News

நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு

Spread the love

தண்ணீர் என்பதன் வேதியியல் எழுத்துரு H2O. அதவாது, ஓர் ஆக்சிஜன் (உயிர்வளி) அணுவுடன் இரண்டு ஹைட்ரஜன் (நீரியம்) அணுக்கள் சகப்பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டு ‘நீர்’ உருவாகிறது. ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வளிமங்கள். மேலும், தீப்பற்றுதலை ஊக்குவிக்கக்கூடிய வினையூக்கிகளும் கூட. இரண்டுமே எரி வளிமங்கள்.

ஆனால், இரு மூலக்கூறு உயிர்வளியும் ஒரு மூலக்கூறு நீரியமும் இயற்கையின் ஒரு பொதுவிதிக்குள் உட்படும்போது, எரியக்கூடிய தன்மையுடைய இவ்விரு அணுக்களும் இணைந்து குளிரக்கூடிய நீர் உருவாகிறது. நெருப்பிலிருந்து நீர் பிறக்கிறது. தான் உள்ளடகியிருக்கும் சக்திக்கு நேரெதிரான சக்தியாகவும் ஒரு மூலக்கூறு தன்னை உருமாற்றிக்கொள்ளும் விந்தை இயற்கையின் நிகழ்வற்புதங்களுள் ஒன்று. அவ்வகையில், தண்ணீர் ஒரு திரவரகசியம்.

தண்ணீரின் அற்புதப்பண்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் ஹோமியோபதி மருத்துவ முறைமையும் தனிச்சிறப்பு அடைகிறது. ஒரு உலோகத்துண்டோ, பாம்பின் விஷமோ, கந்தக அமிலமோ எந்த மூலப்பொருளாக இருப்பினும் அதிலிருந்து ஒருதுளி எடுத்து, 99 துளி தண்ணீரோடு சேர்க்கப்படுகிறது. பின்னர் அந்தக்கலவை தனிச்சிறப்பான முறையில் நன்றாகக் கலக்கப்படுகிறது. இதன் மூலம் அக்கலவை நூறுமடங்கு செறிவுக்குறைதலுக்கு உள்ளாகிறது.

அடுத்து, இந்தக் கரைசலிலிருந்து ஒருதுளி எடுத்து, மீண்டும் 99 துளி நீரில் கலக்கப்படுகிறது. இக்கலவை பத்தாயிரம் மடங்கு செறிவுகுறைந்தது. இந்தக் கலக்குதல் தொடர்ந்து ஆறுமுறை படிநிலைக்குச் செல்லும்போது ஒரு இலட்சம் கோடிமடங்கு செறிவு குறைந்த கலவையாகிறது. அதாவது, ஆறு நீச்சல் குளத்தில் ஒரு சொட்டு மருந்து என்பதற்குச் சமம். மருந்தின் செறிவைக் குறைக்க குறைக்க அதன் வீரியம் அதிகரிக்கும் என்பதால், இந்த செயல்முறை இன்னும் இன்னும் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது.

அடுத்த ஆறு தொடர் நிலைகளில், வங்கக்கடலில் ஒருதுளி மருந்தை கலப்பதற்குச் சமமான நிலையை எட்டிவிடும். பொதுவான அடிப்படை மருந்து முப்பதுமுறை செறிவுக்குறைத்தலில் இருக்கும். இது பூமியிலுள்ள மொத்த கடற்பரப்பில் ஒருதுளி மருந்தை கலப்பதற்கு சமம். இந்த முறையில் தீவிர செறிவுக்குறைக்கப்பட்ட கரைசலின் சிலதுளிகள் மட்டுமே சர்க்கரை உருண்டைகளான மாத்திரைகள் மீது ஊற்றி மருந்தாகத் தரப்படுகிறது.

ஹோமியோபதி இந்த ‘நீர்கலத்தல்’ செயல்முறையை கண்டறிந்து சொன்வர் பிரான்சைச் சேர்ந்த விஞ்ஞானி ஜாக்ஸ் பென்வெனிஸ்டே என்பவர். இவர் செய்த ஒரு ஆய்வின் முடிவில், இறுதியாக எஞ்சிய நீர் அதிலிருந்த வேதிப்பொருட்களை நினைவில் வைத்திருந்தது. அதனால் இதை ‘நீரின் நினைவாற்றல்’ என பென்வெனிஸ்டே அழைத்தார். நினைவை தக்கவைத்துக்கொள்ளும் நீரின் இந்தத் குணம்தான் ஹோமியோபதிக்கு அறிவியல் அடிப்படையாகச் சொல்லப்படுகிறது.

இறுதித்துளி நீரானது உலோகத்தின் பண்புகளை வெறுமனே நடித்துக்காட்டும் பிம்பமாக மட்டும் உடலுக்குள் இருந்து நோயணுக்களை அச்சப்படுத்தி நீக்குகிறது. நீரின் கண்ணாடித்தன்மை மருந்துகளை பிம்பங்களாக எதிரொளிக்கிறது. நோய்மை நீங்கியபின், அந்தத் துளியானது நடித்துகாட்டல் தன்மையை இழந்து சாதாரணத் தண்ணீரின் பண்பைப் பெற்றுவிடுகின்றன. நீரே மருந்தாகும் அதியுன்னதம் ஆழ்ந்த பொறுமையோடும் அரூபமாகவும் மனிதனுக்குள் நிகழ்கிறது.

பூமி, நீரைப் பற்றிக்கொண்டதன் பின்னணியில் ஒரு பேருண்மை நிறைந்திருக்கிறது. ஒரு சொட்டுத்தண்ணீரானது கோடிகோடி உயிர்களின் கருப்பை. பால்வெளி அண்டம் முழுக்கக் கூடி பூமியில் நீர் உருவாகும் நிகழ்தகவுக்காக யுகக்கணக்கில் காத்திருந்துள்ளன. எழுபது சதம் நீர்மட்டுமே கொண்ட ஒவ்வொரு மனிதஉடலும், தத்தம் மனதில்வைத்து தொழவேண்டிய உலகப்பொதுயிறை தண்ணீர்தான். வானம் ஒழுகிச்சொட்டும் ஒவ்வொரு துளி நீரும் மானுடதிற்கான ஞானம்.

உலக தண்ணீர் தினம் இன்று. தண்ணீருக்காக உண்ணாநோன்பிருந்து செத்தவர்களின் (செத்துக்கொண்டிருப்பவர்களின்) வாழ்வுக்கதையை சுமந்துவரும் “நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு” என்கிற சிறுநூல்… தண்ணீருக்காக அலைகிற பாலைநில சுடுபாதங்களுக்கு காணிக்கையாகிறது.

நீர்வழிப் படூஉம் புனைபோல இவ்வாழ்வு நில்லாது அலையசைந்து செல்லட்டும் காலப்பெருவெளியில்..