FEATUREDLatestNature

கருந்தலை வெள்ளை அரிவாள் மூக்கன்

Spread the love

டிசம்பர் 4, 2019 – என் வாழ்வில் மறக்க முடியாத நாள்!

பணி நிமித்தமாக கலிங்க தேசத்தில் ஒடிசா (ஒரிசா) செல்ல நேர்ந்தது. அப்போது பணியழுத்தமின்றி இருந்த மேற்குறிப்பிட்ட நாளீல் “சிலிக்கா ஏரி”க்கு செல்லலாம் என்று திட்டமிட்டேன். ஏரியில் செலுத்தப்படும் சுற்றுலாப்பயணிகளுக்கான படகுகளில் ஏறிச்சென்று, நன்னீர் டால்ஃபின்களைக் கண்டு விடவேண்டும் என்ற திட்டத்துடனும், ஆர்வத்துடனும், ஊக்கத்துடன் அதிகாலையே புபனேசுவரிலிருந்து சிலிக்கா ஏரிக்கு கிளம்பிவிட்டேன்.

வழியில் வாகன ஓட்டுநருடன் பேசிக்கொண்டு பயணிக்கும் போது ஒரு தகவலைக் குறிப்பிட்டார், “சார், சிலிக்காவுக்கு முன்னாடியே ஒரு இடத்தில் படகோட்டம் உள்ளது. பெயர் மறந்துட்டேன். ஆனால், ஒரு வெள்ளைக்காரர் வந்திருந்த போது இங்கு சென்று நிறைய பறவைகளைப் படம் பிடித்தார் என்றார்.” “ஓ, அப்படிங்களா! சரி, விடுங்கள் வண்டியை அங்கே” என்றேன். ‘நமக்குப் பறவைகள் எங்கிருப்பின் என்ன, பறவைகல் இருந்தா மட்டும் போதும்’ என்ற எண்ணத்தோடு!

ஊரினருகில் செல்லும் போது “மங்களஜோடி” என்ற பெயரைப் படித்தவுடன் பொறி தட்டியது. பல படங்களைப் பார்த்த நினைவெல்லாம் மனக்கண்ணில் ஓட, படகுக்குழாமை அடைந்தது வண்டி.

மங்களஜோடி என்பது சிலிக்கா ஏரியின் கீழ்த்திசையிலுள்ள ஒரு சதுப்பு நிலப் பகுதி என்று அங்குள்ளோர் தெரிவித்தனர், எனக்கு ஒரு படகினையும் வழித்துணையையும் (guide) ஆற்றுப்படுத்திக்கொண்டே.

படகோட்டியும், வழிக்காட்டுபவரும் ஓரிடத்தில் படகை நிறுத்திவிட்டு, இங்கு அரிவாள் மூக்கன்கள் அடிக்கடி தண்ணீர்ப் பாம்புகளை பிடிக்கும் என்றும் நாம் காத்திருப்போம் என்றும் தெரிவித்தனர். சொல்லி 5 நிமிடங்கள் கூட ஆகவில்லை, இந்த படங்கள் எடுக்கும் அரிய வாய்ப்பு அமைந்தது.

இந்தக் கருந்தலை வெள்ளை அரிவாள் மூக்கன் (black-necked ibises or Oriental White Ibis or Indian White Ibis or Black Necked Ibis – Threskiornis melanocephalus) ஒரு நீக்கித்தான் குட்டியைத் (Olive Keelback – Atretium schistosum) தன் அலகால் பற்றித் தூக்கியது. பாம்பின் தலையையே பற்றித்தூக்கியது. தூக்கிப் பின்னர் விட்டு விடுகிறது. பின்னர் தூக்கி தலையைச் சிலுப்பிவிட்டு, மீண்டும் விட்டுவிடுகிறது. விழுங்குவது போன்றே பல முறை வினைசெய்து, விழுங்காது கீழே போட்டுக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 20 முறையேனும் பிடித்தும் விட்டும், சில நிமிடங்களின் போராட்டத்திற்குப் பின் தன் வாயினும் தொண்டையினும் பெரிய பாம்பினை எளிதாக விழுங்கியது.

வியப்பு நீங்கும் முன்னமே, 3 நிமிடங்கள் கழித்து முந்தைய பாம்பினும் சற்றே சிறிதான இன்னொரு பாம்பையும் [checkered keelback (Fowlea piscator)] விழுங்கியது. உத்தி அதே. ஆனால், 2 பாம்புகளை விழுங்கிய மகிழ்வில் ஒய்யாரமாக நடந்து சென்றது, அடுத்த இரையைத் தேடி…

Leave a Reply