FashionFEATUREDSocialmedia

பருத்திச் சொக்காய்

Spread the love

பருத்திச் சொக்காய் !

போன வாரம் “அனந்தூ” என்ற அனந்த சயனன் (Anantha Sayanan) அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி. “துலா” பூனே வருகிறது என்று. துலா என்பது நாட்டுப்பருத்தியை கையால் நூற்று, இயற்கை வண்ணத்தையேற்றி, கையால் தைத்து விற்கும் ஒரு இயற்கை அங்காடி. சென்னையில் அடையாறு இந்திராநகரில் 21ம் குறுக்குத்தெருவில் இருக்கும் ஒரு கடை. இதுவரை போனதில்லை. ஆனால் அனந்துவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது பதிவுகளை படித்திருக்கிறேன்.

எளிமையான மனிதர். அடுத்தவர் பயன்படுத்திய பழையதே தனக்கு போதும் என்று விருப்பம் கொள்பவர். ஒரு காலத்தில் கடுமையாக விமரிசனங்களை எழுதிக்கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக மரபணு பயிர்கள், முக்கியமாக மான்சாண்டோ BT பருத்தியின் மூலம் விவசாயிகள் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதை காணச்சகியாமல் நாடெங்கும் சுற்றி அவலங்களை பார்த்து, பாரம்பரியத்தை கையிலெடுத்து கடைசியில் தாமே ஒரு கடையை போட்டுள்ளார். துலா அமைப்பினர் ஒரு குழுவாக வேலை செய்கிறார்கள்.

நாட்டுப்பருத்தியை பருத்தியை விவசாயிகளிடமிருந்து வாங்கி, பொறுப்புள்ள முறையில் அதனை ஆடையாக்கி விற்று மீண்டும் அவர்களிடம் கொண்டு சேர்ப்பது. உதாரணமாக சங்கு புஷ்பம், குண்டு சம்பங்கி முதலான பூக்களிலிருந்து சாயமெடுத்து வண்ணமேற்றுகிறார்கள்.

இவர் பூனாவுக்கு நாலு நாள் பயணமாக வந்திருந்தார். விதர்பா விவசாய தற்கொலை குறித்த அவர்தம் உரையாடலுக்கு போகமுடியவில்லை. ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் “துலா” அமைத்திருந்த தாற்காலிக கடைக்கு மனைவியுடன் சென்று சேருவதற்குள் மத்தியானம் ஆகிவிட்டிருந்தது. ஒரு கயிற்றுக்கட்டிலில் தாடியுடன் நீண்ட அங்கி அணிந்து ஆனந்தூ உட்கார்ந்ததை பார்த்தவுடன் அவரை அடையாளம் தெரிந்துவிட்டது. கடுமையான வெயிலில் கொடிகட்டி சுவரொட்டிகளை தொங்கவிட்டு மடித்துவைத்த பருத்தி துணிகளுடன் உட்கார்ந்திருந்தார். கொணர்வார் யாருமில்லை. ஓரிருவர் வந்துபோய்க்கொண்டிருந்தனர். பெண்கள் மற்றும் ஆண்களுக்குண்டான ஆடைகள் சுத்த பருத்தியால் தண்மையான வண்ணத்தில் ஆரவாரமில்லாமல் கிடந்தன.

பார்த்துவிட்டு விலை கொஞ்சம் அதிகமென்றார் என் மனைவி. பெண்களின் நீள் அங்கி ஒரு 1300 மற்றும் ஆண்களின் சட்டை ஒரு 900 என்பதாக இருந்தது. “குசு குசு” குரலில் என்னிடம் கேட்டார். குறைந்த அளவில் பருத்தியை விளைவித்து, வாங்கி, மல்லுக்கட்டி, சமைத்து, நூல்நூற்று, ஆடை பின்னி, வண்ணமேற்றி, தொலைதூரத்தில் விற்றால் ஆகத்தான் செய்யும். இது ஒரு விலையே அல்ல. எல்லோரும் வாங்கவேண்டும். விலை குறையுமென்றேன். பொதுவாக புருஷன் பேச ஆரம்பித்தால் பெண்மணிகள் காது கொடுப்பதில்லை.

பிக் பஜாரில் மலிவாக கிடக்கிறதே என்று 600 ரூபாய்க்கு வாங்கும் வண்ண சுடிதார்கள் மூன்று மாதத்துக்குள் வேலைக்காரிக்கு போய்விடுகின்ற அளவில் தான் அதன் தரம் உள்ளது. பெரிய மாலில் நல்ல, பிடித்த ஆடையென்றால் 2500 குறைவில்லாமல் ஆகும். அதற்கும் தனியாக மேலாடை வாங்கவேண்டும்.

அதிகமாக உற்பத்தி செய்யும் மில் வியாபாரிகள் , துணியை மலிவு விலைக்கு விற்கமுடியும். பருத்தி துணியும் அதிகளவில் விற்கப்பட்டால் விலை குறையலாம். மக்கள் வாங்கவேண்டும். யார் வாங்குகிறார்கள் ?

பெருநகரங்களில் களிமண் வளையல் அணிந்து பெயர்சொல்லி நாய்வளர்க்கும் நவ நாகரிக மங்கையர் மற்றும் வீட்டுத்தோட்டம் வைத்திருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கை அங்காடியில் சொல்பமாக வைத்திருக்கும் பொருட்களை அதிக விலைக்கு வாங்குவதால் ஒரு பிரயோஜனமுமில்லை. இந்த கூட்டம் மிகச்சிறியது. பணக்காரர்கள் ஆனாலும் அதிகம் வாங்கமாட்டார்கள். இந்த வருமானத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை படுகுழியிலிருந்து தூக்கி எடுக்கமுடியுமா என்ற யோசனையோடு அனந்துவிடம் விடை பெற்றேன்.

இன்றைக்கு அந்த பருத்தி சட்டையை அலுவலகத்துக்கு அணிந்தேன். அடடா ? என்ன சுகமான உணர்வு ? இதற்காகவே எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். வீட்டில் என் குட்டி மகள், அவள் அம்மாவுக்கு வாங்கிய மேலங்கியை போட்டுப்பார்த்தாள் (அவள் அப்படித்தான்) . கையினால் நூற்ற பருத்தி ஆடைக்குத்தான் என்ன ஒரு கம்பீரம் !! கையில் குறுவாள் கொடுத்தால் ஆஷ் துறையை அன்றே சோலி முடித்து விட்டிருப்பாள் என்ற துடிப்பு தெரிந்தது.

இதுதான் விடுதலை.