LatestNature

சலனமில்லா மீன்கொத்தி

Spread the love

அடர்ந்த கோயில் காடு அது! காட்டின் மையத்தில் கற்சிலைகள் வடிவில் வன தெய்வங்கள் ஆங்காங்கே நின்றுக் கொண்டிருந்தன. இயற்கையின் கருணை அதிகமுள்ள சிறிய மலைப் பகுதி!…

ஓசையில்லாமல் வழிந்தோடிய தெள்ளிய நீரோட்டத்தின் பாதையை மேட்டிலிருந்து நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். தூரத்திலிருந்து பார்க்கும் போது ஆரஞ்சு நிறத்திலான பறவை ஒன்று தண்ணீர் குடிப்பது போல தெரிந்தது. ’ஆரஞ்சு மின் சிட்டாக இருக்குமோ… இல்லை மலபார் தீக்காக்கை தெரியாமல் மாட்டிக்கொண்டதோ…’ என மதிற்குள் எண்ணம். ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அப்பறவையை படம் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மேட்டிலிருந்து சருக்கினேன்!

ஓடைக்கு அருகே செல்ல செல்ல, உருவம் பெரிதாக தெரியத் தொடங்கியது. பறவையாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துக்கொண்டேன். சில நொடிகளில் தெரிந்துவிட்டது அது என்னவென்று!… ஆரஞ்சு மின்சிட்டை எதிர்பார்த்து சென்ற எனக்கு கிடைத்ததோ ’மீன்கொத்தி’ (Kingfisher)!

சலனமில்லாதா மீன்கொத்தி அது!… என்றுமே உயிர்ப்பெறாத மீன்கொத்தி… பலரின் உயிரை வாங்கும் மீன்கொத்தி! நாடுபவரின் மனதை மயக்கும் மீன்கொத்தி!… தனது கண்ணாடி தேகம் உடைந்தால் பல விலங்குகளின் பாதங்களைப் பதம் பார்க்கும் வீரியமிக்க மீன்கொத்தி!…

எவ்வளவு கேவலமான பொறுப்பற்ற சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்!… ’நீ குடித்துத் தொலைந்துப் போ… அது உன் விருப்பம்…’ ஆனால் குடித்த புட்டியை, அழகிய காட்டின் நீரோடையில் வீசி அடுத்தவருக்கு பாதகம் விளைவிக்க வேண்டுமா! மிகப்பெரிய தவறு… பெரும்பாலான காடுகளில் இந்த செயல் தொடர்ந்துக்கொண்டுதானிருக்கிறது!…

பறவையைப் புகைப்படம் எடுக்க சென்ற எனக்கு கிடைத்ததோ இந்த புட்டி!… ஒரு பயனுமில்ல… உங்க ‘Kingfisher’ கம்பெனிக்கு விளம்பரமா வச்சிகோங்க இந்தப் படத்த!… ’Drinking is injurious to health’ம் புரியாது… சூழல் முக்கியத்துவமும் நமக்குத் தெரியாது!…
-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

Leave a Reply