FEATUREDNature

அசோக மரம் Saraca indica

Spread the love

Saraca indica

அசோகு

தலக்கோடு, கேரளா

9.5.2019

அசோக மரம் என்றால் பொதுவாக நெட்டிலிங்க மரத்தையே அடையாளப்படுத்துவார்கள். சங்க இலக்கியத்தில் பிண்டி எனவும் செயலை எனவும் பெயர் பெற்ற அசோக மரத்தை பாடாத புலவர்கள் இல்லை.

அகநானூறு,

ஐங்குறுநூறு,

நற்றிணை,

பரிபாடல்,

குறிஞ்சிப்பாட்டு,

குறுந்தொகை,

சிலப்பதிகாரம்,

திருமுருகாற்றுப்படை,

மதுரைக்காஞ்சி,

என எல்லா சங்க இலக்கியப் பாடல்களும் அசோக மரத்தில் சிறப்புகளை பாடுகிறது.

நெட்டிலிங்கம் போல நெடுநெடு என வளராமல் ஊஞ்சல் கட்டி ஆடும் அளவிற்கு கிளை பரப்பி வளர்வதை

”ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பென..” – அகநானூற்றுப் பாடல் 68 விளக்குகிறது.

அசோக மரத்தில் கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடிய மீனாட்சியம்மை, அடிமரத்தை உதைத்து ஆடியதாகவும், பெண்ணின் கால் பட்டதால் கிளைகள் எங்கும் பூத்துக் குலுங்கியதாகவும் என்று அறப்பளீசுர சதகத்தில் குமரகுருபரர் பாடுகிறார்.

“ஊசலை உதைத்தாடலும்

ஒண்டளிர் அடிச்சுவடுறப்பெறும் அசோகு நறவு

ஒழுகுமலர் பூத்துதிர்வது”

மேகதூதத்திலும் “காதலி எட்டி உதைக்காமல் அசோகு பூக்காது, எச்சில் உமிழாமல் மகிழம் மலராது” என்று தோழன் பாடுகிறன்.

”எரிநிற நீள் பிண்டி இணர்” – திணை. நூ -63

”செந்தீ ஒண்பூம் பிண்டி” – மது – 701 என செந்நிறமாக பூக்ககூடியதாக பாடப்பட்டது.

பூத்துக் குலுங்கும் பிண்டி மலர்களில் தேன் குடித்து போதை ஏறிய வண்டுகள் செந்நிறப் பூக்களைக் கண்டு மரமே பற்றி எரிவதாக நினைத்து அஞ்சுவதாக திருமங்கையாழ்வார் பாடுகிறார்

”தாதுமலிய பிண்டிவிண்டு அலர்கிண்ற

தழல்புறை எழிநோக்கிப்

பேதை வண்டுகள் எரிவன வெருவரும்” –

ஒய்யாரமாக நடந்து வரும் பெண் ஒருத்தியின் காதில் அணிந்திருந்த பிண்டி மலர்க் கொத்தானது, பொன்னைச் சுட்டு உருக்கி திறமையான வேலைப்பாட்டுடன் செய்யப்பட்ட காதணி போல் இருந்ததாக நல்வழுதியார் பரிபாடலில் பாடுகிறார்.

“சுடுநீர் வினைகுழையின் ஞாலச் சிவந்த

கடிமலர்ப் பிண்டிதன் காதிற் செரீஇ” –

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இதனை காதில் சூடியுள்ளனர்.

“ஒண்பூம் பிண்டி ஒருகாது செரீஇ”

இந்த மலருக்கு புத்தியை மயக்கி காமத்தைத் தூண்டும் சக்தி உள்ளதாக கொள்ளப் பட்டது. மன்மதனின் மலர்க்கணையில் உள்ள ஐந்து மலர்களில் அசோகம் ஒன்று. மற்ற நான்கு மலர்களாவன தாமரை, மாம்பூ, முல்லை, நீலோத்பலம்.

சமணமதத்தில் அருகதேவனுக்கு உகந்த மலராக கருதப் படுகிறது.

அசோக மரத்தின் மலர் மட்டும் கொண்டாடப் படவில்லை, அதன் நீல நிற தளிரும் சிறப்பாக பாடப் பட்டுள்ளது.

வைகையாற்றில் நீராடும் பெண்களில் ஒருத்தி நீலோத்பலத்தை காதில் சூடினாள், போட்டியாக அதே வர்ணத்தில் பிண்டி மரத் தளிரைச் சூடிக்கொண்டதாக நல்லுந்துவனார் பரிபாடலில் பாடியது,

“சாய்குழைப் பிண்டி தளிர்காதில் தையினாள்

பாய்குழை நீலம் பகலாகத் தையினாள்..”

”சுனையெலாம் நீலம் மலரச்

சினையெலாம் செயலை மலர”

என நீர்லிலையிலெல்லாம் நீலோத்பலம் மலர்ந்து நீலமாக காட்சி அளித்தது போல அசோகமரம் கிளையெல்லாம் நீலநிரத்தில் தளிர்த்து கட்சியளித்ததாக இளம்பெருவழுதியார் பரிபாடலில் வர்ணிக்கிறார்.

கேரள கர்நாடகத்தில் தற்போது அழகுக்காக வளர்க்கப் படும் அசோக மரம் தமிழ்நாட்டில் அரிதாகவே காணப்படுகிறது. ஆதலாலேயே நெட்டிலிங்கத்தை அசோகமரம் என கலைக்களன்சியம் வரை பதியவைத்துவிட்டனர்.

Leave a Reply