FEATUREDLatestNature

உண்ணிச் செடி Lantana Camara

Spread the love

Lantana Camara – உண்ணிச் செடி.

Calvin Jose

1800களில் ஆங்கிலேயர்களால் அழகுச் செடியாக கொண்டுவரப்பட்டு இந்தியாவில் நுழைந்து இன்றுவரை நமது காடுகளை மெல்ல மெல்ல தின்று தீர்க்கும் ஓர் புதர் வகை செடி.

எரித்தால் அசுர வளர்ச்சி, விட்டுவிட்டால் அனைத்தையும் விழுங்கும் எழுச்சி என இந்த செடி கொடி நாட்டி விட்டது. இதனை அழிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கடைசியில் தோல்வியே மிஞ்சி இருக்கிறது. எனினும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

 

வளமுள்ள காடயினும் சரி இவை பரவ ஆரம்பித்தால் இதன் கொடிய விளைவுகளில் இருந்து மீள்வது மிகக் கடினம். 2 முதல் 4 மீட்டர் உயரம் வரை வளரும். படர தோதான இடங்களில் மற்ற மரங்கள், செடிகள் மேல் கொடி போல மேலேறி வளர்வதை பார்த்திருக்கிறேன். அடர்ந்த நெருக்கமான கிளைகளாக, கிடைத்த அத்தனை இடத்தையும் அபகரித்துக்கொள்ளும். இது வளரும் இடத்தில் புல்லோ, மற்ற செடிகளோ வளர்வது மிக கடினம். நடக்காது என்றே சொல்லலாம். இதனை வன விலங்குகள் உண்ணாது. மீறி ஓரளவுக்கு மேல் உண்டால் விஷம் என்றே குறிப்புகள் இருக்கின்றன. இதன் பழங்களை ஒரு சில பறவைகள் உண்ணும். இந்த செடியால் எந்தப் பயனும் கிடையாது.

காடு முழுவதும் பரவி, விலங்குகள் நடமாடும் வழிகளை குறுக்கி, புல் வளர்ச்சியை தடுத்து, காடுகளின் இயற்கையான சூழ்நிலைகளை கெடுத்து, தாவர உண்ணிகளின் பெருக்கத்தை சரிக்கும். குறைந்த எண்ணிக்கையில் தாவர உண்ணிகள் இருந்தால் பெரும்பூனைகள் இரை தேடிப்பிடிப்பது சவாலான காரியமாக மாறும். அவைகளின் பெருக்கமும் தடைபடும். இது போன்ற இயற்கை சமன்கள் உடையும் போது பல இன்னல்கள் உண்டாகும்.

200 ஆண்டுகள் இங்கிருப்பதால் அதனை நமது சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டு வேகமாக காடுகள், ஊர்ப்புறங்கள், மலைப்பகுதிகளில் என பல சுற்றுச்சூழலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. கவனிக்காமல் விட்டால் மொத்த பரப்பளவையும் ஆக்கிரமித்து நிலத்தை பாழ்படுத்தி, அழித்து விடும்.

பல இடங்களில் வனத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த உண்ணிச் செடியை வேரறுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இது அவர்கள் வேலை என்று மட்டும் எண்ணாமல் இதைப் பற்றி அறிந்து கொள்வதும் ஒரு வகையில் இந்த உண்ணிச் செடிக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்திற்கும், முயற்சிகளுக்கும் உதவும்.

இது ஒரு சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தவறுகளோ, பிழைகளோ தெரியப்படுத்தவும். நன்றி.

படத்தில் தெரியும் பூக்கள் உண்ணி செடியினுடையது. ஒரு மலையின் பெரும் பகுதியை ஊடுருவி வளர்ந்திருக்கிறது.

பட்டாம்பூச்சிகளின் விருப்ப பூ, குருவிகளின் புகலிடம், விலங்குகள் மறைந்து கொள்ள உதவும் என சாக்கு போக்கு சொல்லாமல் இதனை முற்றிலும் நீக்க முயற்சி எடுங்கள், முயற்சிகளுக்கு தோள் கொடுங்கள். நம்முடைய நாட்டு மரங்களும் செடிகளும் புற்களும் மிகுதியான அளவில் இருந்தால் அனைத்து உயிரங்களுக்கும் வாழ தகுந்த புகலிடமாகும். அதுவே சரியும் கூட.

Calvin Jose

Leave a Reply