Latestஅறிவியல்

சூரியன் பூமி

Spread the love

Anjali Priya

1. பூமி தன்னைத்தானே சுற்ற தேவையான ஆற்றல் அதற்கு எதன் மூலம் எவ்வாறு கிடைக்கிறது?

2. ஒரு குறிப்பிட்ட நீள் வட்டப் பாதையில் அடி பிறழாமல் எவ்வாறு சுற்றுகிறது

1. எதன் மூலமும் கிடைத்துக் கொண்டிருக்கவில்லை. ஒரு முறை கிடைத்த ஆற்றல்தான். நியூட்டனின் முதலாவது விதியினையொத்து, புறவிசைகள் ஏதும் செயல்படாத நிலையில் அது தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறது.

நெபுலார் கொள்கையின்படி தேமேயென்று கிடந்த ஒரு பெரிய மேகக்கூட்டம் அருகே இருந்த ஏதோ ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறியதால், தூண்டப்பட்டு மேகத் துகள்கள் அலைவுற்று, சுழலத் துவங்கின. அவைகள் ஒன்றோடு ஒன்று நெருங்கியதால் நிறை உண்டாகி, அதன் காரணமாக ஈர்ப்பு விசை உண்டாகி, கோளவடிவம் பெற்று இன்னும் வேகமாகச் சுழலத் துவங்கின.

சூரியன் என்ற நட்சத்திரம் தோன்றி அதனைச் சுற்றிய தளத்தில் கோள்களும், துணைக்கோள்களும் உருவாகின. சில துணைக்கோள்கள் தானாக உருவாகி பெருங்கோள்களின் ஈர்ப்பு விசைக்குள் உட்பட்டு அவற்றைச் சுற்றின. அப்பொழுதெல்லாம் இப்போது இருப்பது போல் அமைதி இல்லை. மோதல்களும் வெடிப்புகளும் நிகழ்ந்து கொண்டே இருந்தன. அப்படியொரு மோதல்களின் காரணமாக கோள்களின் ஒரு பகுதி பிய்த்து எறியப்பட்டு அவைகள் துணைக்கோள்களாகவும் மாறின. இப்படித்தான் நம் சூரிய குடும்பத்தின் தோற்றம் அமைந்தது.

ஆக, அப்படியொரு முதற்கணத்தில் கிடைத்த விசையே யாவற்றின் சுழற்சிக்கும் காரணமாக அமைந்தது. ஒழுங்கற்ற வடிவத்தில் சுழலும்போது இருந்த வேகத்தை விட, ஈர்ப்பு விசை காரணமாக கோளவடிவம் எடுத்துச் சுருங்கியதும் இன்னும் வேகம் கூடியது. சில மோதல்கள் சுழலும் வேகத்தை அதிகரித்தன. சில மோதல்கள் சுழலும் வேகத்தைக் குறைத்தன.

இப்பொழுது அப்படி எந்த மோதல்களும் இல்லாத காரணத்தால் இதே வேகத்தில் நம் பூமி சுற்றிக்கொண்டே இருக்கிறது. நிலவின் ஈர்ப்பு காரணமாக பூமியின் சுழற்சி வேகம் பாதிக்கப்படுகின்றது என்றாலும் அது மிகச்சிறிய அளவே. நூறு வருடத்திற்கு அப்புறம் இன்றை விட 2 மில்லி செகண்ட் சுழலும் வேகம் குறையக்கூடும். (ஒரு நொடியில் 1/500 பகுதிதான் 2 மில்லி செகண்ட்.)

2. சிதறி ஓடிய மேகக்கூட்டத் துகள்களை எப்படி ஈர்ப்பு விசை இழுத்து தன்னைத்தானே ஒரு அச்சில் சுற்ற வைத்ததோ அதே போன்று, நட்சத்திரமாக உருவாகிய சூரியனின் ஈர்ப்பு விசை அதன‍ைச் சுற்றி உருவான கோள்களை இழுத்து தன்னைச் சுற்ற வைத்தது. அதாவது நேர் கோட்டில் ஓடிக்கொண்டிருந்த பூமியை (மற்ற கோள்களையும்) தன் ஈர்ப்பு விசையால் தன்னைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் சுற்ற வைத்தது.

நீள்வட்டப் பாதை என்றால் நாம் நினைப்பதைப் போல அத்தனை நீள்வட்டம் இல்லை. பூமி சூரியனுக்கு அண்மையில் இருக்கையில் 147,098,290 கிலோமீட்டரும், தொலைவில் இருக்கையில் 152,098,232 கிலோமீட்டரும் இருக்கும். விகிதாச்சாரம் பார்த்தால் 1.034தான். ஆக, சற்றே மாறுபட்ட வட்டப்பாதைதான்.

ஈர்ப்பின் காரணமாக சூரியனுக்கு அருகே வருந்தோறும் பூமியின் வேகம் அதிகரித்து சூரியனை வேகமாகக் கடந்து விடும். சூரியனை விட்டு தொலைவே இருக்கையில் மெதுவாகச் சுற்றிப் பின் திரும்பவும் ஈர்ப்பின் காரணமாக பூமியின் வேகம் அதிகரித்து மீண்டும் சூரியனை மறுபுறம் வேகமாகக் கடந்து விடும். ஆக, சூரியனுக்கு அண்மை நிலையில் இருக்கையில் பூமி வேகமாகவும், தொலைவில் இருக்கையில் மெதுவாகவும் சூரியனைக் கடக்கும்.

நியூட்டோனியன் பார்வையின் படி சூரியன் பூமியை ஈர்ப்பு விசை என்னும் கயிறு கொண்டு கட்டி வைத்துள்ளது. பூமியின் திசைவேகம் சூரியனின் ஈர்ப்பு விசைக்குச் செங்குத்தாக இருப்பதால் அது சூரியனைச் சுற்றி வருகிறது. ஏதேனும் மோதல் காரணமாக பூமியின் வேகம் குறைந்தால் அது சூரியனுக்குள் போய் விழுந்து விடும். வேகம் அதிகரித்தால் சூரியனின் ஈர்ப்பை விட்டு வெளியேவோ அல்லது சற்றுத் தள்ளி வேறு சுற்று வட்டப் பாதைக்கோ போய்விடும்.

ஐன்ஸ்டேனியன் பார்வையின் படி, சூரியன் தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைத்து வைத்துள்ளது. அதற்குள்… அந்த வளைந்த வெளிக்குள் வந்து சிக்கிக் கொண்ட பூமி, அந்த வளைவிற்குள்ளேயே சுற்றி வருகிறது.

சரி, அது ஏன் கச்சிதமான வட்டப்பாதையாக அல்லாமல் சற்றே நீள்வட்டப்பாதை?

எளிய இயக்கவியலின்படி சொல்வதென்றால், நகர்ந்து கொண்டிருக்கும் இரண்டு புள்ளிகளை மையமாக வைத்து ஒரு மூடிய வடிவியல் அமைப்பு உருவாக்கினால் அது நீள்வட்டமாகத்தான் அமையும். சூரியனும் பூமியும் வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும் இரு புள்ளிகள். ஒன்றையொன்று ஈர்த்துக்கொண்டு நகர்வதால் அவற்றின் பாதை நீள்வட்டத்தில்தான் அமையும்.

இந்தப் படத்தை புதிய பக்கத்தில் திறந்து பாருங்கள்.
http://www.davidcolarusso.com/astro/images/make_ellipse.gif

படம் எடுக்கப்பட்ட தளம் : http:// howthingsfly.si. edu/sites/default/files/image-large/keplerlaw3_lg.jpg