LatestPoliticsTechnology

சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை

Spread the love

உங்களது குரல் வளையை நெரித்துகொண்டு இருக்கிறது அரசாங்கம்.

இருசக்கர வாகனத்தின் பதிவு கட்டணம் ரூபாய் 50 இல் இருந்து 2000 ஆகிறது. வேன், பள்ளிப் பேருந்து, சரக்கு லாரி முதலியவற்றின் கட்டணம் ரூபாய் 1500 லிருந்து 40 ஆயிரமாக உயருகிறது. வருங்காலத்தில் பெட்ரோல் விலை குறையப்போவதில்லை. மேலும் கூடும். ஏற்கனவே பஸ் மற்றும் இரயில் கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. “நாங்கள் வந்தால் டோல்கிட்டே இருக்காது” என்று சொல்லிவிட்டு தற்போது சுங்கவரியை மேலும்அதிகமாக உயர்த்திவிட்டார்கள்.

இவை எல்லாமே நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் நுகர்பொருள் விலை ஏற்றத்தில் பிரதிபலிக்க போகிறது. அதாவது காய்கறி, பால், பழம், மற்றும் வீட்டு விலை, போக்குவரத்து எல்லாமே உயரும்.

இந்த அடாவடியான நடவடிக்கைகள் தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வாகன பயன்பாட்டை முழுக்க முடக்குவதற்கு செய்யப்படும் உத்தி என அரசாங்கம் சொல்கிறது. இப்படிச் செய்தால் நீங்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்துவீர்கள் என்று அரசு நம்புகிறது. அனேகமாக சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை நீங்களாகத்தான் இருக்க போகிறீர்கள்.

நல்ல விஷயம் தானே!. மின்சார வாகனம் புகை விடாது, சுற்றுச்சூழலை பாதிக்காது, கனரக பாகங்கள் தேவையில்லை. எளிதான பராமரிப்பு. எடை குறைவு . முக்கியமாக பெட்ரோல் மற்றும் டீசல் தேவைக்காக பிற நாடுகளை கையேந்த வேண்டியதில்லை. நிம்மதியாக மூச்சு விட லாம்.

கைதேர்ந்த வியாபாரிகள் இப்படிச் சொல்லித்தான் உங்களுக்கு கனவை விற்பார்கள். “ரிஸ்க்கை ரஸ்க்குபோல” சாப்பிடும் குஜ்ஜு பனியாக்கள் இப்படித்தான் நெட்டித்தள்ளுவார்கள். ஒன்று நன்மையில் முடியும். அல்லது நாடே நடுத்தெருவுக்கு வரும்.

மின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணம் இலவசம் என்று சொல்லுகிறார் போக்குவரத்து மந்திரி. அரசு, ஜிஎஸ்டி வரியை பதினெட்டில் இருந்து 5 ஆக குறைத்துள்ளது. வருங்காலத்தில் நீங்கள் மின்சார வாகனத்தை மட்டும்தான் வாங்க வேண்டியிருக்கும் என்பது தெளிவாகிறது. அதை சார்ஜ் செய்வதற்கு மின்சாரம் தேவை. சேர்த்து வைக்க பாட்டரி தேவை. செலவழிக்க மின்மோட்டார் தேவை.

உண்மை நிலைமை என்ன ?

மின்சார வாகனத்துக்கு முக்கியமான தேவைப்படும் பாகம் பாட்டரி எனப்படும் மின்சாரக் கொள்கலன். மின்சார வாகனத்தில் 40% பணம் இதற்குத்தான். இன்றைக்கு இந்தியாவில் பாட்டரி தயாரிக்க ஆலைகள் வந்துவிட்டதா ? தயாரிக்கும் திட்டமாவது இருக்கிறதா ? தற்போதுள்ள பேட்டரியின் ஆற்றலை பெருக்க தேவையான ஆராய்ச்சி கூடங்கள் கட்டப்பட்டுவிட்டனவா ? பாட்டரி தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் அதைத் தயாரிக்க மூலப்பொருட்கள் எல்லாம் தயாராக உள்ளதா ?

எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது. கவலை இல்லை. வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம்.

சந்தையில் மாபெரும் அதிநவீன தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்கப்படுகின்றன. 4 லட்சம் விலைகொடுத்துக்கூட அனாயாசமாக வாங்குகிறார்கள். ஆனால் இவற்றை இயக்குவதற்கு தேவையான ரிமோட் கன்ட்ரோலுக்கு மட்டும் , ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மாதமும் கற்றையான கணக்கில்லாத அளவில் ரசாயன பாட்டரி கட்டைகள் வாங்கப்படுகின்றன. இதேபோல கடிகாரம், விளையாட்டு சாமான் மற்ற இதர, மின்சாரத்தை கொண்டு இயங்கும் பொருட்கள்.

ஒவ்வொரு பாட்டரி கட்டையும் ருபாய் 20/- முதல் 60/- வரை விலையாகிறது. இவை கொஞ்ச நாள் மட்டும் தான் வேலை செய்யும். குப்பையில் தூக்கி போட வேண்டும். கிட்டத்தட்ட 80 வருஷமாக புழக்கத்தில் இருந்து வரும் பாட்டரி கட்டை தொழில்நுட்பத்தை அரசு ஏன் வளர்த்து எடுக்கவில்லை? யார் தடுத்தார்கள் ? மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தும் AAA பாட்டரிகள் முன்பு புகைப்பட கலைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதை முழுவதுமாக சந்தையிலிருந்து ஒழித்தது யார் ?

சாதாரண 20 ரூபாய் பொம்மை பாட்டரிக்கட்டையை மட்டுமே வைத்து இவ்வளவு விளையாடும் முதலாளிகள், ஆயிரக்கணக்கான ரூபாய்ப்பெறும் அத்தியாவசியமான வாகன பேட்டரியை வைத்து எவ்வளவு விளையாடுவார்கள் ?

நாட்டிலுள்ள 21 கோடி வாகனங்களுக்கு தலா 6 பாட்டரி வேண்டுமென்றாலும் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு பாட்டரி வேண்டும். அதை சார்ஜ் ஏற்ற மின்சாரம் வேண்டும். வெளிநாட்டு வாகனங்கள், சோலார் மின்சாரம், பேட்டரிகள், மின் மோட்டார்கள் என பல லட்சம்கோடி ருபாய் வெளிநாட்டுக்கு, கமிஷனுக்கு கைமாறப்போகிறது என்பதை சொல்லவேண்டியதில்லை.

அதோடுகூட இந்தியாவின் தற்சார்பு காற்றில் பறக்கும். ஏற்கனவே கோயமுத்தூர் , ராஜ்கோட் போன்ற இன்ஜின் சந்தைகள் பணமுடக்கத்தால் முடங்கிவிட்டன. இப்போதே கார் தயாரிப்பு குறைந்துவருகிறது. இலவச மிக்சி, கிரைண்டருக்கு கூட சீன மோட்டார்களை பொருத்திய சோம்பேறிகள் அல்லது ஊழல்வாதிகள் நாம்.

வெறும் சைக்கிளைக்கூட சீனாவிலிருந்து இறக்குமதிசெய்து ஸ்மார்ட் சிடி நடைபாதையை நிரப்பும் உங்களுக்கு உள்ளூரில் மின்சார கார் தயாரிக்கும் அளவு தேசபக்தி கொழுந்துவிட்டு எரிகிறதா ?

இப்போதைக்கு இந்தியாவில் டாடா மோட்டார் மட்டும்தான் ஒரேயொரு lithium-ion பாட்டரி தயாரிக்கும் ஆலையை நிறுவப்போகிறது. இதைநம்பி கனவு வியாபாரிகள், நாட்டையே புரட்டிபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். மற்றபடி மின்சார வாகனம் தயாரிக்க ஏற்கனவே சைனாவும், ஜப்பானும் களமிறங்கி வருகின்றன.

டொயோட்டா கிர்லோஸ்கருடன் கைகோர்க்கும். KSL க்ளீன்டெக் என்ற கம்பெனி சீன கம்பெனியான ஹூவாஹய் (Huaihai) உடன் கைகோர்க்கிறது. இப்படியே பல ஜோடிகள். பலன்பெறப்போவது சீனாதான்.

Daimler and BMW போன்ற உலகின் மாபெரும் கம்பெனிகள் பேட்டரியில் புதிய ஆய்வுகள் செய்துகொண்டுவருகின்றன. சிலிகான் (மணலை) உபயோகித்து Silanano என்ற பேட்டரியை தயாரிக்க முனைகின்றன. நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம். இன்றைக்கு எலக்ட்ரிக் காரின் விலை 25 லட்சம். டாட்டா தயாரிக்கும் கார் (Altroz EV) கூட 10 லட்சம். அதாவது உங்கள் பிள்ளைக்கு தங்கப்பணம் கொடுத்து தகரத்தை வாங்கப்போகிறீர்கள். விலைக்கும் பொருளுக்கும் சம்பந்தமில்லை.

இந்த விலைகள் குறையப்போவதில்லை. குறையவிடாமல் தடுக்க ஏற்கனவே லாபி (குழுக்கள்) உருவாகிவிட்டன. Society of Manufacturers of Electric Vehicles (SMEV). இத்தனைக்கும் மின்சார கார் என்பது வெறும் டப்பாதான். தற்போதைய ஸ்பீக்கர் டப்பாவைப்போல, எட்டிப்பார்த்தால் உள்ளுக்குள் மின்மோட்டாரைத்தவிர ஒன்றும் இருக்காது.

சோலார் திட்டம் என்ற அளவில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை தயாரிக்கலாம் என்று தினம் தினம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் திட்டங்கள் துவக்கி வைக்கப்படுகின்றன. ரயில்பெட்டியின் கூரைமீதுகூட பொறுத்துகிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் தேவையான சோலார் பேனல் சூரிய மின் ஒளி தகடு சீனாவிலிருந்து வாங்கப்படுகிறது. அல்லது அமெரிக்காவில் இருந்து. இந்தியாவில் சொற்ப அளவே உற்பத்தியாகிறது. இத்தனைக்கும் இங்குதான் அதற்கு தேவையான மணலும் அரியவகை உலோகங்களும் கிடைக்கின்றன. அவை கனிம கொள்ளையர்களால் கமிஷன் கொடுத்து நாடு கடத்தப்படுகின்றன.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்திலும் பெங்களூரிலும் சூரிய ஒளித் தட்டை தயாரிக்க ஆலைகள் நிறுவினார்கள். அந்த காலத்திலேயே வெட்டிய நகம் அளவுக்கு சூரிய மின் தகடுகள், கை கடிகாரத்தில், கால்குலேட்டரில், ஏன் பால் பாயிண்ட் பேனா வில் கூட பதியப்பட்டது. சிறு மின்சார கருவிகள் அப்படித்தான் இயங்கின. வெறும் லைட் வெளிச்சத்தில் தலையாட்டும்தஞ்சாவூர் பொம்மைகள் இருந்தன.

ஆனால் 40 வருடம் பின்பு, இப்போது கூட செல்போன்கள் நேரடியாக மின்சாரத்திலும் ரசாயன பேட்டரியில்தான் இயங்குகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நினைத்தால் செல்போனின் முதுகு பக்கத்தில் சிறியசோலார் பேனலை பொருத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இவற்றை செய்யவொட்டாமல் தடுப்பது யார் ?

இன்றைக்கு டன் கணக்கில் சோலார் பேனல்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து, அவை எளிதாக விற்றுப்போக உங்கள் வரிப்பணத்திலிருந்து மானியத்தையும் அளித்து, சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சாரத்தை தருகிறேன் என்று தம்பட்டம் அடிக்கும் நிலைக்கு கொண்டு விட்டவர்கள், உங்களுக்கு தேவையான மின்சார வாகனத்தையும் பாட்டரி காரையும மோட்டாரையும் உள்ளூரில் தயாரிக்க உங்களை ஊக்கப்படுத்த போகிறார்களா?

சுவாசிக்கும் ஆக்சிஜன் சிலிண்டருக்கு இம்மியும் நயா பைசா நகர்த்தாத உத்தரபிரதேச மந்திரி, 65 ஆயிரம்கோடியில் திட்டங்களை திறந்துவைத்து மின்சார வாகனத்தைப்பற்றி தேனொழுக பேசுகிறார் என்றால் எங்கோ ஆப்பு அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கொள்ளவும். உங்கள் வரிப்பணத்தில் கம்பெனிகளுக்கு மானியம் கொடுத்து விற்பார்கள். பூமியை காப்பாறுகிறேன் என்பார்கள். ஒரு லட்சம் கார் பத்துலட்சத்துக்கு விற்கப்படும்.

இனிமேல் நம்முடைய மந்திரிகள், அவர்கள் சிண்டுகள் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று இளைப்பாறிவருவதை கவனிக்கத்தவறினால் உங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகும். அதுவும் பாங்காக் சென்றுவந்தால் ஆர்டர் நிச்சயம். பெரிய இடத்து மந்திரிகள் டெஸ்லா போன்ற மாபியாக்கள் காலில் சாட்டங்கமாக விழுந்துவிடுவார்கள்.

தகவலறியும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டதால் எதையும் கேட்கமுடியாது. வாட்சப்பில், டிவிட்டரில் விற்கப்படும் கனவுகள் மட்டுமே உங்களை நம்பிக்கையுடன் வாழவைக்கும்.

தயாராக இருங்கள்.

Alwar. Narayanan

Leave a Reply