FEATUREDLatestNature

கொல்லிமலைப் பயணக் குறிப்புகள்

Spread the love

கொல்லிமலைப் பயணக் குறிப்புகள்:

முள்ளுக்குறிச்சியிலிருந்து கொல்லிமலைக்கு செல்லும் மாற்றுப் பாதையை தேர்வு செய்திருந்தோம். 72 கொண்டை ஊசி வளைவு கொண்ட காளப்பனாயக்கன்பட்டி வழி மலைப்பாதைக்கு இது கொஞ்சமும் சளைத்ததல்ல! நெட்டுக்குத்தான ஏற்றங்கள்… சில இடங்களில் கருங்கல் கூர்மையாய் முளைத்திருக்கும் சாலை… எட்டிப்பார்த்தால் பள்ளத்தாக்கு… பெரும் பாறைகள்… என சற்று திகிலான சாலைவழி தான்!… ஏற்கனவே பலமுறை இம்மலைப் பாதையில் பயணப்பட்டிருப்பதால், நெளிவு சுளிவுகளை அறிவதில் சிக்கலில்லை!

மலையின் பாதியில் உணவருந்திக்கொண்டிருந்த போது, எதிர்ப்பகுதியில் மழையைக் துளிர்க்கும் கருமேகங்களை நேரடையாக தரிசிக்க முடிந்தது… மின்னல் கீற்றுகள் மலையை வெட்ட, இடிமுழக்கம் விண்ணைப் பிளந்தது… இடியின் பேரொலியை அவ்வளவு அருகில் கேட்டதில்லை…

மாசிலா அருவியில் தண்ணீர் மாசற்று இருந்தாலும் மிகவும் குறைவாகவே வழிந்துக்கொண்டிருந்தது. நம்மருவியில் சுத்தமாகவே தண்ணீர் இல்லாமல், கோடைக்கால நாவைப் போல வறண்டுக்கிடந்தது!… எட்டுக்கை அம்மன் கோவில்… மாசி பெரியசாமி கோவில்… அரப்பளீஸ்வரர் கோவில் என சரித்திர பழமை வாய்ந்த கோவில்கள் அங்கு ஏராளம்!…

புகழ்பெற்ற ஆகாய கங்கை அருவியின் 1192 படிக்கட்டுகளையும் விரைவாக இறங்கி விரைவாக ஏறவேண்டும் என என்னுள் சிறு பரிசோதனை வைத்துக்கொண்டேன்! அதிகம் பயணப்பட திட்டமிட்டிருப்பதால், ஸ்டெமினாவை டெஸ்ட் செய்வதற்கு ஒரு ஏற்பாடு… இருபது நிமிடங்களில் எங்கும் நிற்காமல், பறவைகளின் ஒலி கேட்டால் மட்டும் நின்றுவிட்டு விரைந்து அருவியின் அடிவாரத்தை அடைந்தேன்!… சென்ற முறை நான் சென்றிருந்த போது, அருவியின் சாரல் கிட்டத்தட்ட 200 மீட்டர் வரை தெறித்துக்கொண்டிருந்தது… ஆனால் இம்முறை அருவி உண்மையில் நீர்வீழ்ச்சியாக (அருவியின் தவறான பெயர்) மட்டுமே தென்பட்டது!… ஒவ்வொருவராக வரிசையில் சென்று ஒரு நபராக மட்டும் தண்ணீரில் நனைந்துக்கொண்டிருந்தனர்…

பேராச்சிரியமாக சீகாரப் பூங்குருவிகள் (Malabar whistling thrush) இரண்டினை அருவியின் வழித்தடப் பாறையிலிருந்த சிறு குகையில் பார்க்க முடிந்தது…

’ஓஒ…வென்று கத்தினால் எதிரொலிக்கும் சூழலை, சுற்றியும் வளைந்திருந்த மலைகள் உருவாக்கியிருந்தன. சீகாரப் பூங்குருவியின் பாடல் அம்மலைகளின் பட்டு எதிரொலித்த ’எக்கோ’ போன்ற வித்தியாசமான இசையை ரசிக்க செவித்திரைகள் தவமிருக்க வேண்டும்!…

அருவியின் வறட்சி சோகத்தில் பங்கேற்றபின், விரைந்து மேலேறினேன்!… மூச்சுமுட்ட… வியர்வை சொட்ட… இதயத் தசைகள் வேகமாய் குருதியை வெளியேற்ற… மேல்நோக்குப் படலம் தொடர்ந்தது… அப்போது நான் ரசித்த மற்றும் படம்பிடித்த வெண்கன்னக் குக்குறுவான் மற்றும் பல பறவைகளின் அனுபவம் தனிப்பதிவில்!…

மேலேறிய சோர்வு நீங்க… கொல்லிமலையின் ஸ்பெஷல் முடவன் ஆட்டுக்கால் சூப்பை உறிஞ்சிவிட்டு… ஒரு நன்னாரி சர்பத் மற்றும் மோரையும் பருகியபின், அரப்பளீஸ்வரர் கோவிலை தரிசித்து முடித்தபின் அமைதியானது மனது…

பிறகு அங்கிருக்கும் படகு இல்லம்… சீக்குப்பாறை வியூ பாயிண்ட்… பலருக்கும் தெரியாத வயர்-லெஸ் வியூ பாயிண்ட்… இன்னும் சில நுட்பமான அமைவிடங்களில் பறவைகளைத் தேடிய போது, நிறைய பட்டாம்பூச்சிக்கள்… வண்டு வகைகளும் கூடுதலாக பார்வையில் சிக்கின!… வயர்-லெஸ் வியூ பாயிண்டிலிருந்து பார்க்கும் போது திருச்சியின் அழகை தரிசிக்கலாம் என்றார் அங்கிருந்த காவல்காரர்… காவிரி அறு பெருக்குடுத்து ஓடும் போது, ஒரு மெல்லிய கோடாக காட்சி தரும் என்றார்… ஆனால் அன்று என் பார்வையில் தென்படவில்லை… அப்பகுதியில் கணிசமாய் சுற்றித் திரிந்த உழவாரன் குருவியை புகைப்படம் எடுக்க முயன்று, ஓரளவு வெற்றியும் பெற்றேன்…

கொல்லிமலை என்றாலே அமானுஷ்யம்… திகில்… என்ற கருத்து வெகுஜனங்களிடையே பரப்பிவிடப்பட்டிருக்கிறது. சித்தர்கள் வாழ்ந்த பகுதி என்பதால், அவர்களின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, போலிகளாய் திரியும் ஆசாமிகளையும் கவனத்தில் கொள்க!…

மற்றபடி சித்தர்களின் குகைகளைத் தேடி… தாவரங்களை நாடி தனியாக பயணப்பட வேண்டும்… விரைவில்!…

கொல்லிமலையை மழைக்காலத்தில் அனுபவிக்க வேண்டும்… பார்ப்போம்!…

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

Leave a Reply