Nature

குட்டைக் கிளி Indian Hanging Parrot

Spread the love

குட்டைக் கிளி.  Indian Hanging Parrot. Vernal Hanging parrot

by Krishna Moorthy Muthirulan

உலக அளவில் பலவிதமான குட்டைக் கிளிகள் உள்ளன. அவற்றுள் இந்தியக் குட்டைக் கிளி, இலங்கைக் குட்டைக் கிளி , ஆஸ்திரேலியக் குட்டைக்கிளி போன்றவை உருவ ஒற்றுமை கொண்டவை.

உடலில் அமைந்த நிறங்களுள் அவற்றிற்கிடையே ஏராளமான வேறுபாடுகள் உண்டு. குட்டைக் கிளி என்பதை விடக் குட்டைவால் கிளி என்பதே இதற்குப் பொருத்தமான பெயராக அமையும் என்று தோன்றுகிறது.

கிளிகளின் அமைப்பைக் கொண்ட இவற்றிற்கு கிளிகளுக்கு உரித்தான குட்டையான வால் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணும் பெண்ணும் வடிவத்தில் ஒரே போலத் தோன்றினும் சிற்சில நிற வேறுபாடுகள் உண்டு.

ஆண்கிளியின் அலகு கடுஞ் சிவப்பு நிறத்திலும் பெண் கிளியின் அலகு வெளிர் மஞ்சள் நிறத்திலும் அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆண் கிளியின் தொன்டைப் பகுதியில் அமைந்திருக்கும் நீல வண்ணம் பெண் கிளிகளுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் கிளிக்கு முதுகுப் புறத்தில் அமைந்துள்ள கடுஞ்சிவப்பு நிறம் பெண் பறவைகளுக்கு இல்லை (Red rump) இவற்றை இறக்கைகள் விரியும் போது மட்டுமே காண இயலும்.

பொதுவாக தனித்தும் இணைந்தும் சிறு குழுக்களாகவும் இவற்றைக் காணலாம். இரை தேடும் போது கிளைகளில் தலை கீழாகத் தொங்கும் பழக்கம் இவற்றிற்கு உண்டு.

மற்ற கிளிகளைப் போலவே அலகுகளைப் பயன்படுத்தி மரத்தின் கிளைகளில் ஏறும் பழக்கம் இவற்றிற்கும் உண்டு.

இந்தியாவைப் பொறுத்த வரையில் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை சார்ந்த காடுகள் காடுகளின் விளிம்புகளில் இவற்றை அதிகமாகக் காணலாம்.

பழங்கள், பூக்கள், பூக்களின் தேன் போன்றவை இவற்றின் முக்கிய உணவாகும். இரை தேடும் போது தலை தீழாகத் தொங்கும் பழக்கம் இவற்றிற்கு உண்டு. தலை கீழாகத் தொங்கியபடியே உறங்கும் பழக்கமும் உள்ளதாகச் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

மலை சார்ந்த காடுகளில் உள்ள மரத்தில் அமைந்த பொந்துகளில் கூடமைத்து மூன்று வரையிலான முட்டைகள் இடுகின்றன. முட்டைகள் பச்சைக்கிளியின் முட்டைகளைப் போலவே வெண்மை நிறம் கொண்டவை.


பெண் கிளிகள் அடைகாக்கும் போது ஆண் கிளிகள் கூட்டின் அருகில் காவல் இருக்கும். ஆள் அரவம் ஏற்படும் போது ஆண் கிளி வித்தியாசமான ஒலி ஏற்படுத்தும். பெண் கிளி ஆபத்தைப் புரிந்து கொண்டு கூடுகளில் இருந்து வெளியேறுவதைக் காணலாம்.

முட்டை விரிய 20 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும். விரிந்த குஞ்சுகள் 33 நாட்கள் சென்ற நிலையில் கூட்டை விட்டு வெளியேறி விடுவதாக சில உற்று நோக்கல்கள் உண்டு.

by – Krishna Moorthy Muthirulan

2 thoughts on “குட்டைக் கிளி Indian Hanging Parrot

Leave a Reply