FEATUREDNewsPolitics

பகத் சிங்கின் வாழ்க்கை

Spread the love

குல்தீப் நய்யாரின் எழுத்தில் பகத் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை வாசித்து முடித்தேன். இருநூற்றி சொச்சம் பக்கங்களில் ஒரு மகத்தான வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் நய்யார் கத்தி மேலாக நடப்பதான தருணங்களை முடிந்தவரை சிறப்பாகக் கடந்திருக்கிறார். தன்னளவில் புதிய ஆவணங்களைத் தேடி எடுத்தும், பகத் சிங்கின் வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்புடையவர்களைச் சந்தித்தும், பேட்டி கண்டும் நூலை ஆக்கியுள்ளார்.

பகத் சிங்கின் தூக்குதண்டனையைத் திட்டமிடப்பட்டதற்கு முன்னரே ஆங்கிலேய அரசு நிறைவேற்ற இறங்கிச் செயலாற்றிய இறுதிக்கணங்களில் நாமும் நிற்கிறோம். பகத் சிங்கின் சீப்பு, எழுதுகோல் என்று எதையாவது கொண்டுவந்து தங்களிடம் தரும்படி இருக்கிற மற்ற கைதிகள் பரக்கத் சிங் என்கிற தோழரிடம் கேட்கிறார்கள். லாகூர் காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார், “ஏன் உங்களைக் காத்துக்கொள்ள நீங்கள் வாதாடவில்லை?” என்று கேட்கிறார். பகத் சிங் தீர்க்கமாக, “புரட்சியாளர்கள் இறக்கத்தான் வேண்டும். எங்களின் இலக்கின் வலிமை எங்களின் இறப்பில் தான் இன்னமும் வலிமை பெறுமே அன்றி, அரசுக்கு வைக்கும் முறையீடுகளில் அது சாத்தியமாகாது.” என்றுவிட்டு தூக்கு மேடையை அடைகிறார்.

வித்யாவதி கவுருக்கு பகத் சிங் எழுதிய கடிதம் அவர் தீவிரவாதி அல்ல, தெளிவான கனவுகள் கொண்ட புரட்சியாளர் என்பதைக் காட்டுகிறது:
“ஒருநாள் இந்தத் தேசம் விடுதலை பெறும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை அம்மா. ஆனால், வெள்ளைக்கார துரைகளின் காலி செய்யப்போகும் இடத்தில் இந்திய துரைகள் உட்காரப்போகிறார்கள்.”

இறுதிக்கணங்களை நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது அமைதியாக லெனினின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தவரை அழைக்கிறார்கள். நேரு, போஸ் ஆகியோருக்கு தன்னுடைய நன்றிகளைத் தெரியப்படுத்திவிட்டு தூக்கு மேடையை அடைகிறார்கள். தன்னுடைய உறவுக்காரர்கள் இருவர் விடுதலைப் போரில் ஈடுபட்டு மரணமடைந்து அவர்களின் துணைவிகளைத் தவிக்க விட்டதால் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று அவர் முடிவு செய்கிறார்.

ஆரிய சமாஜத்தில் இளம் வயதில் பங்கேற்ற பகத் சிங் மதச்சார்பற்ற பார்வையிலேயே வளர்ந்தார். லாலா லஜ்பத் ராய் இந்து தேசியத்தைத் தூக்கிப் பிடித்த பொழுது அதை முற்றாக நிராகரித்தார். பகத் சிங்கின் கம்யூனிச ஈர்ப்பை பார்த்துவிட்டு, ‘போல்ஷ்விக் கைக்கூலி’ என்று அவர் வசைபாடினார். இந்து இந்தியா, முஸ்லீம் இந்தியா என்று இரண்டு இந்தியாக்களை உருவாக்க வேண்டும் என்கிற அவரின் கருத்தை பகத் சிங் கடுமையாகக் கண்டித்தார். இப்படி முரண்பாடுகள் இருந்தாலும் சைமன் கமிஷனை எதிர்த்து காந்தி விடுத்த அழைப்பின் பேரில் நடந்த போராட்டத்தில் லஜ்பத் ராயின் பின்னால் பகத் சிங் அணிவகுத்தார். அங்கே ஸ்காட் எனும் ஆங்கிலேய காவல்துறை அதிகாரியால் கடுமையாகத் தாக்கப்பட்டு லஜ்பத் ராய் ரத்த வெள்ளத்தில் மூழ்கிய கணம் அந்த மரணத்துக்குப் பழிவாங்க வேண்டும் என்கிற கனல் இவருக்குள் மூள்கிறது.

சன்யால் உருவாக்கிய இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தின் கூட்டம் கட்சியின் முக்கியப் பிரதிநிதி பகவதி சரண் வோக்ராவின் மனைவி துர்கா தேவியின் தலைமையில் நடைபெற்றது. தானே ஸ்காட்டைக் கொல்வதாகத் துர்கா தேவி சொன்னதைத் தோழர்கள் ஏற்கவில்லை. பகத் சிங், ராஜகுரு, சந்திர சேகர் ஆசாத், ஜெய் கோபால் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள். ஸ்காட் கொல்லப்பட்டான் என்கிற தலைப்பில் தங்களின் செயலுக்கான விளக்கத்தை அளிக்கும் பிரசுரத்தை பகத் சிங் தன்னுடைய கைப்பட எழுதினார்.

அதற்குமுன் ஸ்காட்டைப் பார்த்திராத ஜெய் கோபால் அவரை அடையாளம் காட்டும் வேலையை எடுத்துக்கொண்டார். அன்றைக்கு ஸ்காட் வராமல் போய் அடையாளம் மாறி சிக்னல் தரப்பட்டுச் சாண்டர்ஸ் எனும் சம்பவத்தில் தொடர்பில்லாத அதிகாரியை சுட்டுக்கொன்றார்கள். துரத்திக்கொண்டு வந்த சனன் சிங் எனும் காவல் வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார். துர்கா தேவியின் கணவர் வேடம் பூண்டு கல்கத்தா போகும் தொடர்வண்டியில் பகத் சிங் ஏறிய பொழுது துர்காவுடன் உரையாட வாய்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தீர்மிகுந்த பெண்ணாகப் பார்த்த துர்காவுடன் உடனிருந்த அந்தக் கணங்கள் அவரைத் துர்காவுடன் இன்னமும் நெருக்கமாக்கின.

பகத் சிங்கின் அமைப்பின் செயல்பாடுகளுக்குக் காங்கிரஸ் தலைவர்களும் நிதி தந்தார்கள். பெரிய ஆச்சரியம் வங்கத்தின் அட்வகேட் ஜெனரலே ஒரு குறிப்பிடத்தகுந்த பணத்தை அனுப்பியது. பகத் சிங்குக்கு முன்னால் புரட்சிகரக் காரியங்களில் ஈடுபட்ட எந்த அமைப்புக்கும் தத்துவ ரீதியாகப் பெரிய பார்வை இருக்கவில்லை. ஆங்கிலேய அரசை ஆயுதப் புரட்சியின் மூலம் தூக்கி எறிவோம் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது. கதர் கட்சி மட்டும் ஓரளவுக்குத் தெளிவான இலக்கை கொண்டிருந்தார்கள். பொதுவுடமையின் பாதையில் நகர்வதே சரியான வழியாக இருக்கும். காங்கிரஸ் மேட்டுக்குடியினரை கொண்ட கட்சியாக இருக்கிறது. தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோரை சென்று சேரவேண்டும் புரட்சி என்று பகத் சிங் உட்பட்ட தோழர்கள் நினைத்தார்கள். சொந்தமாக ஆடையைக் கொண்டு வைத்துக்கொள்ளாமல் தங்களுக்குள் அதைப் பகிர்ந்து கொண்டார்கள்.

கடுமையான அதிகாரங்களைக் காவல்துறையிடம் தரும் ஆயுதச்சட்டத்தை ஆங்கிலேய அரசு நிறைவேற்ற திட்டமிட்ட பொழுது நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசிவிட்டு சரணடைவது என்று முடிவு செய்யப்பட்ட பொழுது கட்சியின் தூணான பகத் சிங்கை ஈடுபடுத்தும் எண்ணம் முதலில் சகாக்களுக்கு இல்லை. சுக்தேவ் பகத் சிங்கை நக்கல் செய்தார். “நீ புரட்சிக்கு தயாராக இல்லை பகத் சிங். ஒரு பெண்ணின் பிடியில் கட்டுண்டு இருக்கிறாய்.” என்று அவர் ஜாடைமாடையாகத் துர்கா தேவியின் மீதான பகத் சிங்கின் அன்பை குறிப்பிட்டார்.

தான் காதலில் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பகத் சிங் சுக்தேவுக்குப் பதிலளித்த கடிதத்தில் சொல்லவில்லை. ஆனால், எதை எப்பொழுது துறக்க வேண்டுமோ அதைப் புரட்சிக்காகத் துறப்பேன் என்று உறுதி தந்தார். அதே சமயம் மாஜினியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிடுகிறார். ஆட்சியைக் கைப்பற்ற நடத்திய முயற்சியில் எண்ணற்ற தோழர்களை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்த மாஜினியை அவர் மிகவும் காதலித்த பெண்ணின் கடிதம் காப்பாற்றியதை சொல்லிவிட்டு இப்படி எழுதுகிறார் பகத் சிங், “காதல் ஒரு மிருக வேட்கை அல்ல. அது மனித வேட்கை தான். அது இனிமையானது. அது என்றும் மிருக வேட்கை ஆகாது. காதல் எப்பொழுதும் ஒரு மனிதனின் குணத்தை உயர்த்தவே செய்கிறது. அது அவனைத் தாழ்த்துவது இல்லை. ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் காதலிக்கலாம். அவர்கள் தங்களின் வேட்கைகளைக் கடந்து தங்களின் புனிதத்தைக் காக்க வேண்டும்!” என்று முடிக்கிறார். அதோடு நில்லாமல் மத்திய சபையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் குண்டு வீசும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

காந்தியின் அகிம்சை ஆன்மாவின் பலத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது. தங்களின் போராட்டம் உடல் வலிமையையும் இணைத்துக்கொண்டு போராடுகிறது. காந்தி எண்ணற்ற மக்களை எழுச்சியுற செய்தாலும் அவர் ஒரு சாத்தியமில்லாத கனவு காண்பவர் என்பது பகத் சிங்கின் பார்வையாக இருந்தது. பகத் சிங் மற்றும் தோழர்கள் குண்டுகளை வீசிய பிறகு கம்பீரமாகச் சரணடைந்தார்கள். புரட்சி ஒங்குங்க என்று குரல் கொடுத்தபடி அவர்கள் அதைச்செய்தார்கள்.

வழக்கு நடைபெற்ற பொழுது தங்களைக் காத்துக்கொள்ள என்று எப்பொழுதும் அவர்கள் வாதடவில்லை. புரட்சி ஓங்குக என்று குரல் கொடுத்ததோடு, எப்படிக் குண்டுகள் தயாரிப்பது என்பது துவங்கி புரட்சி வகுப்புகள் போல நீதிமன்றத்தை மாற்றினார்கள் பகத் சிங் மற்றும் தோழர்கள். அரசு விழித்துக்கொண்டு அவர்களைக் கடுமையாகத் தாக்கச் செய்தது. கையில் விலங்கை விட விளக்க மறுத்த நீதிமன்றம் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டதால் பல நாட்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இல்லாமலே வழக்கு நடைபெற்றது.

பகத் சிங்கின் கையெழுத்தை வைத்தும், அப்ரூவராக மாறிய ஜெய் கோபால் முதலியோரின் வாக்குமூலங்களும் சேர்ந்து பகத் சிங்கை தூக்கு மேடைக்கு அருகில் சேர்த்தன. பாதுகாப்பு கமிட்டி ஒன்றை அமைத்துத் தன்னை விடுவிக்க முயன்ற தந்தை, ஆயுதம் ஏந்தி சிறையைத் தகர்க்க திட்டமிட்ட தோழர்கள் என்று சகலரையும் அப்படிச் செய்யக்கூடாது என்று பகத் சிங் தடுத்தார். தன்னுடைய மரணம் புரட்சியை உருவாக்கும், ஒரே வாரத்தில் இந்தியா விடுதலையடையும் என்பது அவரின் நம்பிக்கையாக இருந்தது.

சிறையில் அரசியல் கைதிகளுக்கு ஒழுங்கான வசதிகள் இல்லாமல் போனதற்கு எதிராக அமைதி வழியில் உண்ணா நோன்பு இருந்து போராடினார்கள் கைதிகள். பகத் சிங் அதை முன்னணியில் நின்று நடத்தினார். 116 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கடுமையாக அவர் மேற்கொண்டார். அன்றைக்கு விடுதலை என்கிற சூழலில் பதினைந்து வருடங்கள் சிறையில் இருந்த பாபா சோகன் சிங் என்பவர் உண்ணாநோன்பில் பங்குகொள்ள மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

ஜவகர்லால் நேரு உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லி காங்கிரஸ் சார்பாகக் கோரிக்கை வைத்தார். ஜின்னா மத்திய சட்ட சபையில் ஐரோப்பிய கைதிகள், இந்திய கைதிகள் என்று பாகுபடுத்துவதைக் கண்டித்தார். வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின்பு அந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது அதை உலகளவில் கொண்டு சேர்க்கும் என்பதால் மட்டுமே மேல்முறையீட்டுக்கு ஒத்துக்கொண்டார் பகத் சிங்.

ஜெய் கோபால், ஹன்ஸ்ராஜ் வோஹ்ரா முதலிய துரோகிகளாக மாறிய தோழர்களால் தூக்கு உறுதிப்படுத்தப்பட்டது. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருந்தது. பகத் சிங்கை காக்க வேண்டும் காந்தி என்பது பரவலான எண்ணமாக, எதிர்ப்பார்ப்பாக இருந்தது. பகத் சிங் காந்தி இர்வினோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அரசிடம் சலுகைகள் பெற்றால் அது மக்களிடம் தங்களின் மரணத்தோடு இணைந்து வெறுப்பை ஏற்படுத்தும் என்று கணக்கிட்டார்.

காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் பகத் சிங் பற்றிக் குறிப்பிடப்படாமல் போனதால் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. காந்தி பகத் சிங்கை காக்க எதுவுமே முயலவில்லை என்பது பரவலான எண்ணமாக இருந்தது. இர்வின் இப்படி எழுதியுள்ளார் “பகத் சிங் பற்றி என்னிடம் காந்தி பேசினார். அவர் விடுதலை அளிக்க வேண்டும் என்று கேட்காவிட்டாலும், தண்டனையைத் தள்ளிப்போடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.” என்று குறிக்கிறார். மீண்டும் நான்கு நாட்களுக்கு முன்னால் காந்தி-இர்வின் பிரபு சந்திப்பின் பொழுதும் இதே விஷயத்தைக் காந்தி எழுப்பியதை தன்னுடைய ‘fullness of days’ எனும் சுயசரிதையில் இப்படி எழுதுகிறார், “பகத் சிங் தூக்கிலிடப்பட்டால் அவர் ஒரு தேசிய வீரனாக மாறி விடுவார். மக்களின் எண்ணம் தவறாக முன்முடிவு கொண்டதாக மாறிவிடும். காந்தி இந்த விஷயத்தில் நான் ஏதேனும் பண்ணாமல் விட்டால் காந்தி-இர்வின் ஒப்பந்தமே அழிந்துவிடும் என்றார். நான் தண்டனையில் இருந்து பகத் சிங்கிற்கு விடுதலை அளிப்பது சாத்தியமில்லை.” என்றேன்.

இறுதி முயற்சியாகக் காந்தி பகத் சிங்கை தூக்கிலிட்ட நாளின் ஆரம்பக் கட்டத்தில் தூக்கை முன்னரே அரசு நிறைவேற்ற இருப்பது தெரியாமல் வைஸ்ராய்க்கு ஒரு நெடிய கடிதம் எழுதினார்: “நீங்கள் முடியாது என்று மறுத்தாலும் அமைதி வேண்டும் மீண்டுமொரு முறை நான் கேட்கிறேன். சரியோ, தவறோ பொது மக்களின் பெரும்பான்மை கருத்து தூக்கு தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்பதாக உள்ளது. எந்த அடிப்படையும் ஆபத்தில் இல்லாத பொழுது மக்களின் கருத்தை மதிப்பது நம்முடைய கடமை.
தண்டனையை ரத்து செய்தால் உள்நாட்டு அமைதி காக்கப்படும். அதை நிறைவேற்றினால் அமைதிக்கு ஆபத்து காத்துள்ளது.

இந்த உயிர்களைக் காப்பது எண்ணற்ற அப்பாவி உயிர்களைக் காக்கும்.
என்னுடைய தாக்கத்தை அது அமைதிக்குச் சாதகமாக உள்ளது என்பதால் நீங்கள் மதிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னுடைய நிலையை வருங்காலத்தில் பணியாற்றுவதற்குச் சிக்கல் நிறைந்ததாக மாற்றி விட வேண்டாம்.

தூக்கு தண்டனையை நிறைவேற்றினால் அதை மீண்டும் சரி செய்ய முடியாது. மிக மிகச் சிறிய அளவில் நீதி தவறாக வழங்கப்பட்டிருக்கும் என்று நீங்கள் கருதினால் கூடப் போதுமானது. இந்தத் தண்டனையை நீங்கள் ரத்துச் செய்ய வேண்டும் என்று நான் வாதிடுகிறேன்.

நான் நேரில் வரவேண்டும் என்றால் நிச்சயம் வருகிறேன். நான் திங்களன்று பேசவில்லை என்றாலும் நான் சொல்ல வேண்டியதை எழுதிக்காட்டுகிறேன்.
இப்படிக்கு,
உங்கள் நண்பர்
(காந்தி)

இதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர்த் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் ‘எங்களைக் கைதிகள் போலத் தூக்கில் போடாதீர்கள். சுட்டுக்கொல்லுங்கள்.” என்று அரசுக்குக் கடிதம் எழுதியது காந்திக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆறு நாட்கள் முன்னரே இரவோடு இரவாகத் தூக்கிலிடப்பட்ட பகத் சிங் மற்றும் தோழர்களின் மரணம் ஒரு தேசிய எழுச்சியை உண்டு செய்தது. காந்திக்குக் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. போஸ் காந்தியுடன் கடுமையாக முரண்பட்டார். படேல், நேரு பகத் சிங்கின் தியாகத்தைப் போற்றிய அதே சமயம் வன்முறை பாதையை நிராகரித்தார்கள்.

‘ஒரு இறைநம்பிக்கையுள்ள இந்து மறுபிறப்பில் மன்னனாகப் பிறப்பேன் என்கிற நம்பிக்கையிலும், கிறிஸ்துவரோ, இஸ்லாமியரோ சொர்க்கத்தில் அற்புதமான வாழ்வு காத்திருக்கிறது என்றோ துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தியாகங்கள் செய்யலாம். என்னை மாதிரி ஒரு நாத்திகனுக்கு இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் இல்லை. மதத்தின் வார்த்தைகளில் சொல்வது என்றால் முழுமையான அழிவு அதனோடு ஏற்பட்டு விடுகிறது. என்னுடைய ஆன்மா ஏதுமற்றதாக ஆகிவிடுகிறது. பரிசு என்று எதையேனும் வாழ்க்கையில் நான் கருத துணிகிறேன் என்றால், இந்தச் சிறிய வாழ்க்கையில் நான் மேற்கொண்ட போராட்டமே எனக்கான வெகுமதி. சுயநலமான இலக்கோ, மரணத்துக்குப் பிறகு கவுரவிக்கப்படுவேன் என்கிற எதிர்பார்ப்போ இல்லாமல் என்னுடைய வாழ்க்கையை விடுதலைக்கு அர்ப்பணிக்கிறேன். இது போதும்!”- என்கிற பகத் சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன்’ நூலின் வரிகள் தான் எத்தனை பெருங்கனவு கொண்ட நாயகன் பகத் சிங் என்பதைப் புலப்படுத்தும்.

WITHOUT FEAR
KULDIP NAYAR
HARPER COLLINS
299
246 பக்கங்கள்

– By : பூ.கொ. சரவணன்.