FEATUREDLatestTechnologyஅறிவியல்

ஜியோகொரோனா Geocorona

Spread the love

Breaking News!
(தொலைக்காட்சியில் மட்டும்தான் பிரேக்கிங் நியூஸ் சொல்வீங்களா? அறிவியலிலும் நாங்கள் சொல்வோம்ல

பூமியின் ‘காற்றுவெளி மண்டலத்தை’ (Atmosphere) தரையிலிருந்து, ஐந்து முக்கிய படைகளாகப் (Layers) பிரித்திருக்கிறார்கள். அவற்றில் கடைசியாக விளிம்பில் இருப்பது ‘வெளியடுக்கு’ (Exosphere) என்பதாகும். தரையிலிருந்து கிட்டத்தட்ட 10000 கிமீ வரை இது பரந்திருக்கிறது. சில ஆயிரங்கள் சற்று மேலேயும் இருக்கலாம். அதற்கும் மேலே காற்றேயில்லாத வெளி. அதாவது விண்வெளி (Space). பூமியின் காற்றுவெளி மண்டலத்தைத் தாண்டி, விண்வெளியில் நுழைந்து சந்திரனுக்குச் சென்றதாகத்தான் இதுவரை நம்பி வந்தோம். அதுதான் இல்லை என்கிறார்கள் இன்று.

இப்போது நீங்கள் நினைக்கலாம், ‘சந்திரனுக்கு மனிதன் போகவில்லை’ என்பதைப்பற்றிச் சொல்ல வருகிறோம் என்று. அந்த மாவையெல்லாம் நாம் எப்போதோ அரைத்தாகி விட்டது. இப்போது அந்த மா புளித்தும் போயாச்சு. இங்கு நாம் சொல்ல வந்த விசயமே வேறு.

மனிதன் சந்திரனில் கால் வைத்த்தான் என்று எடுத்துக் கொண்டாலும், எந்தவொரு மனிதனும் பூமியின் அட்மாஸ்பியரைத் தாண்டியதே இல்லை என்று இப்போது விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா? எங்களுக்கும் குழப்பமகத்தான் இருந்தது.

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையமும், நாஸாவும் (ESA/NASA) இணைந்து ‘சோஹோ’ சாட்லைட் தொலைநோக்கி மூலம் (Solar and Heliospheric Observatory – SOHO) கண்டுபிடித்திருக்கும் ஒரு விசயம்தான் இன்று அறிவியல் உலகத்தின் பிரேக்கிங் நியூஸாகியிருக்கிறது. பூமிக்குச் சொந்தமான வாயுக்கள் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் கிலோமீட்டர் வரை, பூமியைச் சுற்றிப் பரவியிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறது சோஹோ. இது பூமிக்கோளத்தின் விட்டத்தைப்போல, ஐம்பது மடங்கு பெரியதாகும். அதாவது, பூமியின் உண்மையான அட்மாஸ்பியர் 630000 கிமீ அளவு கொண்டது என்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், சந்திரன்கூட பூமியின் அட்மாஸ்பியருக்குள்ளேயே இருக்கின்றது என்பதுதான். பூமியின் அட்மாஸ்பியருக்குள்ளேதான் சந்திரன் சுற்றிவந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே, சந்திரனுக்ஜு மனிதன் போயிருந்தாலும், பூமியின் அட்மாஸ்பியரை அவன் தாண்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஹைட்ரஜன் அணுக்களாலான மிகமெல்லிய முகில் படலம் 630000 கிமீ வரை படர்ந்திருப்பதை சோஹோ வின்கலத் தொலைநோக்கி அவதானித்திருக்கிறது. இந்த ஹைட்ரஜன் அணுக்கள் மிகமிக அடர்த்தி குறைந்த நிலையிலேயே காணப்பட்டாலும், பூமியின் ஈர்ப்புடன் இணைந்தே சுழலுகின்றன. இதனை ‘ஜியோகொரோனா’ (Geocorona) என்கிறார்கள்.

இதுவரை, பூமியைச் சற்றே குறைத்தே நாம் மதிப்பிட்டு வந்திருக்கிறோம். அதன் விசாலம் இன்று அறிவியல் உலகையே பிரமிக்க வைத்திருக்கிறது.

#earth #space #exophere #Rajsiva