FEATUREDNatureSocialmedia

பறவைகள் பலவிதம் 7

Spread the love

பறவைகள் பலவிதம் 7

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் மாநிலப் பறவையாக இருப்பது எந்தப்பறவை தெரியுமா ?

இதை நம்மூரில் பனங்காடை என்று சொல்வார்கள்
மேலும் இதற்கு
காட்டுக்காடை,
கோட்டைக்கிளி,
நீலகந்தா,
பால் குருவி,
பாற்குருவி,
துலுக்கமைனா,
பாலக்குருவி…
செம்பட்டைக்காகம்…
கொட்டுக்காகம்…
என்கிற பெயர்களுமுண்டு. ஆங்கிலத்தில் இது இண்டியன் ரோலர் -Indian roller.(Coracias benghalensis), கன்னடத்தில் அம்மாநில மக்களால் நீலகண்டா என்று அழைக்கப் படுகிறது நம் நாட்டில் பலர் நம்பிக்கையோடு வழிபடும் சிவனை நீல கண்டன் எனச் சொல்வார்கள். நீல கண்டா என்றால் நீல நிறமுள்ள கழுத்தை உடைய(து)வன்.

சிவனுடைய கழுத்து விசத்தை விழுங்கியதால் நீல(Blue) நிறம் என புராணக்கதைகள் சொல்கிறது/சொல்கிறார்கள் 😀
நமது பனங்காடைக்கு உடலில் ஆங்காங்கே நீலநிறம்…..
ஆனால் கழுத்தில் நீல நிறம் இருப்பதாய்த் தெரியவில்லை….

எதன் அடிப்படையில் நீல கண்டா எனப் பெயர் எனத் தெரியவில்லை….
இந்தப்பெயரும்கூட எங்களோடு காடுகளில் பயணித்த கர்நாடகா நண்பர் மூலம் நான் தெரிந்து கொண்டதுதான்.ஆனால் இவர்களில் இன்னும் பலரிடம் இருக்கும் மூடத்தனத்தை மட்டும் சொல்லாமல் மறைத்துவிட்டார்.அது கர்நாடகாவில் தசராவின்போது இந்த பனங்காடைகளிடம் தமது விருப்பத்தை/கோரிக்கையை சொன்னால் அது சிவனிடம் நேரில் சென்று சொல்லிவிடுமாம்(!).அதற்காக இவற்றை தசராவிற்கு முன்கூட்டியே பிடித்து கூண்டில் அடைத்தும் சிறகுகளை வெட்டி பறக்கவிடாமல் செய்யும் செயல்களும் இன்னும் நடக்கிறதாம்.கொடுமைதானே இது! ….

இது இருக்கட்டும்.இவை பறக்கும்போது நீலவானத்தோடும் அமர்ந்திருக்கும்போது அது அமர்ந்துள்ள இடத்திற்கும் இதன் நிறங்கள் பொருந்திப்போகும்(camouflage)செயல் மிக கவனிக்கத் தக்கது.இயற்கை எவ்வளவு தகவமைப்பை கொடுத்திருக்கிறது பாருங்கள்!…

இந்த அழகான பறவையானது

கர்நாடகம்,
ஆந்திரம்,
தெலுங்கானா,
ஒரிசா,
மற்றும் பீகாரில் மாநிலப் பறவையாக சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது…

இந்த பறவை வனக்காடுகள், கிராமங்கள், நகரங்கள் என தெற்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்கிறது….

பெரும்பாலும் பனைமரங்களில் அமர்ந்துகொண்டு பறந்து பறந்து பூச்சிகளைப் பிடிக்கும்போது அதன் சிறகுகள் வர்ணஜாலம் செய்யும் அழகே தனி.ஆனால் அமர்ந்திருக்கும்போது அதன் நிறம் பளிச்சென இருக்காது.

அதிகமாக பனைமரங்களை சார்ந்தே வாழ்ந்ததால் தமிழகத்தில் பனங்காடை என்பது பொருத்தமான பெயர்தான் ஆனால் இன்றைய காலங்களில் இவை பெரும்பாலும் மின்கம்பிகளிலேயே அமர்ந்திருப்பதால் மின்கம்பிக்காடை அல்லது மின்கம்பக் காடை என்று சொன்னால் கூட பொருந்தும்…

மனிதனால் பனைமரங்கள் அழிக்கப்பட்டதனால் அவை பாதிக்கப் பட்டுவிட்டதுதான் மிக வேதனையான ஒன்று….

மீன்கொத்தியையும் பனங்காடையையும் முதன்முதாலாகப் பார்ப்பவர்கள் இரண்டையும் போட்டு சற்று குழம்பி விடுவார்கள் ஆனால் இரண்டிற்கும் மிகுந்த வேறுபாடுண்டு.எம்மிடமே இதை கிங்ஃபிஷரா என கேட்பவர்களும் நிறையப்பேர் உண்டு….

எனக்கு மிக மிக பிடித்தமான இந்தப் பறவையை எப்போது பார்த்தாலும் சலிப்பேவராது.அவ்வளவு சுறுசுறுப்பு.இரையை பறந்து பறந்து பிடித்து மீண்டும் மீண்டும் அதே இடத்தில் அமர்ந்துகொள்வதைப் பார்க்க அவ்வளவு பிடிக்கும்.சிறகை விரிக்கும்போதும் பறக்கும்போதும் அதன் மாயாஜால நிறங்கள் இருக்குறதே அப்பப்பா மனதை ஈர்க்கும்.எமது பள்ளிப் பருவத்தில் இதன் இறகுகளை தேடித்தேடி சேகரிப்பேன்…

பிரிட்டிஷ் இந்தியாவில் இதன் இறகின் அழகே இதற்கு கேடாய் ஆனது.இந்தியாவில் பெருமளவில் இந்தப் பறவையைக் கொன்று ஆடை அலங்காரத்திற்காக இதன் இறகுகள் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு அளவே இல்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
(அடப்பாவிகளா!…)

இதன் எதிரிப்பறவைகள் எதைக்கண்டும் இவை கொஞ்சம்கூட அஞ்சாதிருக்கும் துணிச்சல் மிகுந்த பறவை இது.தமது கூட்டினருகே வரும் எந்தப்பறவையாக இருந்தாலும் மிகுந்த வீரத்துடன் துரத்தியடிக்கும்.

இரைக்காக தேடித்தேடி பறப்பதெல்லாம் இவற்றின் குணம் இப்போது இல்லை பெரும்பாலும் உட்கார்ந்துகொண்டே இருக்கும் இரைகள் இதைத்தேடிவரும்போது(!…)சட்டெனப் பறந்து அதைப் பிடித்துக்கொண்டு மீண்டும் அதே இடத்தில் அமர்ந்துகொள்ளும்…
பூச்சிகள்,சிறிய பாலூட்டிகள்,சிறியபாம்பு மற்றும் தேள்களைப் பிடித்து உண்ணும்…

இவற்றில் ஆண் மற்றும் பெண் பறவைகளைப் பிரித்தறிவது என்பது மிகவும் சிரமம்.

கொங்குப்பகுதியில் வாழும் ஒரு இன மக்களின் உட்பிரிவின்(குலம்-கோத்திரம்)ஒரு பெயர் “பனங்காடை”-இது எதை உணர்த்துகிறது என்றால்,மிக நீண்ட நாட்களாக மனிதர்களின் வாழ்வோடு இந்தப் பறவைகள் ஒன்றியிருக்கிறது என்பதற்கு சிறந்த சான்று எனத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்…

இதில் மற்றுமொரு வகையான ஐரோப்பிய பனங்காடைகள் என்கிற ஒன்று என்று உண்டு பெரும்பாலும் வட இந்தியவில் மட்டுமே வலசை வரும் காலத்தில் காணப்படுகிறது…

ஒன்றே ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் மரங்களைக் காப்போம் அதிலும் இவற்றிற்கான பனைமரங்களை அவசியமாக காப்போம்.இவைகளை மட்டுமல்ல அனைத்து பறவைகளையும் காப்போம்.
பறவைகளை வாழவிடுவோம்…

-மேற்கண்ட பதிவு தங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்கவிட்டாலும் தங்களது கருத்தைப் பதிவிடவும் அதுதான் எம்மை சீர்படுத்த உதவியாக இருக்கும் நன்றி….

சூழலியல் தேடலுடன்,
என்றும் உங்கள்,
Ramamurthi Ram

#மீள்பதிவு
இது பற்றிய கேள்விகளோ சந்தேகங்களோ இருந்தால் கேளுங்கள் முடிந்தவரை/தெரிந்தவரை பதில் சொல்கிறேன்…. 🙂