FEATUREDHealthSocialmediaயாவர்க்குமாம் வேதியியல்

இரசாயனத்துடனே வாழ்கிறது உடம்பு

Spread the love

இயற்கை உணவிற்கும், இயற்கையோடு ஒன்றி வாழ்தலுக்கும், பாரம்பரிய மருத்துவ முறைக்கும் நான் என்றும் எதிரானவன் கிடையாது. மாறாக அதன் காதலன் நான். ஆனாலும் ஒரு தகவலாக இதைச் சொல்கிறேன்.

இப்போதெல்லாம் எங்கும், எதிலும் இரசாயனக் கலப்படங்கள் நடைபெறுவதால், நிரந்தர நோயாளி இனமாக, மனித இனம் மாறிக்கொண்டு வருகிறது. இரசாயனங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவது மாபெரும் உண்மை. இதன் அடிப்படையில் நம்மில் பலர் இயற்கையோடு ஒன்றி வாழ விரும்புகிறார்கள். இயற்கை உணவு. இரசாயனம் கலக்காத மருந்து என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது நல்ல விசயமே! ஆனால் இரசாயனம் தவிர்ப்போம் என்று ஒரு பொதுமையாக இதைச் சொல்வது சரியானததுதானா? இந்தக் கேள்வியை நான் ஏன் கேட்கிறேன் என்பதை, இந்தப் பதிவைப் படிக்கும்போது புரிந்து கொள்வீர்கள்.

இரசாயனம் எதையும் எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று நம்மில் பலர் முடிவெடுத்திருக்கும் நிலையில், நம் உடல் எத்தனை இரசாயனங்களைத் தயாரித்துக் கொள்கிறது என்பதைப் பாருங்கள். அதுவும் மிக ஆபத்தான இரசாயனங்களையும் உடல் தனக்குள்ளே தயாரித்துக் கொள்கிறது என்பது ஆச்சரியம். உடலினால் எப்படி இந்த இரசாயனங்களைத் தயாரிக்க முடிகிறது என்று நினைத்தாலே தலை கிறுகிறுக்கும். ஒரு தேர்ந்த தொழிற்சாலையில்கூட இந்த இரசாயனங்களை இலகுவில் உருவாக்கிவிட முடியாது. அவற்றில் சிலவற்றைச் சொல்கிறேன்.

ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCl) – உணவுச் சமிபாட்டுக்கென உடலே தயாரித்து இரப்பைக்குள் அனுப்பும் மிக ஆபத்தான ஒரு அமிலம்.

எண்டோர்பின் (Endorphin) – உடல்வலியைக் குறைப்பதற்குச் சுரக்கப்படுவது இது. குறிப்பாகக் காயமடயும்போது.

அட்ரெனலின் (Adrenalin) – பயம், கோபம், அதிர்ச்சி ஆகிய உணர்வுகளின்போது, இதயத்துடிப்பை அதிகரித்து, தேவைக்கு அதிகப்படியான சக்தியை குறுகிய நேரத்தில் கொடுப்பது.

கிளைகோஜன் (Glycojen) – குளுக்கோஸின் ஒரு வகை. தற்காலிகச் சேமிப்பாக வைத்திருப்பது.

ஹைட்ரோகோர்ட்டிசோன் (Hydrocortisone) – வலி, வீக்கம் போன்றவற்றை விரைந்து நீக்கும் அற்புத நிவாரணி.

இன்சுலின் (Insulin) – உங்களில் பலர் அறிந்து வைத்திருக்கும் ஒன்று. இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் உதவியாளன்.

இரிசின் (Irisin) – உடல் ஆரோக்கியத்தை தக்க வைக்கச் சுரப்பது.

மெலடோனின் (Melatonin) – மிகமிக முக்கியமானது. நம் நித்திரையையும், விழிப்பையும் ஒழுங்கமைக்கும் அற்புதம்.

ஒஸ்ட்ரோஜென் (Oestrogen) – பெண்களுக்கெனச் சுரந்து, அவர்களின் பாலினத் தேவைகளுக்கும், குழந்தையைச் சுமப்பதற் உதவியாளினி.

புரொஜெஸ்டெரோன் (Progesterone) – இதுவும் பெண்களுக்கான பிரத்தியேகச் சுரப்பி.

சேபம் (Sebum) – தோல், முடி போன்றவை காய்ந்து விடாமல் பாதுகாக்கச் சுரக்கும் ஒருவித எண்ணெய் வடிவச் சுரப்பு.

செரோடோனின் (Serotonin) – மனிதனின் மனநிலையை சமநிலைப்படுத்த நரம்புகளினூடாகத் தகவல்களை அனுப்பும் சுரப்பு.

டெஸ்டொஸ்டெரோன் (Testosterone) – ஆண்களுக்கான சுரப்பு. ஆண்தன்மை, உடல்வாகு மற்றும் வலிமையைப் பேண உதவுவது.

தைரொக்ஸின் (Thyroxine) – உடல் வளர்ச்சிக்குப் பலவிதங்களில் உதவும் ஒன்று. தொண்டையில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி.

நான் சொல்லியிருப்பது கொஞ்சம்தான். இதைவிட இன்னும் பல இருக்கின்றன. இந்த இரசாயனங்கள் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், உடலின் ஆரோக்கிய இயக்கத்திற்கு தேவைப்படும் அளவிற்கு சரியாக உருவாக்கப்படுகின்றன.

ஆதலால், இரசாயனத்தை நாங்கள் தவிர்த்தாலும், இரசாயனத்தை உடல் தவிர்ப்பதில்லை. இரசாயனத்தை உற்பத்தி செய்து, இரசாயனத்துடனே வாழ்கிறது உடம்பு.

rajsiva