுறுப்பாக இருப்பதாக அறிவர். ஆனால், மேற்சொன்ன புற்றுநோய்த் தூண்டிகளும் உடன் தீயில் வெந்து கிளர்ச்சியுற்ற நிலையில் (Energetic state) உடலுக்குள் செல்வதால் அதனுடைய வீரியம் மிக மிக அதிகமாக இருக்கும்.

காரணம், வளையச் சேர்மங்களின் வடிவம் உயிரி மூலக்கூறுக்குள் (DNA) சென்று பிணைய ஏதுவாக இருப்பதால் எளிதாகப் பிணைந்துகொண்டு, செல்பிளவைத் தூண்டி, ஒருநாளைக்கு பத்துசெல்கள் வளரவேண்டிய இடத்தில் பத்தாயிரம் செல்களை உருவாக்கும். நோயெதிர்ப்பாற்றல் உடலில் உள்ளவரை புற்று வளர்வதே தெரியாமல் இருந்து, நோயெதிர்ப்பாற்றல் குறையும்போது தான் புற்று உண்டாகியிருப்பதே தெரியவரும்.

சிகரெட் புகைப்பவர்கள் தம்முடைய உடலைக் கெடுத்துக்கொள்வதோடு, அருகிலிருப்பவரையும் அணுவணுவாகக் கொல்கிறார்கள். அடுத்தவர்கள் புகைப்பதை முகர்வதால் இங்கிலாந்தில் மட்டும், ஆண்டொன்றுக்கு 165,000 பேர் (குழந்தைகள் உள்பட) புதிய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது UK புற்றுநோய் ஆராய்ச்சிக்கழகம். வளர்ந்த நாடான இங்கேயே இந்த நிலையென்றால் நம்மூரில் எண்ணிப்பாருங்கள். இடைவெளி கிடைத்த இடமெங்கும் புகைக்கும் பழக்கம் மிக்க மக்கள் நிறைந்த நம் நாட்டில் எத்தனை குழந்தைகளும், புகைப்பவர் குடும்பங்களும் நோய்வாய்ப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே பேரச்சம். பேருந்துக்காக அமைதியுடன் காத்துக்கொண்டிருந்த என்னை, இதோ இந்தப்படத்தில் இருக்கும் வெள்ளைக்காரப் பெண்கள்தாம் புகையை ஊதித்தள்ளி என் சிறுவத்தை, என்னை இப்பதிவு எழுதத் தூண்டினர்.

வாகனங்கள் உமிழும் நச்சுக்கரியும், நாசம் செய்யும் உலோகங்களும், மனிதனின் ஆறாம் விரலாகச் சொல்லப்படும் சிகரெட் நிக்கோட்டின் புகையும் மனிதனை வன்புணர்வு செய்தழிக்கும் வன்புகையின் வடிவங்களே.. இந்தியாவின் மக்கட்தொகையில் 12% பேர் புகைபிடிப்பவர்கள் என்றும், ஆண்டுக்கு பத்துலட்சம் பேர்கள் வரையில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயால் இறக்கிறார்கள் என்றும் ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. இதெல்லாம் வெள்ளைக்காரன்தான் கொண்டுவந்தது.. மேற்கத்தியக் கைக்கூலியாகிய நீ இதைச்சொல்லக்கூடாது என்று என்னைச் சொல்வோர்க்கும் தெரியவேண்டும்… கிமு 3000 ஆம் ஆண்டுகளிலேயே புகைபிடிக்கும் பழக்கம் நம் மண்ணில் இருந்திருக்கிறது என்று “அதர்வணவேதம்” சொல்கிறது. சோமபானம் (சோமன் = சிவன்) அல்லது சிவபானம் என்று சொல்லப்படும் கஞ்சாவைக் குடிக்கும் சாமியார்களை வைத்தே இதை அறிந்துகொள்ள முடியும்… கி.பி.1600 இல் தான் புகையிலை நம்மூருக்கு வந்திருக்கிறது. வந்து “உன்னாலே நான் கெட்டேன்..என்னாலே நீ கெட்டாய்” என்று சேர்ந்து மக்களைக் கெடுத்து இன்னும் நாசமாக்கியிருக்கிறது.

புகையைத் தூற்றுவோம்!!

செ. அன்புச்செல்வன்