FEATUREDLatestஅறிவியல்

நமக்கென்று சொந்தமாக ஜிபிஎஸ் (GPS)

Spread the love

நமக்கென்று சொந்தமாக ஜிபிஎஸ் (GPS)
by Alwar Narayanan

காட்சி 1: மாலை 3 மணி. உங்கள் பாப்பா இன்னமும் பள்ளியில் இருந்து வீடு வந்து சேரவில்லை. வர வேண்டிய நேரம் தான். உங்கள் கைபேசியில் google வரைபடத்தில், மஞ்சள் நிற பள்ளிப் பேருந்து அதன் பாதையில் வரவில்லை. மாறாக எங்கோ பெருநகரத்தின் மூலையில் ஒரு குப்பத்தில் நிற்பதாக காட்டுகிறது. உங்களுக்கு மூச்சிரைக்கிறது. ரத்த அழுத்தம் எகிறுகிறது. எத்தனையோ வன்முறை சம்பவங்களில் நாட்டில். எல்லாம் கண் முன் வந்து போகின்றன. கண் இருட்டுகிறது. தவித்துப் போகிறீர்கள் ! பள்ளிக்கு போன் செய்தாலும் யாரும் எடுக்க எடுக்கவில்லை. பேருந்தில் வரும் ஆயாவின் தொலைபேசி மாறிவிட்டது போலும்.

காட்சி 2: 5 மணிக்கு கோயம்புத்தூர் வண்டியை பிடிக்க வேண்டும். வாகன நெரிசல் மிக அதிகமாக உள்ளது.. உங்கள் சித்தி மகளோ விடுவதாயில்லை. இப்போதுதான் எண்ணெய் சட்டியை அடுப்பில் ஏற்றுகிறார்.. “ஓலா பிடித்துப்போய் கொள்ளலாம், 20 நிமிடம் தான் ஆகும்” என்று மாப்பிள்ளை சாவகாசமாக சொல்லுகிறார். ஒருவழியாக கடைசி நிமிடம் வரை இருந்துவிட்டு அன்புத் தொல்லையில் இருந்து விடுவித்துக்கொண்டு சாலைக்கு வந்து ஓலாவை கூப்பிட்டால், எதுவுமே கிட்டத்தில் இல்லை. Google வரைபடத்திலும் உங்கள் இருப்பு சரியாக காட்டாமல் மாபெரும் நீல வட்டம் தெரிகிறது. ஓலா ஊசி விழவில்லை. உங்களுக்கோ படபடப்பு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாதாரண ஆட்டோ கூட தென்படவில்லை. இந்த லட்சணத்தில் ரயிலை பிடிக்க முடியுமா முடியாதா ?

காட்சி 3: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் ஜில்லாவில், முஷ்தோக் பள்ளத்தாக்கின் இருமருங்கும் உள்ள பனிபடர்ந்த கடினமான பாறை குன்றுகள். பாகிஸ்தானியர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு மலையுச்சியை கைப்பற்றி முகாம் அமைந்துள்ளதாக செய்தி வருகிறது. அதிலொன்று பிம்பிளே 2 எனப்படும் குன்று. 15 ஆயிரம் அடி உயரத்தில் கிட்டத்தட்ட செங்குத்தான மலை. மலைமேலும் மலைக்கு பின்னாலும் எதிரிகள் இருப்பதை கண்டுணர போதிய வசதி இல்லை. அவர்கள் இருப்பிடம் துல்லியமாக தெரிந்தால்தான் ஏவுகணையை அனுப்பமுடியும். அதற்கு தேவையான GPS ஏனோ அன்று வேலை செய்யவில்லை.

இந்திய விமானப்படையும் இன்னமும் வந்துசேரவில்லை. நேரத்தை வீணடிக்காமல் துணிந்து களத்தில் இறங்கினார் அனுஜ் நய்யார். தில்லியை பிறப்பிடமாக கொண்ட அனுஜ் நய்யார் என்ற ராணுவ வீரன் அன்று 17 ஜாட் பட்டாலியனில் டூட்டி செய்து கொண்டிருக்கிறார். அந்த 7 பேர் கொண்ட குழு, ராக்கெட் லாஞ்சர் மற்றும் கையெறி குண்டுகள் கொண்டு முன்னேறி துணிவுடன் சென்றது. எதிரியின் குண்டுமழைக்கு நடுவே புகுந்து பாகிஸ்தானிய குண்டு காப்பரண்களை தகர்த்தது. அந்த சண்டையில் அனுஜ் வீரமரணம் எய்தினார். (இந்தியா “டைகர் ஹில்” எனப்படும் குன்றை பிடித்து பாகிஸ்தானியர்களை பின்வாங்க செய்ய, இந்த குன்று உதவியது) மரணத்துக்குப்பின் மஹாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. அவர்பெயரில் தில்லி ஜனக்புரியில் ஒரு சாலை பெயரிடப்பட்டுள்ளது. (உண்மை செய்தி)

காட்சி 4: விழிஞ்சம் ஊரில் மீன்சோறு தின்றுவிட்டு கடல் நடுவில் மீன்பிடிக்க வந்துள்ள கடலாடி செல்டன் அண்ணனுக்கு பனியன் கசகசவெனிருந்தது. ஊரைவிட்டு வந்து அநேகமாக இன்றோடு 5 நாளிருக்கும். கையிருப்பு டீசல் இன்னும் 2 நாளைக்குத்தான் வரும். எங்கே இருக்கிறோம் என்றே தெரியாது. கலங்கரை விளக்கங்கள், நட்சத்திரங்கள், நகர விளக்குகள், மற்றும் உள்ளுணர்வு, இவற்றை நம்பி திசை தெரிந்துகொள்ளவேண்டும். படகில் பாலிதீன் சுற்றப்பட்டு பாலு அண்ணன் கொடுத்த GPS பேட்டரி கெட்டு கிடக்கிறது. அது இருந்தாலும் அவ்வப்போது வேலை செய்யாது. மத்தியானம் 3 மணி. மேற்கில் பயங்கர சூறாவளிக்காற்றுடன் கருத்தமேகங்கள் தூரத்தில் இடியுடன் உறுமுவது தெரிகிறது. காற்றின் வேகத்தில் இன்றிரவு இங்கே வந்துவிடும். இப்போதே படகு ஆட ஆரம்பித்துவிட்டது. அது பெரும் புயலென்று செல்டனுக்கு தெரியவில்லை…. 15 நாளுக்கு பிறகு விழிஞ்சத்தில் அவன் வீட்டில் படத்தின்முன் ஒற்றைத்திரி விளக்கெரிந்தது.

இத்தனை பிரச்சனைகளுக்கும் பின்னால் இருப்பது அமெரிக்க அரசாங்கம் தற்போது அளித்துக் கொண்டிருக்கும் ஜிபிஎஸ் சேவை. அதனோடு சேர்ந்த கூகுள் தனியார் நிறுவனம். இதை நம்பித்தான் மொத்த இந்தியாவும் ஏன் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா நினைத்தால், லேசாக சொடுக்கினால் உலகமே ஸ்தம்பித்து விடும். அதுதான் இன்றைய நிலைமை.

இதில் என்ன பிரச்சனை. நன்றாக தானே ஓடுகிறது என்கிறீர்களா ?

இது உங்களுக்கு இலவச சேவை. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இந்த சேவையை உங்களுக்கு வழங்கும் கம்பெனிகளிடம் கட்டணமாக வசூலித்து விடுவார்கள். 80 லட்சம், ஒரு கோடி என்று வருடா வருடம் கூகுள் கம்பெனிக்கு லைசன்ஸ் கட்ட வேண்டும். இது எப்படி என்றால் “பார் அண்ட் ரெஸ்டாரன்ட்” சாராயக் கடைகளில் பெண்களுக்கு இலவசம் என்று சொல்லி கூட்டத்தை வரவழைத்து உங்கள் பில்லில் தீட்டுவது போல. உலகில் எப்போதுமே ஓசிச்சோறு கிடைக்காது.

இந்த கம்பெனிகள், சிக்கனமாக இருக்க அவ்வப்போது ஜிபிஎஸ் சேவையை நிறுத்தி உங்களை குழப்புவது இதனால்தான்.

அது மட்டுமல்ல, விமானங்கள் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் இலக்கை அடைய ஜிபிஎஸ் வேண்டும். போர் சமயத்தில் அமெரிக்கா நம் ராணுவத்துக்கு ஜிபிஎஸ் சேவை தர மறுத்து விட்டது. அதனால் ஏவுகணைகளை ஏவ முடியாமல் போபர்ஸ் துப்பாக்கியை வைத்து சமாளித்து விட்டோம். பாலக்கோடு தாக்குதலில் கூட இஸ்ரேலிய தயாரிப்பான SPICE-2000 ஏவுகணைகளை குண்டுகளை துல்லியமாக வழிநடத்த தவறிவிட்டோம்.

இதற்கு ஒரே வழி தான் உள்ளது. இந்தியாவுக்கு என்று சொந்தமாக ஜிபிஎஸ் அமைப்பதுதான் அது. அமெரிக்காவிடம் 24 செயற்கைக்கோள்கள் இந்த சேவைக்கு உள்ளன. நமக்கு 7 இருந்தால் போதும். கூட 2 ஒப்புக்கு வேண்டும்.

நமக்கென்று ஒரு GPS . The Indian Regional Navigation Satellite System (IRNSS) என்பது கார்கில் போருக்கு பின்னால் இந்தியாவில் தொடங்கப்பட்ட திட்டம். இதில் முதல் IRNSS-1A செயற்கைக்கோள், 1 July 2013 அன்று ஏவப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடைசி செயற்கைகோள் IRNSS-1G என்பது 28 April 2016 அன்று ஏவப்பட்டது.

ஆனால் அதற்குள் முதலாவது செயற்கைக்கோளின் துல்லியமான அணுக் கடிகாரம் செயல் இழந்து விட்டது. ஆகவே 31 August 2017 அன்று IRNSS-1H என்ற செயற்கைக்கோள் புதிய அணுக்கடிகாரத்துடன் அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.

இஸ்ரோ வரலாற்றில் முதல் முதலாக முற்றிலும் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனி மூலம் கட்டமைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இது தோல்வியுற்றது. செயற்கைக்கோள் உட்புறமாகப் பிரிந்தது, ஆனால் வெப்பக் கவசம் எதிர்பார்த்தபடி திறக்கப்படவில்லை, இதனால் செயற்கைக்கோள், ராக்கெட்டின் மேல் கட்டத்திற்குள் சிக்கிக்கொண்டது.

எப்படியோ 12 April 2018 அன்று IRNSS-1I என்ற இன்னொரு செயற்கைக்கோளை (சிவன் பதவியேற்ற புதிதில்) அனுப்பி இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்துள்ளது. பிரதமர் அவர்கள் 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலில் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஒரு பகுதி இதில் வைத்து அனுப்பிய அணுக் கடிகாரம் வாங்குவதாகும்.

இந்தியா முழுவதும் ஜிபிஎஸ் சேவை அளிக்க இன்னமும் மூன்று தேவைப்படுகிறது.

இப்படியாக மாதம் ஒரு ராக்கெட் என்று ஏவிக் கொண்டிருந்த இஸ்ரோ, நடுவில் குளறுபடி செய்து எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு நிலவுக்கு பயணம் மேற்கொள்கிறது. அப்படியே விக்ரம் லேண்டர் பத்திரமாக இறங்கி இருந்தாலும் அதில் இருந்த கருவிகள் பொதுவாக விண்வெளி ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தனிம ஆராய்ச்சிக்கு தான். மக்களுக்கு பெருமையைத்தவிர ஒன்றுமில்லை.

இதனை முழுவதுமாக படித்திருந்தால் எது நமக்கு அவசியம் தேவை என்பதை இந்நேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். அதுவும் வேண்டும், இதுவும் வேண்டுமென்றால் ஒன்றும் கிடைக்காது.

அடுத்தமுறை இஸ்ரோ சிவனை பார்த்தால் இறுக்கி முத்தமிடாமல் லேசாக அவருக்கு காதில் எடுத்துச் சொல்லவும்…..

நம்ம ஊர் ஆள் தானே !

Leave a Reply