FEATUREDGeneralSocialmediaசிறார் கதை

சைக்லிஸ்டைடின் புதிய நண்பர்கள்

Spread the love

*சைக்லிஸ்டைடின் புதிய நண்பர்கள் – விழியன்*
_சிறார் கதை 035_

சைக்லிஸ்ட் என்றால் யார் தெரியுமா? வீட்டில் இருந்து பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ செல்பவர்களை சைக்லிஸ்ட் எனச் சொல்லமாட்டார்கள். சைக்லிஸ்ட் என்பவர்கள் நெடும்தூரம் சைக்கிளில் பயணம் செய்பவர்கள். ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு, ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கூட சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் ஆசிரியராகவோ, இசைக் கலைஞராகவோ, புகைப்பட கலைஞராகவோ, பெயிண்டராகவோ, விஞ்ஞானியாகவோ, எந்தப் பணி செய்பவராகவும் இருக்கலாம்.
சரி, கதைக்கு வருவோம். நம் கதையின் நாயகன் ஒரு சைக்லிஸ்ட். அவர் ஒரு கணித விஞ்ஞானி. பெயர் ஹான்ஸ். அவர் ஹாலாந்து நாட்டுக்காரர். அவருக்கு ஆஸ்திரேலியா கண்டத்தை சுற்றிப்பார்க்க ஆசை. (ஹாலந்து நாடு எங்கே இருக்கு, ஆஸ்திரேலியா நாடு எங்கே இருக்கு என அப்பா/அம்மாவை காட்டச்சொல்லவும்). அதுவும் சைக்கிளில் சுற்றிப்பார்க்க ஆசை. கிளம்பியும் விட்டார். நம்ம ஊர்களைப்போல நிறைய வீடுகள் எல்லாம் ஆஸ்திரேலியாவில் இல்லை. மனிதர்களும் மிகவும் குறைவு தான். சில சமயம் ஒருவீட்டிற்கும் மற்ற வீட்டிற்கும் இடைவெளி சுமார் 200 கி.மீட்டர் கூட இருக்குமாம். நம்ம ஊரிகளில் நம்ம வீட்டிற்கும் எதிர் வீட்டிற்கும் இடைவெளி பத்து மீட்டர் தான் இருக்கும்.

ஒரே ஒரு பை மட்டுமே எடுத்துச்சென்றார். ஹான்ஸின் பையில் இருந்தது 2-3 ஆடைகள். உணவுப்பொருட்கள். நிறைய தண்ணீர். இரண்டு நாளைக்கு தேவையான தண்ணீர் எடுத்துச்செல்ல வேண்டும் அல்லவா. தண்ணீர் தான் பிரதானம். அதே போல இரவு எங்கேனும் தங்குவதற்கு ஒரு டெண்ட் இருந்தது. டார்ச் லைட். அந்த சாலை நேராக இருந்தது. மிக நேராக ஒரு நேர் கோடுபோல. வளைவுகள் எதுவும் இல்லை. எவ்வளவு தூரம் நேராக இருந்தது தெரியுமா? 1200 கி.மீட்டர். ரொம்ப தூரம் தான் இல்லையா.. அவருக்கு பிடித்தமான பாடலை பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டிச்சென்றார். பல கிலோமீட்டர்களுக்கு இரண்டு பக்கமும் எதுவும் இல்லை. நம்ம ஊர்களைப்போல வயல்கள், மரங்கள் கூட இல்லை. தூரத்தில் ஏதாவும் நகர்வதைப்போல இருக்கும். அவை கங்காருக்கள். ஆஸ்திரேலியாவில் இரண்டு மிருகங்கள் தான் அதிகம் கங்காருக்கள் மற்றும் கோவாலா கரடிகள்.
இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும் சாலையில் சென்றுகொண்டிருந்தார் ஹான்ஸ். அப்போது தான் யாரோ தன்னை பார்ப்பது போலவும் பின் தொடர்வது போலவும் உணர்ந்தார். மரத்தில் அசைவுகள் இருந்தது. சைக்கிளை நிறுத்தி ஒரு மர நிழலில் அமர்ந்தார். சாப்பிட தோன்றியது. நாளை மாலை தான் இதோடு வீடுகள் தென்படும் எனச் சொல்லி இருந்தார்கள். அதனால் தண்ணீரை கவனமாக பயன்படுத்தினார்.

அவர் முன்னே திடீரென இரண்டு உருவங்கள். ஆமாம் கோவாலா கரடிகள் தான். மூக்கு நீளமாக இருக்கும். குட்டி குழந்தை போல அழகாக இருக்கும். ஹான்ஸ் அந்த கரடிகளைப் பார்த்து புன்னகைத்தார். அவை அங்கேயே நின்றன. தான் சாப்பிடும் ரொட்டித்துண்டுகள் சிலவற்றை கரடிகளுக்கு கொடுத்தார். அவை வாங்கி தின்றன. தண்ணீர் பாட்டிலைக் கேட்டு அதிலிருந்த தண்ணீரையும் பருகின.

அங்கிருந்து ஹான்ஸ் கிளம்பும்போது தானும் அவருடன் சைக்கிளில் வருவதாக சைகை செய்தன. அவரும் தன் பையை முன்னே வைத்துக்கொண்டு பின்னிருக்கையில் கோவாலா கரடிகளை அமர வைத்தார். கூடுதல் சுமை இருந்ததால் கொஞ்சம் மெதுவாகவே சைக்கிளை செலுத்தினார். இரண்டு மணி நேரம் கழித்து ஒரு இடத்தில் ஓய்வெடுத்தார். அடிக்கடி கோவாலா கரடிகளைப் பார்த்து புன்னகைத்தார். இருட்ட துவங்கியதும் ஒரு நல்ல இடமாக பார்த்து டெண்ட் அமைத்தார். கோவாலா கரடிகளும் அவருடன் தங்கின. உணவு மறுநாள் இரவு வரை வராது. தண்ணீரும் தீரும் நிலையில் இருந்தது. ஆனாலும் மகிழ்வாக கரடிகளுடன் பகிர்ந்தார்.

ஒரு நாள் முழுக்க சைக்கிள் ஓட்டியதால் அசதியாக இருந்தது ஹான்ஸிற்கு. உறங்கிவிட்டார். நடு இரவில் பயங்கர சத்தம். வெளியே எட்டிப்பார்த்தபோது கோவாலா கரடிகள் சத்தமிட்டுக்கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெரிய மிருகம் ஓடிக்கொண்டிருந்தது. ஹான்ஸை இந்த கரடிகள் தான் காப்பாற்றி இருக்கின்றது. மீண்டும் புன்னகைத்துவிட்டு நிம்மதியாக உறங்கினார் ஹான்ஸ்.

காலை எழுந்த போது இரண்டு கரடிகளும் அருகே காணவில்லை. அவர் தண்ணீர் பருகும் பாட்டில் மட்டும் காணவில்லை. டெண்டை மடக்கி பொருட்களை பையில் போட்டு கிளம்ப தயாரானார். தூரத்தில் இரண்டு கரடிகள் வருவது தெரிந்தது. கையில் தண்ணீர் பாட்டில். பாட்டில் நிறைய தண்ணீர் இருந்தது. மற்றொரு கரடியின் கையில் நிறைய பழங்கள் இருந்தன. ஹான்ஸிடம் கொடுக்கப்பட்டது. பையில் வைத்துக்கொண்டார். சைக்கிளில் ஏற சைகை செய்தார். கரடிகள் ஏறவில்லை. போய்வாருங்கள் என்பது போல சொன்னது. ஹான்ஸ் சைக்கிள் ஏறி கைகள் அசைத்து தன் பயணத்தை மீண்டும் துவங்கினார்.

-விழியன்

_(ஹான்ஸ் நிஜமான விஞ்ஞானி. ஆறுமாதம் ஆஸ்திரேலியாவை சைக்கிளில் சுற்றிவந்தவர். நேரடியாக அவருடைய அனுபவங்களை கேட்டு மகிழ்ந்தேன். மற்றபடி கோவாலா கரடிகள் கதை கற்பனையே)_