FEATUREDHealthLatest

கொரோனா மருத்துவர்கள்

Spread the love

அனைத்து கொரோனா மருத்துவர்களுக்கும் (மரு.விக்ரம்குமார்.,MD(S)):

அதென்ன கொரோனா மருத்துவர்கள் என்கிறீர்களா… முழுமையாக படித்தால் புரியும்!… ’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்…’ எனும் பழமொழியை முன்வைத்து, நான் பணிபுரியும் ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் செயல்பாடுகளின் விளைவாக இப்பதிவை இடுகிறேன்…

இங்கு ஒரு சோறு அல்ல பல சோறுகள் அயராமல் பாடுபடுகின்றன, பொதுநலத்துக்காக!… மெடிக்கல் எதிக்ஸ் படி, சில புகைப்படங்களை வெளியிட முடியாது… ஆனால் அதைப் பார்த்தவன் என்ற ரீதியில் வார்த்தைகளால் சூழலை வடிக்கிறேன்.

சமீபத்தில் வெளிநாடு சென்று வந்த ஒரு பயணியை அவரது வீட்டில் சென்று குறிகுணங்களை விசாரிக்கிறார் ஒரு பெண் மருத்துவர்… பயணியை சுற்றி நிறைய குடும்ப உறுப்பினர்களும் சுற்றம் சூழந்திருக்கிறார்கள்… அவர்களுக்கும் தொற்று இருக்குமா என்று தெரியாது! முகக்கவசம் மற்றுமே அம்மருத்துவருக்கும் கொரோனாவுக்குமான இடைவெளி! ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை அவர்… ‘தொற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்… பரவலைத் தடுக்க வேண்டும்…’ என்பது மட்டுமே அவரது எண்ணமாக இருந்தது.

தங்கள் குழந்தைகளை வீட்டில் ஒப்படைத்துவிட்டு பிற குடும்பங்களின் மீது அளவிட முடியாத அன்பையும் நேசத்தையும் காட்ட புறப்படுகிறார்கள் பெண் மருத்துவர்கள்!…

கடந்த சில நாட்களாக மருத்துவர்களின் மனைவியோ/கணவனோ… தாய்/தந்தையோ… ‘பாத்துப்பா… பாத்துமா… ஜாக்கிரதையா இருந்துக்கோங்க… பாதுகாப்பு கவசங்களை போட்டுக்கோங்க…’ எனும் அறிவுரையை வழங்காமல் இருந்திருக்க மாட்டார்கள்!… அறிவுரையை மனதில் வைத்துக் கொண்டு, பெற்றோர்களின் முகத்தை மூளையின் கார்டெக்ஸில் (Cortex) பதித்துக்கொண்டு, நோயாளர் நலம் காக்க உற்சாகத்துடன் மருத்துவமனைக்கு புறப்பட்டு வருகிறார்கள் அவர்கள்!… விலைமதிப்பில்லா உயிர் மேல் பயம் இல்லை மருத்துவர்களுக்கு… ஆனால் பொதுமக்களின் உயிர் மேல் மட்டுமே பயம்!… கூடுதல் அக்கறை!

ஒவ்வொரு மருத்துவருடைய பெற்றோரின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?… தினமும் போர்புரிய செல்லும் ராணுவ வீரரின் தாய் தந்தையைப் போல பெருமிதம் உள்ளுக்குள்! தாய்மைக்கே உரிய அச்சமும் பதற்றமும் பெற்றோர்க்ளுக்கு இருக்கத்தான் செய்கிறது.. மருத்துவர்கள் கொரோனாவை எதிர்க்கும் ராணுவ வீரர்களாக மாறிப்போன சூழலில் அவர்களை பெருமைபடுத்த ஒரே வழி பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்குவது தான்!…

வீடுவீடாக சென்று நோய்நிலைப் பற்றியும்… காரணங்கள் பற்றியும்… பயணம் குறித்த விவரங்களியும் கேட்டறிகிறார்கள் மருத்துவர்கள்!… நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் முகக்கவசம் மட்டுமே அவர்களுக்கான ஆயுதம்!… இரவு பகல் என்று இல்லாமல், எந்நேரத்திலும் நோயாளி அல்லது பயண வரலாறுடன் ஒருவர் மருத்துவமனைக்கு வந்தால் அவர் சென்ற பகுதிகளை கூர்ந்து நோக்க வேண்டும். மருத்துவம் பார்ப்பதோடு உதடுகள் வலிக்க கிராமம் கிராமமாக பரப்புரை வழங்குகிறார்கள்… ஊரடங்கு உத்தரவெல்லாம் மருத்துவர்களுக்கு இல்லை!… ‘கொரோனா அடங்கு’ எனும் கோவம் மட்டுமே அவர்களுக்குள்!…

இது ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் நிலைமை… நாடு முழுவதும் ஒவ்வொரு மருத்துவரின் சூழலும் இப்படித்தான்!… போற்றுவோம்!…
-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)
அரசு சித்த மருத்துவர், ஆண்டியப்பனூர்