FEATUREDNature

உருவ மறைப்பு பண்பு ஒரு ஆச்சரியம் Camouflage

Spread the love

உருவ மறைப்பு பண்பு ஒரு ஆச்சரியம் !…
(Camouflage)

பெரும்பாலான நேரங்களில், பல உயிரினங்கள் நமக்கு மிக அருகிலேயே இருக்கும் ஆனால் நமது கண்களுக்கு சற்றும் தெரியாது…

சில பூச்சிகளும் புழுக்களும் அது வாழும் சூழலிற்கும் பின்புலத்திற்கும் தகுந்தபடி பச்சையான குச்சி போன்றோ அல்லது இலைகள் மாதிரியோ காணலாம். இன்னும் சில காய்ந்த இலை, சருகு, குச்சிமாதிரி நிறத்திலும் அதற்கேற்றவாறு உருவ அமைப்பிலும், பின்புலத்தை ஒட்டிய நிற அமைப்பிலும் சில சமயம் வடிவ அமைப்பிலும் மிகச் சரியாக பொருந்தி இருக்கும். சாதாணமாகப் பார்த்தால் நமது கண்களுக்கு தெரியவே தெரியாது சற்று உற்றுப்பார்த்து அவற்றின் அசைவின் மூலமே அவைகள் அங்கிருப்பதை தெரிந்து கொள்ள முடியும்…..

சீமைக்கருவேலஞ் செடிகளில் உள்ள முற்களைப்போலவே நிறம் உருவ அமைப்பு கொண்ட பூச்சியினைப் பார்த்து பெரிதும் வியந்திருக்கிறேன்…

அதேபோல பெரிய விலங்குகளிலும் இந்த உருமறைத்தோற்ற அமைப்பை பெரும்பாலானவை கொண்டிருக்கின்றன. பனிக்கரடிகள் மற்றும் முயல்களை பனிப்பகுதியின் நிறத்தையொட்டி இருப்பதையும் எளிதில் பார்க்கலாம், சிறுத்தைகளையும் புலிகளையும் கூட காட்டிற்குள்ளாக எளிதாக தெரியாது. அவை நமக்கு அருகில் இருந்தால் கூட சட்டென கண்களால் காண முடியாதபடி நிறத்தோற்றம் கொண்டவை. பறவைகளில் கூட ஆந்தை, கழுகினங்கள், கிளி, குக்குறுவான் எனப்பல பறவையினங்கள் வாழுகிற பின்புலச் சூழல் சார்ந்த நிறங்களைப் பெற்றுள்ளன…

தனித்து வாழும் உயிரினங்களுக்கும் குழுவாக வாழும் உயிரினங்களுக்கும் அவற்றின் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு கூட உருமறைப்பு பண்பு அமையும். கொன்றுண்ணிகளிடத்தில் இருந்து தப்பிக்க குழுவாக வாழும் உயினங்களின் ஒட்டுமொத்த குழுவோடு மறையும்படியோ அல்லது குழப்பும்படியான தகவமைப்பையோ பெற்றிருக்கும் உதாரணமாக,
வரிக்குதிரைகளின் உடலில் உள்ள கறுப்பும் வெள்ளையுமான வரிகள், அதனை கூட்டமாக கூடி நிற்கும் போதோ அல்லது தனியாக நிற்கும் போதோ கொன்றுண்ணி விலங்குகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. வரிக் குதிரைகள் அருகருகே கூட்டமக நின்று மேயும்போது உரு மறைப்பு தன்மையால் பாதுகாப்பு அதிகமாகிறது. அதன் வரிகள் ஒரு பொய்த் தோற்றத்தை தாக்கவரும் எதிரிகளுக்கு கொடுக்கிறது. பார்க்கும் போது வரிகளானது, ஒன்றோடு ஒன்று பிணையும் தோற்றத்தைக் கொடுப்பதால் எதிரியின் மனதில் குழப்பத்தை உருவாக்கி, தாக்கப் போகிற இரையை எதுவென குறிவைக்க முடியாதபடி குதிரைகளை கூட்டத்திலிருந்து தனித்தனியாக பிரித்து அடையாளம் காணமுடியாதவாறு செய்கிறது. குதிரைகள் எல்லாம் அடிக்கடி திசை மாறி ஓடுவதினால், வரிகளின் அசைவு மேலும் மேலும் எதிரிக்கு குழப்பத்தையே உருவாக்குகிறது. அதனால் எதிரி ஒரு தனி வரிக்குதிரையை தேர்ந்தெடுத்து தாக்கிக் கொல்வது கொஞ்சம் கடினமாகிறது…

உயினங்களிடமிருக்கும் இந்தப் பண்பானது பலஆயிரம் ஆண்டுகளாக நடந்த மாற்றத்தினால் அவைகள் தன் இனத்தை எதிரிகளிடமிருந்து காத்துக்கொண்டு இந்த பூமியில் நிலைக்கவும், தமது உணவிற்காக சூழ்நிலையோடு மறைந்து ஒளிந்து நின்று வேட்டையாடி வாழவும் இயற்கை அவற்றிற்கு அளித்திருக்கும் பெரிய பண்பு எனலாம்…

அதாவது, “எளிதில் எதிரியின் கண்களில் படாமல் தப்பிக்கவும், தன்னுடைய இரையை எளிதில் பிடிக்கவும்” இந்தத் தகவமைப்பு உதவுகிறது…

எல்லா உயிர்களுக்குள்ளும் மிகுந்த வாழ்க்கைப் போட்டி ஒவ்வொரு நொடியிலும் உள்ளது. பிற உயிரினங்களுடன் இரை மற்றும் வாழ்விடப் போட்டியும், தனது இனத்துக்குள்ளேயும் கூட உணவிற்காகவும் இணைசேர்வதற்கும் போட்டிதான்….

உயிரினங்களின் வாழ்க்கை பயணத்தில் இவ்வாறு பல்வேறு விதமான போட்டிகளுடன், இயற்கைச் சூழலும் கூட சில சமயம் பெரும் சவாலாக உள்ளது. வறட்சி அல்லது பசுமை. பனிநிறைந்த சூழல் அல்லது பாலை நிலம் என, வேறுபாடுடைய இடமாறுதல்களோடு காலநிலை மாறுதல்களும், பலவிதமான இயக்கங்களின் தாக்கங்களையும் சமாளிக்கக்கூடிய வகையில் தன்னினம் செழித்து நிலைத்து பரவ, தன்னிடமிருக்கும் நன்மைபயக்கும் சிறப்பான உயிர் பண்புகளை தமது அடுத்த தலைமுறைக்கு ஒவ்வொரு உயிரினமும் கடத்துவதற்கு காலகாலமாக தொடர்ந்து முயற்ச்சித்துக் கொண்டே இருக்கும். இந்தப் போட்டியினை சமாளித்து கடக்காத உயிரினங்கள்தான் பூண்டோடு அழிந்துபோகும்…

உதாரணமாக மற்ற பூச்சிகளைவிட மேம்பாடுடைய உருமறைப்பு (camouflage) கொண்ட ஒரு பூச்சி தன்னை உணவாகக் கொள்ளும் பறவையின் கண்களுக்கு அகப்படாததால், மற்ற பூச்சிகளைவிட அதிகமாக வாழ்ந்து, தனது சந்ததிகளுக்குகளுக்கு தனது மேம்பட்ட உருமறைப்பு எனும் உயிரியல் பண்பிணைக் கொடுக்கும்….

அதேமாதிரி பறவைகளிலும், மேம்பட்ட உருமறைப்பு பெற்ற பூச்சிகளைக் கண்டுகொள்ளுமளவு மேம்பட்ட கண்பார்வை எனும் உயிரியல் பண்புபெற்ற பறவை, மற்ற பறவைகளை விட அதிக இரையைப் பெறுவதால் அந்த இனம் மற்றதைக்காட்டிலும் அனைத்துவகையிலும் மேம்படும்…

இதுவெல்லாம் எப்படிச்சாத்தியம் என்பது தீராத ஆச்சரியம் அவற்றின் உருவமும் நிறமும் வாழ்கிற சூழலையும் பார்த்தால் தீரவே தீராது…

இயற்கையை என்னவென்று வியப்பது. ஆப்பிரிக்க காட்டில் மனிதர்களால் தந்தவேட்டை மிகுந்திருப்பதால் யானைகளுக்கு தந்தமற்ற பண்பு மேலோங்கிவருவதாகக் கூறி மேலும் வியப்படைய வைக்கிறார்கள்….

போட்டி மற்றும் இயற்கைச்சூழல் மாறுபாடு என்பவை தொடர்ந்து இயங்கி உயிரினங்களின் உயிரியல் மற்றும் நடத்தைப் பண்புகளை மாற்றிக்கொண்டே இருக்கும்…

1800ம் ஆண்டு அமெரிக்க ஓவியரான அபொட் தாயர் என்பவர்தான் முதன்முதலாக, “இயற்கையாக மிருகங்களின் உடம்பில் உள்ள நிறங்கள் உருமறைப்புக்கு உதவுகிறது” என்பதைச் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். அதன் பிறகு இந்த எளிதில் புலப்படாத சூழலோடு மறைத்துக் கொள்ளும் யுக்தி இராணுவத்தினருக்கும் பெரிதும் உதவியாக இன்றுவரை பயனளிக்கிறது…

இந்தப் படங்களில் ஒளிந்திருப்பது யார் யார் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!. இவைகளின் இந்த தோற்ற மறைப்பு பண்பே இந்தபூமியில் இவற்றை மிச்சமாக வைத்திருக்கிறது என்றுகூட சொல்லலாம்…

பேரன்புடன்,
Ramamurthi Ram

#மீள்