Politics

சமூக சேவையும் – செருப்படியும்

Spread the love

சமூக சேவையும் – செருப்படியும்

நான்கு வருடங்களுக்கு முன்பு ரெண்டு காரணங்களுக்காக பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்க துவங்கினோம், முதல் காரணம் ஏதாவது செய்யனும் நம்ம உழைப்பில் இந்த சமூகம் முன்னேற்றம் அடஞ்சதுன்னு காட்டிக்கனும் அது என்னோட ஈகோவுக்கு தீனியாவும் இருக்கனும், இன்னொரு காரணம் நாம சும்மா இருக்கோம்னு யாரும் சொல்லிடக் கூடாது.

டன் கணக்குள குப்பைகளை கொண்டு போய் சுடுகாட்டுல போட்டோம், அப்போ DFO வாக இருந்தவரு நல்ல மனுசன் குப்பையை அழிக்க வழி இல்ல, அப்படியே குறைந்த மாசுபாடு உருவாக்கி அழிக்கிறதுன்னா பள்ளம் தோண்டி, அதுல கொட்டி எரிக்கிறது தான், ஆனா அதுலாம் தீர்வு இல்லைன்னு சொல்லி, காட்டுக்குள்ள போகலாம் அனுமதி கடிதம் கொடுத்தாரு.

நாங்களும், குளம், மலை சுற்றும் பாதை, மலைக்கு மேல இருக்க குப்பைகளை பொறுக்கினோம், ஊருக்குள்ள ஆஹா ஓஹோன்னு பேரு, பத்திரிக்கையில கட்டுரைன்னு அமோகமா போச்சி.

ஒருநாள் நண்பர் ஒருத்தரு நீங்களும் போன மாசம் குப்பை எல்லாத்தையும் வாருனீங்க, இப்போ அத விட அதிகமா குப்பை இருக்கு, அது மட்டுமில்லாம, வீட்டை சுத்தம் செஞ்சி ரோட்டுல கொட்டிட்டா வீடு சுத்தம், தெருவுல இருக்க குப்பையை கொண்டு போய் சுடுகாட்டுல கொட்டினா தெரு சுத்தம், சுடுகாட்டுல இருக்க குப்பையை, கொண்டு கடல்ல கொட்டினா சுடுகாடு சுத்தம்..

ஆனா நீங்க எங்க குப்பையை கொண்டு கொட்டினாலும் அது பூமிக்குள்ள தான் இருக்கும்னு சொன்னாரு, ரெண்டு கன்னத்துலையும் செருப்பு கொண்டு அடிச்ச போல இருந்துச்சி, அதுக்கு முன்னயே இந்த சிந்தனையெல்லாம் இருந்துச்சி ஆனா மக்கள் மீண்டும் மீண்டும் குப்பைய கொட்டிகிட்டே தான் இருப்பாங்கன்னு களத்துக்கு போன பிறகு தான் தெரிஞ்சது.

தூத்துக்குடி மாதிரி பல துறைமுகத்துல குப்பைய கொட்டவே பல நாட்டுல இருந்து கப்பல் வந்து நிக்குறதுலாம் படிக்க துவங்கினேன், அப்புறம் ewaste, medical waste, எப்படி நீக்கமற நிறைந்து இருக்குன்னு படிச்சேன், வளர்ந்த நாடுகளில் இருந்து தீவுகளுக்கு எப்படி என்.ஜி.ஓக்கள் மூலமா துணிகளை, செருப்புகளை கொண்டு போய் கொட்டிட்டு வராங்கன்னு True cost ஆவணப்படத்துல பாத்தேன்.

குப்பை பொறுக்குறத விட்டுட்டேன், அப்படி தான் இந்த குளங்களை தூர் வாருவது கூட, நாம செஞ்சிகிட்டே இருப்போம் மக்கள் குப்பைய கொட்டிகிட்டே இருப்பாங்க, இதுக்கு கடுமையான தண்டனை விதிக்க கூடிய சூழலில் நாடும் இல்ல மக்களும் இல்ல, குப்பை உருவாக்குறதே குறையனும் இது ஒரு பக்கம் சிந்தனை.

எல்லாத்துக்கும் மேல முக்கியமா அரசியல் புரிதல் தேவையா இருக்கு, கோடி கோடியா ஏரி, குளம் என நீர் நிலைகளை பராமரிக்க, தூர் வார, குப்பை மேலாண்மைக்கு பணம் ஒதுக்குறாங்க அதுலாம் எங்க போகுது, அதுக்குன்னு ஒரு தனி அமைச்சகமும் துறையும் இருக்கு, ஏன் நம்ம சமூக சேவை ஈகோவ காட்டிக்க ஆரவாரம் பண்ணிகிட்டு இருக்கோம்னு அரசியல் ரீதியான கேள்விகளும் மனசுக்குள்ள வந்துகிட்டே இருக்கு.

நமக்கு தான் இதுலாம் புரியாம இருக்குன்னா மெத்த படிச்ச கலெக்டருக்கும் கூட புரியாம, முதல் குப்பையை நான் வாரினேன்னு போஸ் குடுக்குறாங்க, அவங்க ஒரு கையெழுத்து எல்லா குப்பையும் நியாயமா பிரிச்சி அவைகளை ஒழுங்கு படுத்த முடியும், வருசக் கணக்கா பல மனிதர்களின் உழைப்பும் பணமும் வீணாகாம இருக்கும், அவரு ஒரு கையெழுத்து போட்டா ஒரே வாரத்துல எல்லா குளங்களும் புனரமைக்கப் படும், மீண்டு அதை ஆக்கிரமிக்க முடியாத படியும் செய்ய முடியும், மாவட்டத்துக்கே முதன்மை அதிகாரியா இருந்தாலும் அவருக்கும் விளம்பரம் தான் முதன்மையா இருக்குது, அரசியல் ரீதியான முடிவு எடுக்க மட்டும் கசக்குது.

நம்ம சமூக சேவை அரசாங்க சக்கரம் மேலும் நல்லா சுழல உதவியா இருக்கனும், ஆனா நம்ம சுய தம்பட்டம் அரசாங்க சக்கரத்தை சதுரமா மாத்த தான் உதவியா இருக்கு, அவங்க கொள்ளையடிக்க நாமே காரணமா இருக்கோம்.

சூழல் குறித்தும் அரசியல் குறித்தும் புரிதலும் ஒன்னு தான் தீர்வு.

#பாஸ்கி

 

// எல்லா குப்பையும் நியாயமா பிரிச்சி அவைகளை ஒழுங்கு படுத்த முடியும், வருசக் கணக்கா பல மனிதர்களின் உழைப்பும் பணமும் வீணாகாம இருக்கும் //

என் அளவுக்கு இதைத்தான் செய்கிறேன். ஒரு யோக்கியன் உருவாகமல் போனாலும் அயோக்கியர்களின் எண்ணிக்கையில் ஒன்றாவது குறையும் அல்லவா ?

நமது பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் மூன்று நிற குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளைத் தரம்பிரிக்க கற்றுக்கொடுத்தால் தான் குப்பைகளை வீசியெறியும் சமூகத்தில் மாற்றம் ஏற்ப்படுத்த இயலும். அதுவும் எழுத்துக்கூட்டி படிக்கும் முன்னரே இது கற்றுக்கொடுக்கப்படணும். நாம் திருந்தாத வரை நாடு திருந்தாது. ஏனெனில் நாட்டில் வாழ்வதே நாம் தானே ? ஆனால் இந்த விடயத்தில் இதுவரை நாம் ‘தும்பை விட்டு வாலைத் தான் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்’.

அனுபவரீதியாக பார்த்த வகையில் வீடுகளில் உருவாகும் குப்பைகளில் 80% மானவைகள் மக்கி எருவாக உருமாறக்கூடியது தான். அவற்றை நம்மிடத்திலேயே எருவாக உருமாற்றம் செய்து விட்டால் பெரும்பங்கு பிரச்சினை தீர்ந்து விடும். ஆனால் இதிலும் கம்பெனிகள் நுழைந்து மக்குவதற்கான நுண்ணுயிரிகளை மாத, மாதம் விற்று தள்ள ஆரம்பித்து விட்டன. ஆகையால் தான் மாத செலவில்லாத முறையினை உருவாக்கினேன். இதை பல்க் வேஸ்ட் உருவாக்குபவர்களும் பயன்படுத்த இயலும்.

மக்காத குப்பைகளை பல மாதங்கள் வரை பாலீதின் சாக்கில் சேமித்து வைக்கலாம். ஏனெனில் துர்நாற்றம் வரப்போவதில்லை. சேமித்தவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம். எல்லாம் ஆற்றல் மாற விதி தான்.

இது தான் அந்த எளிய நடைமுறை.

 

இதில் உள்ள இவ்வளவு எருவும் 2 மாதம் முன்னர் வரை எங்களின் வீட்டில் உருவான மக்கும் குப்பை என்றால் நீங்கள் நம்புவீர்களா ?…

Posted by Muhammad Ismail H on Saturday, April 20, 2019